04/06/2022 (463)
“பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின்…” என்ற குறளைப் பார்த்தோம். என் நண்பர் ஒருவர் கேட்டார்: ‘இது மனையாளைக் குறிக்கவே குறிக்காதா என்று? அவ்வாறில்லை. இதில் பல விதமான பெண்டீர்கள் அடங்கலாம், மனையாள் உட்பட என்றே நினைக்கிறேன். இங்கே, ‘ஏவல் செய்து ஒழுகுவது’ என்பது காம மயக்கதின் பாற்பட்டது. அதனாலேயே, அதனை எடுத்துச் சொல்கிறார் நம் பேராசான்.
இதில் யார், யார் அடங்கலாம் என்பதை அவர், அவர்கள் அனுபவத்தில் கண்டு உணர்க.
(காம மயக்கத்தால், ஆணேவல் செய்தொழுகும் பெண்டீர்களும் உள்ளார்களே! –விதி விலக்காக).
அதனால், இங்கு ‘ஏவல்’ என்ற சொல் அறத்திற்கு மாறுபட்ட செய்கைகளைச் செய்வதை மட்டும் குறிக்கின்றது. அறத்திற்கு மாறுபட்ட ஏவல்களைத் தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பு. இது நிற்க.
‘வாய்ச் சொல்’ ‘கண் துஞ்சார்’ என்றெல்லாம் பயன் படுத்துகிறோம். சொல் என்பதே வாயிலிருந்து வருவதுதான். ‘வாய்’ என்று போடாமல் ‘சொல்’ என்று போட்டாலே வாயிலிருந்து வருவதுதான் என்று நமக்கு விளங்கிவிடும். அது போல ‘துஞ்சுவது’ என்பது உறங்குவது என்று பொருள். கண்ணை மூடித்தான் உறங்கப் போகிறோம். ‘கண்’ என்ற சொல் இல்லாமலே நமக்கு பொருள் விளங்கிவிடும் அல்லவா? ஆனால், இது போன்று பயன் படுத்துவது இலக்கியங்களுக்கு அழகு சேர்க்கும்.
இது போன்று அழகு படுத்துவது “வேண்டாது கூறியது” என்ற இலக்கணத்தின் அடிப்படையில் என்கிறார்கள். அது போன்றே, ‘நாணுடைப் பெண்’ என்பதும்! “பெண்” என்றாலே எப்போதும் அறத்தின்பாற் நிற்பவள். வெட்கத்தைவிட்டு செயல்களச் செய்யமாட்டாள் என்றுதான் பொருள்.
ஆகையால், ‘நாணுடைப் பெண்’ என்பதும் வேண்டாது கூறியது. அது எதனால் தருவிக்கப்பட்டது என்றால் அந்த ஆண் மகன் மானத்தை விட்டு தவறான காரியங்களைச் செய்வதால் அவனை இடித்துரைக்க வருவிக்கப் பட்டதாம்.
பெண்ணின் காலைச் சுற்றி சுற்றி வருபவன் எதற்கும் உதவமாட்டானாம். தன்னை நாடி வரும் நண்பர்களுக்கு உதவ மாட்டானாம், அறச்செயல்களைச் செய்ய மாட்டானாம்.
“நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.” --- குறள் 908; அதிகாரம் – பெண்வழிச் சேறல்.
நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் = அழகான பெண்ணின் அநியாய விருப்புகளை கேட்டுச் செயல்படுபவன்; நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் = நண்பர்களுக்கு உதவ மாட்டான்; நல்ல செயல்களைச் செய்யவும் அவனுக்கு நேரம் இருக்காது.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments