13/05/2024 (1164)
அன்பிற்கினியவர்களுக்கு:
நயன்தாராவைப் பற்றி பேச வெண்டும் என்று நெடுநாளைய ஆசை. இன்றைக்குப் பேசுவோம்! ஏன் பேசக் கூடாதா?
நம்மாளு: நம்ம நயன்தாராவைப் பற்றியா?
ஆமாம். நயன்தாரா என்றால் என்ன பொருள் என்று நினைக்கிறீர்கள்?
நயன் என்றால் ஒழுக்கம், நடுவு நிலைமை, இனிமை, நன்மை, பயன் என்றெல்லாம் பொருள்படும்.
தாரை என்பது பிற மொழியால் ஏற்பட்ட வடிவ மாற்றம்தான் தாரா. தாரைத் தாரையாகப் பொழிகிறது என்று கேள்விப்பட்டிருப்போம்.
சரி, நயன்தாரா என்றால் இனிமையைத் தாரைத் தாரையாகப் பொழிபவள்; ஒழுக்கத்தை ஒழுகுபவள்; நடுவு நிலைமையில் பயணிப்பவள் என்றெல்லாம் பொருள்படும். உங்களுக்கு எது நெருக்கமாக இருக்கிறதோ அதனை எடுத்துக் கொள்ளுங்கள்!
சரி, இந்த நயன் கதை எதற்கு என்கிறீர்களா?
நம் பேராசான் நயனொடுதான் குறளை ஆரம்பிக்கிறார்!
நம்மாளு: நம்ம பேராசானுக்கு நயனை அப்போதே தெரிந்திருந்ததா?
பின்னே, ஒன்றில்லை, இரண்டில்லை பத்துக் குறள்களில் நயன்தான்! தேடிப் பாருங்கள். ஆனால் ஒரு குறளில்தான் நயனொடு ஆரம்பிக்கிறார்.
நம்மாளு: ஐயனே, அது எந்தக் குறள்? அந்தக் குறளை நிச்சயம் மறக்கமாட்டேன்!
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு. - 994; - பண்புடைமை
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் = நடுவு நிலைமை தவறாது நாளும் நல்ல செயல்களைப் புரிந்து பிறர்க்குப் பயனுடையவர்களாக இருக்கும்; பண்பு பாராட்டும் உலகு = பண்பினைப் பாராட்டும் இவ்வுலகு.
நடுவு நிலைமை தவறாது நாளும் நல்ல செயல்களைப் புரிந்து பிறர்க்குப் பயனுடையவர்களாக இருக்கும் பண்பினைப் பாராட்டும் இவ்வுலகு.
இந்தக் குறளைத் தொடர்ந்துவரும் குறளை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 05/09/2021. மீள்பார்வைக்காக:
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. - 995; - பண்புடைமை
இகழ்தல் விளையாட்டாகச் செய்தாலும் தீது. உலகியலை நன்கு அறிந்தவர்களிடம், பகையையும் எண்ணிப்பார்க்கும் இனிய பண்பு இருக்கும்.
அஃதாவது, காட்சிக்கு எளியன், அன்புடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், நடுவு நிலைமை, நல்ல செயல்களால் பிறர்க்குப் பயன், பிறரை எந்த நேரத்திலும் இகழாமை, பகையுள்ளும் பண்பு பாராட்டுதல் போன்ற பண்புகளும் அந்தப் பண்புகளில் செறிவும் பண்புடைமை என்பதனை முதல் ஐந்து குறள்களின் மூலம் எடுத்துரைத்தார்.
மேலும் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments