top of page
Search

புக்கில் அமைந்தன்று ... 340,

26/01/2024 (1056)

அன்பிற்கினியவர்களுக்கு:

 

உடம்பினுள் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் இந்த உயிருக்கு ஏன் ஒரு நிரந்தர இடம் இல்லையா என்ன? என்று கேட்கிறார்.

 

இந்த வினாவின் மூலம் உயிர் நிரந்தரமானது அல்ல என்பதைச் சொல்கிறார். மறுபிறவியின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் வேறு உடலில் புகும் என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த நம்பிக்கை இல்லாதவர்களோ, உயிர் ஒரு நாள் இயற்கையில் கலக்கும் என்றும் எடுத்துக் கொள்ளலாம். நம் பேராசான் இது போன்று பொதுப்படச் சொல்வதில் கெட்டி!

 

எப்படியிருப்பினும் உயிர் நம்மிடம் நிரந்தரம் இல்லை!

 

இறை நம்பிக்கை உள்ளவர்கள், இறைவனிடம் வேண்ட வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் என்ன வேண்ட வேண்டும் என்று நம் பேராசான் சொன்னதை நாம் பார்த்துள்ளோம். இதுதான் ஞானத்தின் ஆகக் கடைசி நிலை. அறத்துப்பாலில், துறவறவியலில், அவா அறுத்தல் அதிகாரத்தில் அந்தக் குறளை அமைத்துள்ளார். காண்க 30/04/2022. மீள்பார்வைக்காக:


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும். - 362; - அவா அறுத்தல்

 

வேண்டினால் இன்னொரு பிறப்பு வேண்டாம் என்று வேண்டுங்கள். மற்றவை எல்லாம், குறிப்பாக அவாவினை அறுத்தல் என்பது, பிறப்பு வேண்டாம் என்று உண்மையாக வேண்டிக் கொண்டால் தானாகத் தோன்றும்.

 

மறுபிறப்பு இல்லை என்றாலும், இயற்கையே இறை என்றாலும், நீங்கள் மறைந்த பின் உங்களின் எச்சங்களோ, புகழோ வேண்டாம் என்று முடிவு எடுங்கள். அதுவே ஆசையை அறுத்து விடும். உங்கள் புகழைக் காலமே உறுதி செய்யும். கவலை வேண்டாம். இதுதான் கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்பதன் பொருள்.

 

உலகத்தை விட்டுப் பிரிய, அமைதியுடன் நீங்க இதுதான் வழி என்கிறார் நம் பேராசான் என்றும் பார்த்தோம்.

 

சரி, நாம் நிலையாமையின் முடிவுரைக்கு மீண்டும் வருவோம்.

 

புக்கில் அமைந்தன்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு. – 340; - நிலையாமை

 

புக்கு = இறுதியில் சென்று அடையும் இடம்; புக்கி = புதுப்பித்து, உருவாக்கி, சமைத்து;  புக்கில் = நிரந்தரமாகத் தங்கும் இடம்; துச்சம் = இழிவு, தாழ்ந்த;  துச்சில் =நிரந்தரமற்ற இடம்;

 

உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு = இந்த உடலில், இந்த நிரந்தரமற்ற இடத்தில் தங்கியிருந்த உயிர்க்கு; புக்கில் அமைந்தன்று கொல்லோ = நிரந்தரமாகத் தங்கும் இடம் ஒன்று அமையாதது ஏன்?

 

இந்த உடலில், இந்த நிரந்தரமற்ற இடத்தில் தங்கியிருந்த உயிர்க்கு, நிரந்தரமாகத் தங்கும் இடம் ஒன்று அமையாதது ஏன்?

 

இதன் பொருள்: இந்த உயிரானது தாம் பிரியும் நிலையிலும் அமைதியைப் பெறாதது ஏன் என்கிறார்.

 

புத்த பெருமானிடம் அவரின் சீடர் ஒருவர், ஐயனே, மரணத்திற்கும் முக்திக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று கேட்கிறார்.

 

மறு பிறவி இருக்கிறதா? ஆன்மா எங்கு செல்லும்? உள்ளிட்டப் பல வினாக்களுக்கு விடையளிக்க மறுத்த புத்தபிரான் மேற்கண்ட கேள்விக்குப் பதில் அளிக்கிறார்.

 

மூச்சு நிற்கும் தருவாயிலும் ஆசைகளை வைத்துக் கொண்டிருந்தால் அது மரணம். முச்சு இருக்கும்போதே அவாவினை அறுத்துவிட்டால் அதுதான் முக்தி என்கிறார். இது நமக்குப் புரிந்தால் அதுவே ஞானம்.

 

அவாவை அறுத்துவிட்டால் வாழும்போதே முக்தி, அமைதி. அவ்வளவே.

 

அப்பர் பெருமான் “புக்கில்” குறித்துப் பாடல்கள் பாடியுள்ளார். காலம் இருப்பின் சிந்திப்போம். தத்துவ நோக்கில் அமைந்த பாடல்களாகத் தோன்றுகிறது என்றார் ஆசிரியர்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page