03/06/2022 (462)
பெண்வழிச் சேறல் என்ற அதிகாரத்திற்கு முகவுரையாக பரிமேலழகப் பெருமான் என்ன சொல்கிறார் என்றால் காம மயக்கத்தால் வருவன நேரடியான பகையாக இல்லாவிட்டாலும், பகைக்கான இலக்கணங்கள் பொருந்துவதைக் கவனிக்க வேண்டும் என்கிறார். அது என்ன பகைக்கான இலக்கணங்கள். அதாவது, முதலாவதாக, பகை நமது ஆக்கத்தை அழிக்கும், இரண்டாவதாக அழிவினைத் தரும். இந்த இரண்டும் காமத்தாலும் நிகழும் என்பதால் நம் பேராசான் பகைகளைத் தொடர்ந்து இந்த அதிகாரத்தை அமைத்துள்ளாராம்.
மணக்குடவப் பெருமான், பெண்ணின்வழிச் சேறல் என்பதை, இன்பத்தின், அதாவது சிற்றின்பத்தின், காரணமாக, மனையாள் சொல்பேச்சுக்கு அடங்கிக் கிடத்தலும், கணிகையரோடு (விலை மாதர்களோடு) களித்து இருத்தலும், கள்ளுண்டு காம மயக்கதில் இருத்தலும், சூதாடலும், நல்லது கெட்டது தெரியாம வயிறு முட்ட சாப்பிடுவதும் என ஐந்து வகையாகப் பிரிக்கிறார். அவற்றுள், முதலாவதாக “பெண்வழிச் சேறல்” என்ற 91ஆவது அதிகாரத்தை அமைத்துள்ளார் நம் பேராசான் என்கிறார். இதைத் தொடர்ந்து வரைவின் மகளிர் (92), கள்ளுண்ணாமை (93), சூது (94) என்ற வைப்பு முறைமையும் எடுத்துக் காட்டுகிறார்.
காலத்தில் முந்தியவர் மணக்குடவப் பெருமான். இவரின் காலம் பத்தாம் நூற்றாண்டு. பரிமேலழகப் பெருமானின் காலம் பதிமூன்றாம் நூற்றாண்டு.
இப்போது நாம் குறளுக்கு வருவோம்.
“பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்து.” --- குறள் 907; அதிகாரம் – பெண்வழிச் சேறல்
இங்கே இரண்டு விதமான பெண்கள் சுட்டப்படுகிறார்கள். ஒன்று ஏவல் செய்து கைக்கு அடக்கமாக ஆடவரை வைத்துக் கொள்ளும் பெண்கள். மற்றவகை அவ்வாறு இல்லாதவர்கள். முதல் ‘பெண்’ணிற்கு நாம் மனையாள், இல்லாள் என்று குறித்தோமானால், அடுத்து வரும் ‘பெண்’ணிற்கு யாரைக் குறிப்பது என்று கேள்வி எழுகின்றது. இன்னொரு மனையாளா? அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை.
பல அறிஞர்களின் உரைகளிலே மனையாள், இல்லாள் என்றே பொருள் கண்டிருக்கிறார்கள்.
ஆனால், மணக்குடவப் பெருமான், இந்த இரு வேறு பெண்களை அப்படியே எடுத்துக் கொண்டு, முதல் வகை பெண்களுக்கு ஏவல் செய்தொழுகும் ஆணைவிட, இயல்பாக இருக்கும் பெண்களே மேல் என்கிறார். இதன் மூலம் அந்த ஆண் மகன் மதிக்கப் படமாட்டான் என்கிறார்.
மணக்குடவப் பெருமானின் உரை அப்படியே:
“பெண்டிர் ஏவின தொழிலைச் செய்தொழுகும் ஆண்மையின், நாணமுடைய பெண்மையே தலைமை உடைத்தாம். இது பிறரால் மதிக்கப்படாரென்றது.”
“நாணுடைப் பெண்” என்பது ‘வேண்டாது கூறியது’ என்ற இலக்கணத்தால் வந்தது என்கிறார்கள்.
அது என்ன ‘வேண்டாது கூறியது’ இலக்கணம்? நாளை பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments