28/03/2024 (1118)
அன்பிற்கினியவர்களுக்கு:
பசலையைக் குறித்து நாம் பலமுறை சிந்தித்துள்ளோம்.
காண்க 18/09/2021, 19/09/2021, 23/02/2022.
பசப்புறு பருவரல் என்ற 119 ஆவது அதிகாரத்தில் இருந்த பாடல்களையும் பார்த்துள்ளோம். அதில் ஒரு பாடல் மீள்பார்வைக்காக:
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற. - 1181; - பசப்புறு பருவரல்
என்னைக் கொஞ்சி, மேலும் கெஞ்சி, எப்படியோ என் மனத்தை மாற்றியவர்க்கு, என் விருப்பத்திற்கு மாறாக என் வாயாலேயே அவரைப் போய்விட்டு வருமாறு சொன்னேன். இப்போது என் உடலில் பசலை படர்ந்திருப்பதனை யார்க்குச் சொல்வேன்?
நயந்தவர் = நன்றாகப் பேசி ஏமாற்றியவர்; நல்காமை = அவர் கேட்டதனைக் கொடுக்காமல் இருப்பது. நல்காமை நேர்ந்தேன் = அவர் கேட்ட பிரிவதனை மறுக்காமல் போகவிட்டு விட்டேன்!
இந்தப் பாடலில், தான் செய்த பெரும் தவறு அவரைப் போக விட்டதுதான் என்கிறாள்.
இப்போது, அவர் நெடுநாளாகியும் திரும்பவில்லை. அவர் திரும்ப வரும் நாளை நான் மிகவும் ஏக்கத்துடன் காத்திருப்பேன். உடலும் உள்ளமும் வருந்தியிருப்பேன் என்றுகூட அவர் சிந்திக்காமல் இருப்பாரா? என் உடலிலோ பல மாற்றங்கள் நிகழ்கின்றன.
கண் என்பது மனத்தின் கண்ணாடி. என் கண்களிலும் இப்போது பசலை படர்ந்து ஒளி இழந்து உள்ளது. என் ஆற்றாமையையும் அவரின் கொடும் மனத்தினையும் இந்தக் கண்கள் ஊரார்க்குக் காட்டிக் கொடுக்குமே என்றும் அஞ்சுகிறேன். ஓஒ… நான் என்ன செய்வேன்!
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண். – 1232; - உறுப்பு நலன் அழிதல்
பசந்து பனிவாரும் கண் = பசலை படர்ந்து ஒளி இழந்து உள்ள என் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் = என்னை நன்றாகப் பேசி ஏமாற்றியவர் செய்யும் கொடும் செயலை ஊரார்க்குத் தெளிவாகச் சொல்வது போல இருக்கின்றன!
பசலை படர்ந்து ஒளி இழந்து உள்ள என் கண்கள், என்னை நன்றாகப் பேசி ஏமாற்றியவர் செய்யும் கொடும் செயலை ஊரார்க்குத் தெளிவாகச் சொல்வது போல இருக்கின்றன!
என் நிலைமையை கண்கள் மட்டும்தானா சொல்லும், இதோ, எனது தோள்கள், ஓஒ… அவர் விரும்பி சாயந்து இன்பத்தைப் பகிர்ந்த இந்த தோள்கள், அதனைப் பறைசாற்றுவது போல அப்பொழுது பூரித்து நின்ற இந்த தோள்கள், இப்போது, வாடி வலிமையில்லாமல் மெலிந்து அல்லவா போயின!
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். – 1233; - உறுப்பு நலன் அழிதல்
தணந்தமை = நீங்கியமை, பிரிந்திருப்பது;
மணந்தநாள் வீங்கிய தோள் = அவர் என்னை மணம் முடித்துக் கூடிக் கலந்து இன்பத்தை வழங்கிய அந்த இனிய நாள்களில் பூரித்திருந்த என் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும் = அவர் இப்பொழுது என்னைப் பிரிந்திருப்பதை, அனைவர்க்கும் உரக்கச் சொல்லும் விதமாக அல்லவா மெலிந்து, பொலிவில்லாமல் இருக்கின்றன.
அவர் என்னை மணம் முடித்துக் கூடிக் கலந்து இன்பத்தை வழங்கிய அந்த இனிய நாள்களில் பூரித்திருந்த என் தோள்கள், அவர் இப்பொழுது என்னைப் பிரிந்திருப்பதை, அனைவர்க்கும் உரக்கச் சொல்லும் விதமாக அல்லவா மெலிந்து, பொலிவில்லாமல் இருக்கின்றன.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Commentaires