02/08/2022 (522)
குடிமை அதிகாரத்தின் முடிவாக ஒனறைச் சொல்கிறார் நம் பேராசான். உங்களுக்கு நலம் வேண்டுமா, அப்போ, பழிக்கு அஞ்சி செயல் படுங்கள். அதாவது, அற வழியில் நில்லுங்கள்.
உங்கள் குலத்திற்கே நலம் வேண்டுமா, பணிவுடன் இருங்கள். யாரிடம் என்றால் ‘யார்க்கும்’ என்கிறார்.
“நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.” --- குறள் 960; அதிகாரம் – குடிமை
நம்மாளு: ‘யார்க்கும்’ என்றால், அது எப்படி ஐயா சரியாக இருக்கும். எல்லா செயல்களிலும் அடக்கம் இருக்கலாம். ஆனால், அது எப்படி ஐயா எல்லோரிடத்திலும் பணிவு காட்ட முடியும்? நம்மால் எந்த வேலையையும் வாங்க முடியாதே?
ஆசிரியர்: ரொம்ப சரியான கேள்வி. இந்த குடிமை அதிகாரத்தின் கடைசி குறளின் விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன், இனியவைக்கூறல் (100ஆவது) அதிகாரத்தில் இருந்து ஒரு குறளைப் பார்ப்போம்.
“பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.” --- குறள் 95; அதிகாரம் – இனியவைகூறல்
மேலோட்டமாகப் பார்த்தால், இந்தக் குறளின் பொருள், பணிவுடன் இருப்பவனும், இன்சொல் பேசுபவனுமாக ஒருத்தன் இருந்தால் அதுவே அவனுக்கு அழகு. வேறு எந்த வெளி வேடமோ, மேல் பூச்சோ அவனுக்குத் தேவை இல்லை என்பதுதான்.
இங்கேதான் தம்பி, நீங்க எழுப்பின அந்த சந்தேகம் பரிமேலழகப் பெருமானுக்கும் வந்தது. அவர் எப்படி இதற்கு பொருள் சொல்கிறார் என்றால் ரொம்பவும் நுனுக்கமாக சொல்கிறார்.
‘பணிவுடையான்’ என்பதற்கு “தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய்” என்கிறார். அதாவது, நாம் எங்கெல்லாம் பணிவுடன் இருக்க வேண்டுமோ அங்கெல்லாம் பணிவுடன் இருக்க வேண்டும் என்பதை அடிக்கோடு இடுகிறார். இங்கே எல்லாரிடமும் பணிவுடன் இருக்க வேண்டும் என்று பொருள் சொல்லவில்லை!
‘இன்சொலன்’ என்பதற்கு பரிமேலழகப் பெருமான் “எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல்” என்கிறார். அதாவது, வித்தியாசம் இல்லாமல் எல்லோரிடமும் இனிய சொற்களைப் பேச வேண்டும் என்கிறார்.
இது மிகவும்ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் உரை.
இப்போ அந்த குடிமை அதிகாரத்தின் கடைசிக் குறளுக்கு வருவோம்.
எங்கெல்லாம் பணிவுடன் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு இங்கு, பரிமேலழகப் பெருமான் விரிக்கிறார்.
அவரின் உரையை அப்படியே படித்துவிடுவோம் முதலில்.
“…'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய் என்றிவர்' எல்லாரும் அடங்க 'யாரக்கும்' என்றார். பணிவு - இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின.”
“யார்க்கும்” என்பதற்கு ஒரு பட்டியல் தருகிறார். அந்தணர், சான்றோர், அருந்தவத்தோர், தம் முன்னோர், தந்தை, தாய் இவர்கள் எல்லோரும் அடங்குவார்கள் என்பதைக் குறிக்கிறது என்கிறார்.
மேலும், பணிவில் எது, எது அடங்கும் என்பதையும் விரிக்கிறார். அதாவது, பெரியோர்கள் வரும்போது இருக்கையைவிட்டு எழுந்து மரியாதை செய்தலும், அவர்கள் வரும் போது, எதிர் கொண்டு அழைத்தல் முதலான செயல்கள் அதில் அடங்கும்.
‘முதலான’ என்றால் சொன்னவைகள் மட்டுமல்லாமல் அது போன்ற மற்றவைகளும் அடங்கும் என்று பொருள். இது போன்று வரையறுப்பதை ஆங்கிலத்தில் Inclusive definition என்பார்கள்.
Meals includes rice, sambar, and rasam”. சாப்பாடில் சோறு, சாம்பார், மற்றும் ரசம் முதலானவைகள் இருக்கும் என்றால் அதில் அப்பளம், மோர், ஊறுகாய், கறிவகைகள் போன்றவைகளும் அடங்கும் என்று பொருள்.
Meals contains rice, sambar and rasam. சாப்பாடில் சோறு, சாம்பார், மேலும் ரசம் இருக்கும். அவ்வளவுதான் வேற ஒன்றும் இருக்காது என்று பொருள்.
நம்மாளு: ஐயா, நேரமாயிடுச்சு.
ஆசிரியர்: ஓஒ.. சரி சரி கிளம்புவோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios