01/12/2023 (1000)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே …
நம்மாளு: ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் …
அண்ணே, இந்தப் பாட்டைக் கூடப் பாடலாம் இன்றைக்கு! எனக்குப் புரியுது நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் என்று! என்ன இன்றைக்கு ஆயிரமாவது பதிவு அதானே! இதுவரைக்கும் தொடர்ந்துவரும் நம் நண்பர்களைதாம் பாராட்டணும்.
ஆமாம் தம்பி. அனைவர்க்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்ம்ம்…
(என் குருமார்களில் ஒருவரான ஹஜரத் வருகிறார்)
வணக்கம் ஹஜரத்.
ஹஜரத்: இதெல்லம் கரீக்டா சொல்லுங்க. நான் என்ன சொல்லிக்கிறேன் உங்களுக்கு? அவசரம், ஆச்சரியம், கோபம் இந்த மூணும் ஹராம்முன்னு சொல்லிகிறேன். அதை உட்டுட்டு முதுவை சொறிஞ்சுகீறீங்க! குறள்ள தன்னைத்தான் வியவற்கன்னு சொல்லிகீதா இல்லையா? உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தி வராதா, எங்கிட்டே திட்டு வாங்காம இருக்க முடியாது. போய், வேலையைப் பாருங்க.
நான்: சரி. (அதற்கு மேல் அவரிடம் பேசக் கூடாது! பேசினால் என்ன ஆகும் என்று கேட்கிறீர்களா … அனுபவம் பேசும் அவ்வளவுதான்.)
ஹஜரத் என் குருமார்களில் மிக முக்கியமானவர். அது கொஞ்சம் இரகசியமான உறவு. அது அப்படியே இருக்கட்டும். நாம் இன்றைய குறளுக்கு வருவோம்.
நம்மாளு: ஹராம்ன்னா?
ஹராம் என்றால் விலக்கப்பட வேண்டியன. இது நிற்க.
குறள் 234 இல் புத்தேள் உலகம் புலவரைப் போற்றாது என்றார். அதனைத் தொடர்ந்து சாகா வரம் வேண்டுமா என்று கேட்கிறார் குறள் 235 இல்! அப்படியென்றால் நீங்கள் வித்தகர்களாக இருக்க வேண்டும் என்கிறார்.
சரி, அப்படி வித்தகராக இருந்தால்?
கெடுவது கேடு என்று நமக்குத் தெரியும். ஆனால், அந்தக் கேடு இருக்கிறதே கேடு அதுவும் பெருக்கத்தைத் தருமாம். அதைவிட சாக்காடு என்ற மறைதல் இருக்கிறதே அது உங்களை மறையாமல் செய்யுமாம்!
எதில் வித்தகர்களாக இருக்க வேண்டும்? அதாங்க, ஈதல் இசை பட வாழ்தல் இந்த இரண்டிலும்தாம். காண்க 28/06/2021.
வருந்து+அம் = வருத்தம்; பொருந்து+அம் = பொருத்தம்; நந்து + அம் = நத்தம்.
நந்துதல் என்றால் என்னவென்று நாம் முன்பு ஒரு முறை சிந்தித்துள்ளோம். காண்க 06/07/2023. நந்துதல் நத்தம் என்றாகி பெருக்கம், ஆக்கம், வளர்ச்சி என்று பொருள்படும்.
நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. – 235; - புகழ்
கேடு நத்தம் போல் ஆம் = அழிவு ஆக்கம் போல ஆகுமாம்; சாக்காடு உளதாகும் ஆம் = மறைதலும் நிலைத்து நிற்றல் போல ஆகுமாம்; வித்தகர்க்கு அல்லால் அரிது = ஈதல் மற்றும் இசைபட வாழ்தல் என்னும் வித்தையில் கை தேர்ந்தவர்களைத் தவிர மற்ற அனைவர்க்கும் அவை மிகவும் கடினம்.
அழிவு ஆக்கம் போல ஆகுமாம். மறைதலும் நிலைத்து நிற்றலாகுமாம். இவை, ஈதல் மற்றும் இசைபட வாழ்தல் என்னும் வித்தையில் கை தேர்ந்தவர்களைத் தவிர மற்ற அனைவர்க்கும் மிகவும் கடினம்.
நல்லவன் கையில் நாணயமிருந்தால்
நாலுபேருக்குச் சாதகம் - அது
பொல்லாதவனின் பையிலிருந்தால்
எல்லா உயிர்க்கும் பாதகம்.
இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இருந்தும் இறவாதிருக்கின்றான் … யார் ஜம்புலிங்கம் (1972), இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் அவர்களின் குரலில்.
இறந்தும் இறவாதிருக்கின்றான்… சாகா வழி என்கிறார்களே அதுதான் இது!
சாகா வித்தையில் வித்தகர் ஆவோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Kommentare