top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

நன்றிக்கு வித்தாகும் ... 138, 137

19/10/2023 (957)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

செயல்கள் பழக்கமாகும்; பழக்கம் வழக்கமாகும்; வழக்கம் ஒழுங்காகும்; ஒழுங்கு ஒழுக்கமாகும்.


இயற்கையின் ஒழுங்கு எப்போதும் மாறுபடாமல் ஒழுகிக் கொண்டே இருப்பது. இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது இந்த ஒழுங்கினைத்தான். அது தன்மட்டில் ஒரே வேகத்தில் இயங்கிக் கொண்டே இருக்கிறது என்பதால் நம்மால் “சந்திராயான்” போன்ற திட்டங்களைத் தீட்ட முடிகின்றன. அதன் விருப்பத்திற்கு இந்த இயற்கை இயங்கினால் நம்மால் ஒன்றுமே செய்யமுடியாது.


ஒழுக்கம் இருவகைப்படும். அவையாவன: நல்லொழுக்கம், தீயொழுக்கம்.


ஆமாம், தீயச் செயல்களையும் ஒழுங்காகவும் ஒழுக்கமாகவும் அஃதாவது இடைவிடாமலும் செய்வார்கள்! வெற்றி பெறுவார்களா என்றால் பொருள் வெற்றியை பெறவும்கூடும்! இப்படியும் நிறுவனங்கள் இருக்கத்தானேச் செய்கின்றன. செய்வதெல்லாம் தப்பாக இருப்பினும் ஆங்கே, ஒழுங்கு மட்டும் கட்டாயம் ஒழுகப்படும்!


அந்தத் தீய ஒழுக்கங்கள் என்றும் துன்பத்தைத் தருவன என்கிறார் நம் பேராசான்.


நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பைத் தரும்.” --- குறள் 138; அதிகாரம் – ஒழுக்கமுடைமை


நன்றிக்கு = நன்மைக்கு; வித்தாகும் நல்லொழுக்கம் = விதை போன்றது நல்லொழுக்கம்; தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும் = தீய ஒழுக்கம் காலத்திற்கும் துன்பத்தைத் தரும், காலம் கடந்தும் துன்பத்தைத் தரும்.


நன்மைக்கு விதை போன்றது; நன்மைகளை விளைவிப்பது நல்லொழுக்கம். தீய ஒழுக்கம் காலத்திற்கும் துன்பத்தைத் தரும்; காலம் கடந்தும் துன்பத்தைத் தரும்.


இந்தக் கருத்தை இன்னும் சுருக்கி: நல் ஒழுக்கத்தைக் கடைபிடிக்கிறீர்களா, இந்தாங்க பிடிங்க, உயர்வு, மேன்மை எல்லாவற்றையும்!

நல் ஒழுக்கத்தில் இருந்து தவறுகிறீர்களா, எண்ணிப் பார்க்கமுடியாப் பெரும் பழி வந்து சேரும் என்கிறார்.


ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.” --- குறள் 137; அதிகாரம் – ஒழுக்கமுடைமை


ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் = நல் ஒழுக்கத்தால் உயர்வினை அடையலாம்; இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி = அவ்வாறில்லாமல், ஒழுக்கத்தில் இருந்து வழுவி தீ ஒழுக்கத்தைப் பயின்றால் நினைத்துப் பார்க்கமுடியாத பெரும் பழிக்கு ஆளாகலாம்.


நல் ஒழுக்கத்தால் உயர்வினை அடையலாம்; அவ்வாறில்லாமல், நல் ஒழுக்கத்தில் இருந்து வழுவி, தீ ஒழுக்கத்தைப் பயின்றால் நினைத்துப் பார்க்கமுடியாத பெரும் பழிக்கு ஆளாகலாம்.


ஒழுக்கம், ஒழுக்கம் என்று சொல்லிக் கொண்டு வந்தோமே அது முதலில் எங்கிருந்து வெளிப்படும் என்பதைச் சொல்லவில்லையே என்ற எண்ணம் நம் பேராசானுக்கு வந்துவிட்டது. அதனைத் தெளிவுபடுத்துகிறார். அது மட்டுமல்ல, ஒழுக்கம் என்பதற்கு ஒரு சிறிய குறிப்பையும் தொடர்ந்து தருகிறார்.


நாளைத் தொடர்வோம்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Comentários


Post: Blog2_Post
bottom of page