12/11/2021 (262)
குந்தித் தின்றால் குன்றும் மாளும்.
நமக்கென்ன குறைச்சல், நாம தொட்டதெல்லாம் நல்லாத்தான் போகுது, ரொம்ப மெனக்கெட வேண்டாம்ன்னு நினைத்தால் அது சரிப்பட்டு வராதாம். ஆங்கிலத்தில், இதை complacency kills ன்னு சொல்றாங்க. Complacency யை தமிழில் ‘மிதப்பு’ ன்னு சொல்லலாம்.
என்ன பண்றது?, ஆங்கிலத்தில் சொல்லிச் சொன்னா சீக்கிரம் விளங்குவது போல இருக்கு.
மிதப்புக்கு, நம்ம பேராசான் தேர்ந்தெடுத்தச் சொல்தான் ‘பொச்சாப்பு’. பொச்சாப்பு என்றால் நாமதான் வளர்ந்துட்டோமேன்னு செய்ய வேண்டியவைகளை மறந்துபோய்விடுவது. ‘பொச்சாவாமை’ என்றால் அப்படி இல்லாமல், கண்ணும் கருத்துமாக நம்ம கடமைகளை செய்து கொண்டு இருத்தல்.
நல்லாத் தானே இருக்கோம் என்று உட்காரக் கூடாதாம். அதற்கு ‘பொச்சாவாமை’ (54) என்ற அதிகாரத்தை வைத்திருக்கார் நம்ம அய்யன்.
அந்த அதிகாரத்தில் ஒரு ‘எழுமை’ வருகிறது.
ஒரு தலைவன், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவனுக்கு உரிய கடமைகளை, புகழ் வரும் செயல்களை எல்லாக் காலத்திலும் சோர்வில்லாமல் செய்யனுமாம். அப்படி செய்யாமால், அதெல்லாம், நமக்குத் தேவையில்லை, நாமெல்லாம் யாரு? படுத்துட்டே ஜெயிப்போம்ன்னு இறுமாப்பாக இகழ்ந்துப் பேசுபவனுக்கு ‘எழுமை’யும் இல்லை என்கிறார் நம்ம பேராசான்.
எழுமை என்றால் சிறப்பு, நீண்ட காலம், ஏழு தலைமுறை, ஏழு பிறப்புன்னு எப்படி வேண்டுமானாலும் பொருள் வைத்துக்கலாம். ஆனால், கால் மேல கால் போட்டு மட்டும் உட்கார்ந்துடாதீங்க.
“புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.” --- குறள் 538; அதிகாரம் - பொச்சாவாமை
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் = மென்மேலும் புகழ் தரக்கூடிய காரியங்கள், செயல்கள் என்று சொன்னவற்றை எப்போதும் போற்றிச் செய்ய வேண்டும்; செய்யாது இகழ்ந்தார்க்கு = அப்படிச் செய்யாமல் அதை தவிர்பவர்களுக்கு, இகழ்பவர்களுக்கு; எழுமையும் இல் = வரும் காலங்களில் நண்மையும் இல்லை, சிறப்பும் இல்லை.
எழுமையும் என்று ஒரு ‘உம்’மை போட்டு இருப்பதால் வரும் காலம் மட்டுமில்லாமல் இப்பவே, காலிதான் என்பது போல இருக்கு. கவனமாக இருக்கனும். உட்கார விடமாட்டார் போல நம்ம பேராசான்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Commentaires