top of page
Search

நயந்தவர்க்கு நல்காமை ... 1181, 1182, 01/03/2024

01/03/2024 (1091)

அன்பிற்கினியவர்களுக்கு:

பசலையைக் குறித்து முன்பு நாம் சிந்தித்துள்ளோம். கவி காளமேகப் பெருமானின் பாடலைப் பார்த்துள்ளோம். காண்க 18/09/2021.  பசலை என்பது உண்மையா? அறிவியல் உலகம் அதனை ஏற்கிறதா என்பதனையும் நாம் பார்த்துள்ளோம். காண்க 19/09/2021. பசலை என்பது ஒரு மன நோய். காண்க 23/02/2022.

 

கண் விதுப்பு அழிதல் அதிகாரத்தைத் தொடர்ந்து பசப்புறு பருவரல் என்னும் அதிகாரத்தை அமைத்துள்ளார். கண்கள் இங்கும் அங்கும் அவனைத் தேடித் தாம்பட்டபாட்டை விளக்கியவர், அடுத்து உடலில் நிகழும் மாற்றங்களைச் சொல்ல பசப்புற்ற பருவரலைச் சொல்கிறார். பருவரல் என்றால் வருத்தம்.

 

பசப்புறு பருவரல் என்றால் பசலை நோய் வந்ததனால் பெற்ற வருத்தம் என்று பொருள்.

 

அவன் எப்படியோ அவளின் சம்மதத்துடன் கிளம்பிவிடுகிறான். நாள்கள் யுகமாக கழிகின்றன. அவளுக்குப் பசலை பிடிக்கிறது. அவரை அப்போது தடுத்திருக்காமல் இப்போது என் நிலையை யாரிடம் சொல்லிப் புலம்புவேன்? என்கிறாள்.

 

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்

பண்பியார்க் குரைக்கோ பிற. - 1181; - பசப்புறு பருவரல்

 

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் = என்னைக் கொஞ்சி மேலும் கெஞ்சி எப்படியோ என் மனத்தை மாற்றியவர்க்கு, என் விருப்பத்திற்கு மாறாக என் வாயாலேயே அவரைப்  போய்விட்டு வருமாறு சொன்னேன்;

பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ = இப்போது என் உடலில் பசலை படர்ந்திருப்பதனை யார்க்குச் சொல்வேன்?; பிற - அசைச் சொல் - பொருளில்லை.

 

என்னைக் கொஞ்சி, மேலும் கெஞ்சி, எப்படியோ என் மனத்தை மாற்றியவர்க்கு, என் விருப்பத்திற்கு மாறாக என் வாயாலேயே அவரைப்  போய்விட்டு வருமாறு சொன்னேன். இப்போது என் உடலில் பசலை படர்ந்திருப்பதனை யார்க்குச் சொல்வேன்?

நயந்தவர் = நன்றாகப் பேசி ஏமாற்றியவர்; நல்காமை = அவர் கேட்டதனைக் கொடுக்காமல் இருப்பது. நல்காமை நேர்ந்தேன் = அவர் கேட்ட பிரிவதனை மறுக்காமல் போகவிட்டு விட்டேன்!

 

ஊருக்கு உதவிடும் கேணியில் பாசி படர்ந்திருக்கும். தண்ணீரை மொள்ளும்போது, அந்தப் பாசி அகலும். நாம் விலகினால் மீண்டும் அந்தப் பாசி படர்ந்து கொள்ளும்! அதைப் போல அவர் என்னை அள்ளி அள்ளிப் பருகினால் இந்தப் பசலை விலகும். அவர் பிரிந்தாலோ, ஐயகோ, அது என் மேல் படர்ந்து பயமுறுத்தும்.

 

இது பரணர் பெருமானின் கற்பனை. குறுந்தொகையில் இவ்வாறு பாடுகிறார்:

 

ஊருண் கேணி யுண்டுறைத் தொக்க

பாசி யற்றே பசலை காதலர்

தொடுவுழித் தொடுவுழி நீங்கி

விடுவுழி விடுவுழிப் பரத்த லானே. - பரணர்; - குறுந்தொகை

 

உட்கார்ந்து அறை (Room) போட்டு யோசிச்சிருபார்போல பரணர் பெருமான்!

 

மீண்டும் அவளிடம் செல்வோம்.

 

தப்பு என்னுடையதுதான்! என்கிறாள் அவள். ஆனால், இந்தப் பசலை என் மீது படர்கிறதே  அது எப்படி படர்கிறது தெரியுமா?

 

அவர் என் மேல் படர்வதனைப் போலவே இதுவும் படர்கிறது!

 

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்

மேனிமேல் ஊரும் பசப்பு. - 1182; - பசப்புறு பருவரல்

 

பசப்பு அவர் தந்தார் என்னும் தகையால் = இந்தப் பசலையானது, அவர் தந்தார் என்னும் பெருமையினால்;  என் மேனிமேல் இவர் தந்து ஊரும் = அவரைப் போலவே, என் உடல் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ந்து படர்கின்றன; இவர் = கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுதல்.

 

இந்தப் பசலையானது, அவர் தந்தார் என்னும் பெருமையினால், அவரைப் போலவே, என் உடல் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ந்து படர்கின்றன.

 

இந்தப் பாடலில், “இவர்” என்றால் “அவர்”, “இவர்” போன்று சுட்டுப் பொருளில் இல்லை.  

 

பத்துப் பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாத்தில் ஒரு வரி:

 

 

இரைதேர்ந்து இவரும் கொடுந்தாள் முதலையொடு . . . . 90 ஆம் அடி

 

இரையைத் தேடி ஊர்ந்து செல்லும் முதலை என்கிறார். இவரும் என்றால் ஊர்ந்து செல்லும் என்ற பொருளில் கையாள்கிறார் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார். இவர், இவர்தல் = கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ந்து/படர்ந்து/முன்னேறி.

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




 

Comments


Post: Blog2_Post
bottom of page