26/04/2024 (1147)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஊழ் அதிகாரத்தில், விதி விலக்குகளைப் பட்டியலிட்டார். சில சமயம் இந்த உலகம் விசித்திரமாக இருக்கும். அறிவுடையவன் செல்வமுடையவனாக இருக்க மாட்டான்; செல்வந்தனிடம் அறிவு என்பது துளியும் இல்லாமலும் இருக்கலாம் என்றார். காண்க 11/02/2021. மீள்பார்வைக்காக:
இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. – 374; - ஊழ்
இவ்வாறு, விதி விலக்குகள் ஏற்படும்போது நிகழ்வனவற்றைப் படம் பிடிக்கிறார் நம் பேராசான் கல்லாமையில்.
கற்றறிந்தவனிடம் வறுமை வந்து ஒட்டிக் கொண்டால், அதனால் ஒருவர்க்கும் தீங்கு நிகழாது. தன் அறிவு அவனுக்கு வழிகாட்ட அந்த வறுமையிலிருந்து விடுபடுவான். அந்த வறுமை விளைவிக்கும் துன்பம் கடந்து செல்லக் கூடியதாகத்தான் இருக்கும்.
அதே சமயம், கல்லாதவனிடம் செல்வம் அளவிற்கு அதிகமாகச் சேர்ந்துவிட்டால், அந்தச் செல்வத்தினைச் சரிவரக் கையாளத் தெரியாமல் அது அவனுக்கும் அவனைச் சுற்றியிருப்போர்க்கும் மிக அதிகமான துன்பத்தைக் கொடுக்கும்.
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. – 408; - கல்லாமை
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே = கற்றவர்களிடம் படிந்துவிட்ட வறுமை இந்த சமுதாயத்திற்கு விளைவிக்கும் துன்பத்தைவிட; கல்லார்கண் பட்ட திரு = கல்லாதவனிடம் சேர்ந்துவிட்ட செல்வம் மிக அதிகமான துன்பத்தை விளைவிக்கும்.
கற்றவர்களிடம் படிந்துவிட்ட வறுமை இந்த சமுதாயத்திற்கு விளைவிக்கும் துன்பத்தைவிட கல்லாதவனிடம் சேர்ந்துவிட்ட செல்வம் மிக அதிகமான துன்பத்தை விளைவிக்கும்.
வாய்ப்புகள் அற்ற கீழ்க் குடியில் ஒருவன் பிறந்திருந்தாலும் அவனின் முயற்சியால் கற்றவன் ஆனால் அவனுக்குக் கிடைக்கும் அனைத்துப் பெருமையும் நல் குடியில் பிறந்த கல்லாதவனுக்கு கிடைக்காது என்றார் குறள் 409 இல். காண்க 18/08/2022.
விலங்கொடு நோக்க மக்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் கல்லாதவர்களா அல்லது கற்றவர்களா என்பதனை ஆராய வேண்டும் என்று முத்தாய்ப்பாக முடிவுரை எழுதினார் கல்லாமைக்கு! காண்க 25/10/2021.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments