23/08/2021 (181)
கற்பு என்றால் என்ன? அது பெண்களுக்கு மட்டும் தானா? இல்லை, பெண்களை மட்டம் தட்டத்தானா? பெண்ணை உடமையாகவும் அடிமையாகவும் வைக்க வந்த ஒரு கருத்தியலா? ஆண்களுக்குத் தேவையில்லையா? வள்ளுவப் பெருமானும் அதற்கு விலக்கில்லையா? இப்படி பல கேள்விகள் எழுவது தவிர்க்கமுடியாததுதான் இன்றைய கால கட்டத்தில்.
பெண்ணின் பெருந்தக்க யாவுள? ஒருத்தனுக்கு கிடைக்கும் பொருள்களுள் மனைவியைப் போல ஒன்றுமில்லைன்னு சொல்லும் போது நம் பேராசான் பெண்ணை ஒரு பொருள் ஆக்கிவிட்டாரா? பெண்ணடிமையை பாரட்டுபவர்தானா நம் பேராசான்? ஆணாதிக்கத்திலிருந்து அவர் விடுபடலையா? நாம என்னவோ நினைச்சோம் நம்ம வள்ளுவப் பெருந்தகையைப்பற்றி, அவரும் கடைசியிலே அவ்வளவுதானா?… ம்ம்
இப்படி பல எண்ணங்கள் அலை அடிக்க, ஆசிரியரை அனுகினேன்.
தம்பி, ‘பிறனில் விழையாமை’ என்று ஒரு அதிகாரம் (அதிகாரம் 15). அதிலே, நம் பேராசான் ‘பேராண்மை’ என்ற நிகரான ஒரு கருத்தியலை வைக்கிறார். வைப்பது மட்டுமல்ல, அதில் இருந்து தவறுபவனை முட்டாள், பேதை, உருப்படாதவன் என்றெல்லாம் கடிகிறார். ஆனால், அதே கற்பு எனும் கருத்தியிலைப் பேசும் போது மென்மையான சொல்லாடலையே பயன்படுத்துகிறார்.
கற்பு என்றால் என்னவென்று சொல்லும்போது அது திண்மை என்கிறார். திண்மை என்றால் மன உறுதி. கற்பாவது காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம் என்கிறார். அது அனைவருக்குமே பொது என்கிறார். கற்பின் சிறப்பைக் கூறும்போது அது ஒரு ஒப்பு நோக்கும் அடிப்படையில் அன்று. இல்லறத்திற்கு பொருள் சேர்ப்பவள், பெருமை சேர்ப்பவள், அவள் இல்லையென்றால் யாராலும் எந்த அறங்களும் செய்ய இயலாது என்றெல்லாம் கூறியுள்ளதை நினைவில் கொள்ளவேண்டும். பொருள் என்றால் அதன் பொருள் பொருள் அன்று. It is not an object; it means the ‘meaning’. Meaning of Life! இப்படி தமிழிலே சொன்னா உங்களுக்கு ஈஸியா புரியலாம்!
சரி, நாம குறளுக்கு வருவோம்:
“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்.” --- குறள் 54; அதிகாரம் – வாழ்க்கைத்துணை நலம்
பெண்ணின் பெருந்தக்க யாவுள = நல்ல இல்லாள் அமையப்பெற்ற வாழ்க்கையைப் போன்று பொருள் பொதிந்த வாழ்க்கை எங்கே இருக்கு ஒருவனுக்கு? கற்பென்னும்திண்மை உண்டாகப் பெறின் = அதுவும், அந்த இல்லாள் மனத்திண்மையோடு அமைந்துவிடுவாளாயின்.
மகாகவி பாரதி நினைவுக்கு வந்தாலும் காலத்தின் அருமை கருதி தவிர்த்துவிட்டேன்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்… உங்கள் அன்பு மதிவாணன்.
Comments