15/05/2023 (802)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
நண்பர்களுக்கு உதவுவது முக்கியம். அதைவிட முக்கியம் என்ன?
இந்தக் கேள்விக்கு ஒரு வித்தியாசமான பதிலைத் தருகிறார் நம் பேராசான்.
அதாவது, நம்முடனும், பகைவருடனும் ஒட்டாமல் இருக்கிறானே அவனை நம்மோடு விரைந்து சேர்த்துக் கொள்வது முக்கியம் என்கிறார்.
தம்பி, இது போர்க்காலம்.
வினை என்றாலே போர்தான் இந்த அதிகாரத்தில்! என்கிறார் நம் பேராசான்.
அதாவது, இவர்கள் எல்லாரும் விலகி இருக்கிறார்கள் என்பது நம் பகைக்குத் தெரிவதற்கு முன் விலகி இருப்பவர்களைச் சேர்த்துக் கொண்டுவிடு.
நண்பன் என்பவன் அதனைப் புரிந்து கொள்வான் கலங்காதே. அதனால், சீக்கிரம், சீக்கிரம் விரைந்து சேர்த்துக் கொள். என்கிறார்.
“நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.” --- குறள் 679; அதிகாரம் – வினை செயல்வகை
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே = நம்முடன் பயனிக்கும் நண்பர்களுக்குச் சிறப்பு செய்வது முக்கியம் என்றாலும் அதனைவிட விரைந்து செய்ய வேண்டியது; ஒட்டாரை ஒட்டிக் கொளல் = நம்முடனும் பகைவருடனும் ஒட்டாமல் விலகி இருக்கிறார்களே அவர்களையெல்லாம் நம் பக்கம் இழுத்து நம் நண்பர்கள் ஆக்கிக் கொள்ளுதல்.
நம்முடன் பயனிக்கும் நண்பர்களுக்குச் சிறப்பு செய்வது முக்கியம் என்றாலும் அதனைவிட விரைந்து செய்ய வேண்டியது, நம்முடனும் பகைவருடனும் ஒட்டாமல் விலகி இருக்கிறார்களே அவர்களையெல்லாம் நம் பக்கம் இழுத்து நம் நண்பர்கள் ஆக்கிக் கொள்ளுதல்.
அப்படி முடியவில்லை என்றால், அவர்கள் பகைவருடன் போய் சேராமல் தடுத்தாலும் நன்றுதான். இதுவும் ஒட்டிக் கொளலில் அடங்கும்.
நம்மை ஏற்றுக்கொள்ளுமாறு செய் இல்லையென்றால், பகைக்கு எதிராக இருக்குமாறு அவர்களை குழப்பியாவதுவிடு. Convince, if not, confuse!
நாம் ஏதும் விரைந்து செய்யா விட்டால், அவர்கள் பகைவனுக்குத் துணையாகக் கூடும்! எனவே, விரைந்து விரைந்து (urgentaa, urgentaa ...)செயலாற்று தம்பி என்று அமைச்சர்களுக்குத் தெரிவிக்கிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Komentáře