24/02/2022 (363)
களவு வாழ்க்கையில், அதாவது தற்போதைய, காதல் வாழ்க்கையில் வெற்றி இருவகையில் நிகழும். ஒன்று, குடும்பத்தார் சம்மதத் துடன் திருமணம். மற்றொன்று, தாங்களாகவே, குடும்பத்தினரைப் பிரிந்து, திருமணம் செய்து கொள்வது.
முதல் வகைக்கு, சங்க இலக்கியங்களில் ‘அறத்தோடு நிற்றல்’ என்றும், இரண்டாவது வகைக்கு ‘உடன்போக்கு’ என்றும் குறிக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும், களவுக்கு பின் தான் கற்பு, அதாவது திருமணம் என்பது அப்படித்தான் தமிழ் இலக்கியங்களில். திருமணங்கள் எட்டு வகையாம்! மற்ற திருமணங்களுக்கு அவ்வளவு மதிப்பில்லையாம் அக்காலத்தில்.
என்ன ஆதாரம்? இலக்கியங்களில் ஏராளாமாக இருக்கின்றதாம். ஆணும், பெண்ணும் மனம் ஒப்பாமல் மணமில்லை.
சீதாவின் தந்தை ‘சுயம்வரம்’ என்று அறிவித்து வில்லை முறிப்பவர்களுக்குதான் சீதை என்று அறிவித்துவிட்டார். இதுதான் வால்மீகி பெருமானின் கதை. இராமன் வந்து வில்லை முறித்து மணம் முடிப்பது – இதுதான் மூலத்திரைக்கதை. (இராமயணம் என்றால் இராமனின் வழி என்று பொருள்.)
கம்பர் பெருமானுக்கு இதில் ஒப்புதல் இல்லை. களவினை நுழைக்க ஒரு வழியைக் கண்டு பிடிக்கிறார். அதற்காக, ஒரு நிகழ்வை உருவாக்குகிறார். அதுதான், நாமெல்லாம் அறிந்த “அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ படலம். அங்கேயே, கருத்து ஒருமித்தல் நிகழ்ந்து விடுகிறதாம்.
அப்படி அமைத்துவிட்டு கம்பபெருமான் படாத பாடு படுகிறாராம். ஏன் என்றால், அப்போ, அந்த சுயம்வரம் என்பது என்ன சும்மா ஒரு விளையாட்டுக்கா? இல்லை, சீதைக்கு இராமன்தான் வில்லை முறிப்பான் என்று தெரியுமா? யாரையும் கண்ணெடுத்து பார்க்காத இராமன் சீதையை பார்த்து இருக்கிறானா? இதையெல்லாம், மிக அழகாக சமாளிக்கிறாராம் கம்ப பெருமான். ம்ம்… என்ன செய்வது. இனிமேல்தான் தெரிந்து கொள்ளவேண்டும்.
இது நிற்க. நாம குறளுக்கு வருவோம்.
'அவன்' இப்போது தோழிக்குச் சொல்வது:
மனம் ஒப்பி அனைவரும் அறிய மணம் முடித்துள்ளோம். நான் செல்லும் இடமெல்லாம் அவள் வருவதும் சாத்தியமில்லை. அவளுக்கு என்ன நோய் என்று எனக்குத் தெரியும். அதை அவள் கண் காட்டுவதும் புரியும். அதுதான் அழகிலும் அழகு. நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கிளம்பு என்பது போல ஒரு அழகான குறள்.
“பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.” --- குறள் 1280; அதிகாரம் – குறிப்பு அறிவுறுத்தல்
கண்ணினால் காமநோய் சொல்லி இரவு = அவளின் பேசும் கண்கள் இரப்பது காம நோய்; பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப = (அதுதான்) அழகியினால் அழகுக்கு அழகு.
அப்பாடி, ஒரு மாதிரி பொருள் சொல்லிட்டேன்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
பி.கு: என்ன எல்லாம் அமைதியாக இருக்கிறீர்கள். இது அகத்திணை என்பதாலா?
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments