16/06/2024 (1198)
அன்பிற்கினியவர்களுக்கு:
தகை என்றால் அழகு, அன்பு, தகுதி, பெருமை, பொருத்தம் இவ்வாறெல்லாம் பொருள் கொள்கிறார்கள்.
நலத்தகை என்றால் நல்ல பண்புகள் பொருந்தியிருப்பவர்.
புலத்தகை என்றால்? எவ்வாறெல்லாம் ஊடல் கொள்ளலாம் என்று எண்ணங்களால் நிரம்பி இருப்பவர் என்று எடுத்துக் கொள்ளலாம். அடுத்துவரும் அதிகாரமான புலவி நுணுக்கத்தில் அவற்றை விரிப்பார்.
நீண்ட நாளைய பிரிவு. எண்ண ஓட்டங்கள் சிதறி அவர் அப்படியே போய்விட்டாரோ? அவளுடன் சிரித்துப் பேசினாரே, ஒரு வேளை அப்படியிருக்குமோ? இவ்வளவு நாள் மறந்து இருப்பதென்றால் அவர் நினைப்பதற்கு வேறு ஒருவள் கிடைத்துவிட்டாளோ? என்றெல்லாம் அவளின் பூப் போன்ற மனத்தில் புயலாக கற்பனை பேயாட்டம் போடுகின்றது.
அவன் வந்துவிட்டான். இருப்பினும் அவளுக்கு ஏற்பட்ட ஐயம் தீர்ந்தபாடில்லை. முறுக்கிக் கொண்டு நிற்கிறாள்.
அவளின் ஊடலைத் தீர்க்காமல் விட்டால் வாடிய வள்ளிக் கொடியை வேரோடு சிதைத்தால் போல என்றவர், இந்தத் தருணத்தில் அவன் செய்ய வேண்டியதனைச் சொல்கிறார்.
வேறொன்றுமில்லை, நல்ல பண்புகளை வெளிப்படுத்து என்கிறார். பணிவுடையன் இன் சொலன் ஆதல் பயனளிக்கும் என்கிறார். நான் பெரியவன் என்னும் அகங்காரத்தைக் (ego) காட்டாதே. அதுதான் உனக்கு அழகு என்றும் சொல்கிறார்.
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து. – 1305; - புலவி
பூஅன்ன கண்ணார் அகத்து புலத்தகை = உன்னவளின் பூ போன்ற நுட்பமான மனத்தில் ஏராளமான சந்தேகப் புயல்கள் நிலை கொண்டிருக்கின்றன; நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் = அவற்றை உன்னில் நிறைந்திருக்கும் நல்ல பண்புகளால் வலுவிழக்கச் செய்வது நல்லவனாக இருக்கும் உனக்கு அழகு.
உன்னவளின் பூப் போன்ற நுட்பமான மனத்தில் ஏராளமான சந்தேகப் புயல்கள் நிலை கொண்டிருக்கின்றன. அவற்றை உன்னில் நிறைந்திருக்கும் நல்ல பண்புகளால் வலுவிழக்கச் செய்வது, நல்லவனாக இருக்கும் உனக்கு அழகு.
இந்தக் குறளுக்கு அறிஞர் பெருமக்கள் பலவாறு உரை கண்டுள்ளார்கள்.
மணக்குடவர் பெருமான்: நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு ஓரழகாம், பூ வன்ன கண்ணார் மாட்டுப் புலத்தல்.
நமக்கு ஆவார்மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு. இது பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.
தோழியின் கூற்றாகச் சொல்வதாகச் சொல்கிறார்.
பரிமேலழகப் பெருமான்: தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது:-
நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது, தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே.
அஃதாவது, ஊடுவது காமத்திற்கு இன்பம் என்று அவனுக்குள்ளேயே சொல்லிக் கொள்வது போல இந்தப் பாடல் அமைந்துள்ளது என்கிறார் பரிமேலழக் பெருமான்.
பேராசிரியர் வ.சுப. மாணிக்கம்: நற்பண்பு உடைய ஆடவர்க்கு அழகு மலரன்ன மகளிரின் ஊடலை நீக்குதல்.
கவிமாமணி க. குணசேகரன்: மலர் போன்ற கண்களை உடைய தலைவிக்கு ஊடல் செய்தல், அழகுக்கு அழகு சேர்த்தது போல் ஆகும்.
இவ்வாறு, காமத்துப் பாலில் வரும் பாடல்களுக்குப் பலரும் பல்வேறு பார்வைகளில் உரை வழங்குகிறார்கள்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Commentaires