23/09/2021 (212)
வள்ளுவப் பெருமானுக்கு சவாலா என்றவாறே நம்மாளு நுழைந்தார். ஆசிரியரும் உடன் வந்தார்.
பில்லியன் (billion) என்றால் நூறு கோடி. இந்த பில்லியன் என்ற வார்த்தை பதினாறாம் நூற்றாண்டில் வந்ததாக ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி (Oxford English Dictionary) தெரிவிக்கிறது.
நம்மாளு: அற்புதம், அற்புதம்
ஆசிரியர்: பரவாயில்லையே. எப்படி கண்டுபிடித்தாய்? பில்லியனுக்கு தமிழ் வார்த்தைதான் அற்புதம்! அது மட்டுமல்ல அதற்கு மேலும் எண்கள் புழக்கத்தில் இருந்ததாக சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. பில்லியனுக்கு மற்றுமோர் தமிழ் பெயர் தொள்ளுன்.
நம்மாளு: துப்பறியும் சாம்பு போல மேலே விட்டத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
ஆசிரியரே தொடர்ந்தார்.
சிலர் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியே சீரழிப்பர். சிரித்து, சிரித்து உண்மையிலேயே நம்மை சிறைக்கும் அனுப்பலாம். அப்படி இருக்கும் வகையினர் உண்டு. இவர்களை நம் வள்ளுவப் பெருந்தகை நகைவகையினர் என்கிறார்.
நம்மாளு: வகை, வகையா வழி, இல்லை இல்லை குழி வைச்சு இருப்பாங்க போல!
அந்த மாதிரி வகையினர் நட்பைக் காட்டிலும் நம்மை நேரிடையாக எதிர்க்கும், அவமதிக்கும் பகைவரால் நமக்கு நன்மை உண்டு. அதற்கு ஒரு அளவுகோல் வைக்கிறார் நம் பேராசான். பத்து கோடிக்கு மேல் நன்மை உண்டாம்!
நம்மாளு: மைண்ட் வாய்ஸ். ம்ம்..(நாம் மானத்தினால் பெருமை கொண்டாலும். அவமானத்தினால் தான் எழுகிறோம். எங்கெல்லாம் நாம் அவமானப் படுத்தப்படுகிறோமோ அங்கே நாம் வளர நீர் உற்றப்படுகிறது.)
சரி நாம குறளுக்கு வருவோம். தீ நட்பு என்ற அதிகாரத்தில் இருந்து:
“நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.” --- குறள் 817; அதிகாரம் – தீ நட்பு (82)
நகைவகைய ராகிய நட்பின் = பல வகையாக நம்மை சிரித்து மயக்கும் நண்பர்களைவிட; பகைவரால் பத்தடுத்த கோடி உறும் = கண்ணுக்குத் தெரியும் பகைவரால் நமக்கு பத்து கோடிக்கும் மேல் நன்மை உண்டு
பகைவரையும் மதிப்போம்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன், உங்கள் மதிவாணன்
Kommentarer