05/08/2022 (524)
கண்ணபிரான், கர்ணனுக்கு அவன் பிறப்பை எடுத்துக்கூறி, அவன் பாண்டவர்கள் பக்கம் வந்தால் அவனுக்கு கிடைக்கவொன்னா சிறப்புகள் கிடைக்கும் என்கிறார்.
அதற்கு கர்ணன், கண்ணனை பலவாறு போற்றி மகிழ்கிறான். மாயக் கன்றைக் கொண்டு விளாமரத்தின் பழங்களை விழ வைத்தவனே, புல்லாங்குழலிசையால் மக்களை மட்டுமல்ல மாக்களையும் கட்டிப் போட்டவனே, கோவர்த்தன மலை கொண்டு பெருமழையிலிருந்து குலத்தைக் காத்தவனே என்றெல்லாம் புகழ்ந்துவிட்டு, எல்லாச் செல்வங்களயும் உடைய கோபாலா இன்று எனது பிறப்பு உணர்ந்தேன். மகிழ்ச்சி, மகிழ்ச்சி.
மிக்க நன்றி கோபாலா!
என் பிறப்பின் மர்மத்தை வெளிப்படுத்தியவரைக்கும் மிக்க நன்றி.
ஆனால், கோபாலா, இச்செய்தியால், நான் துரியோதனாதியர்களைக் கைவிட்டு, எனது என்பு உருக, அன்பு பெருக என் தம்பியர்களாகிய பாண்டவர்களிடம் நான் சென்றால்…
நான் சென்றால்?
கண்ணா, நீ உள்பட இந்த உலகம் எப்போதும் சிரிக்காதா? என்று கண்ணபிரானைக் கேட்கிறான்.
“கன்றால் விளவின் கனியுகுத்துங் கழையானிரையின் கணமழைத்துங்
குன்றான் மழையின் குலந்தடுத்துங் குலவுஞ் செல்வக்கோபாலா
இன்றாலெனது பிறப்புணர்ந்தேனென்று என்புருகி எம்பியர்பாற்
சென்றால் என்னை நீயறியச் செகத்தார் என்றுஞ்சிரியாரோ.”
--- பாடல் 221, கிருட்டிணன் தூது சருக்கம், வில்லிபாரதம்
இதுதான் ‘இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல்’ என்று நேற்று பார்த்தோமே அதற்கு உதாரணம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments