நன்றி, நன்றி, நன்றி.
ஏறு போல பீடு நடை எப்போது?
இல்வாழ்வென்பது இணையருடன் இணைந்தே இருப்பது. ஆகவே, ஐந்தாவது அதிகாரமான ‘இல்வாழ்க்கை’க்கு அடுத்த ஆறாவது அதிகாரமாக ‘வாழ்க்கைத் துணை நலம்’ எனும் அதிகாரத்தை அமைத்துள்ளார் வள்ளுவப்பெருந்தகை.
அதிலே ஒரு சிறப்பான குறள், குறள் 59:
“புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை.” --- குறள் 59; அதிகாரம் - வாழ்க்கைத் துணை நலம்
இகழ்வார்முன் = ஏளனமாகத் தூற்றுவார் முன்; ஏறுபோல் பீடு நடை = சிங்கம் போன்ற பெருமித நடை,; இல்லை = சாத்தியமாகாது; புகழ்புரிந்த = இல்லறத்திலே சிறந்து விளங்கும் சிறப்பை விரும்பும்; இல் இலோர்க்கு = இணையர் இல்லாதவர்கட்கு.
ஏளனமாகத் தூற்றுவார் முன், சிங்கம் போன்ற பெருமித நடை சாத்தியமாகாது; எப்போது எனில், இல்லறத்திலே சிறந்து விளங்கும் சிறப்பை விரும்பும் வகையிலே இணையர் இல்லாதவர்கட்கு.
நல்லதொரு துணை நாளும் அவசியம் என்பதை அறிவுறுத்தும் வள்ளுவப்பெருமான் அந்த உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை இன்பத்துப் பாலில் உள்ள ‘காதற் சிறப்புரைத்தல்’ என்கிற அதிகாரம் 113 ல், குறள் 1122 ல் இப்படி கூறுகிறார்:
“உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.” – குறள் 1122; அதிகாரம் - காதற் சிறப்புரைத்தல்
உடம்பும், உயிரும் எப்படி இணைந்தே இருக்குமோ அவ்வாறே இல்வாழ்வின் இணையர்களிடையே பிணைப்பு இருக்க வேண்டும் என்கிறார்.
அந்த தொடர்பும் அன்போடு இருக்க வேணும் என்கிறார் வேறோர் குறளில். தேடுவோமா?
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்.
Comments