16/06/2023 (834)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
நீர் ஆதாரங்கள் இருந்தால் நாடு வளமாகவும் செழிப்பாகவும் இருக்கும். ஆங்கே, தூய்மை பேணப்படும். அதனால், நோய் நொடிகள், பிணிகள் அண்டாது. பொருள் ஈட்டிச் செல்வம் சேர்க்க வழிகளும் வாய்ப்புகளும் இருக்கும். விளைச்சல் நன்றாக இருக்கும். விளைச்சல் நன்றாக இருந்தால் மகிழ்ச்சிக்கு சொல்லவும் வேண்டுமோ? மேலும், இந்த வளங்களையெல்லாம் சரியாகப் பேண பாதுகாக்க தக்க நடவடிக்கைகளுக்கும் குறைவிருக்காது. இப்படியெல்லாம் ஒரு நாடு இருந்தால் அதனை அழகு என்று சொல்லாமல் வேறு எப்படி?
“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.” --- குறள் 738; அதிகாரம் – நாடு
பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் = பிணிகள் இல்லாதிருத்தல், செல்வம் நிறைந்திருத்தல், நல்ல விளைச்சல், மகிழ்ச்சி, பாதுகாப்பு;
இவ் ஐந்தும் நாட்டிற்கு அணி என்ப = இந்த ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு.
பிணிகள் இல்லாதிருத்தல், செல்வம் நிறைந்திருத்தல், நல்ல விளைச்சல், மகிழ்ச்சி, பாதுகாப்பு என்ற ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு.
அழகு என்று சொன்னதால் இந்த ஐந்தையும் அடைவதை ஒவ்வொரு நாடும் தனது இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஐந்தினைத்தான், 2015 இல், உலக நாடுகளின் சபை (United Nations), 17 நிலையான வளர்ச்சி இலக்குகளாக (Sustainable Development Goals) அமைத்து வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகள் அனைத்தும் முன்னேற வேண்டும் என்று முயல்கிறது. இந்த 17 இலக்குகளும் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதிலும், பெருக்குவதிலும், இயற்கையைப் பேணுவதையும் அடைப்படைகளாகக் கொண்டன.
அதாவது, நம் பேராசன் சொல்லிச் சென்றது விளங்கவே இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஒரு இடத்தில் தோண்டினால் தங்கம், வேறு இடத்தில் தோண்டினால் வைரம், சுற்றியுள்ள கடலில் மூழ்கினால் முத்துகள் இப்படி கிடைக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். நாம் அந்த நாட்டை என்ன சொல்வோம்? “நாடுன்னா அதுதாங்க நாடு” என்று சொல்வோம் இல்லையா? தங்கம், வைரம், முத்துகள் என்பன குறியீடுகள். அதாவது அள்ள அள்ளச் செல்வம் நிறைந்த நாடு!
இன்னொரு இடம். எல்லாரும் பூமியை ஆழத்தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக?
பூமிக்கடியில் எந்தக் கிழங்காவது கிடைக்காதா, தம் குழந்தைகளின் பசியைப் போக்க என்றால், அந்த இடத்தை யாராவது நாடு என்று சொல்வார்களா? அது எப்படி வாழ உகந்த நாடாக இருக்கும்?
“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு.” --- குறள் 739; அதிகாரம் – நாடு
நாடா வளத்தன நாடு என்ப = நாடாமலே, அதாவது, சிறிய முயற்சியிலேயே வளங்களை வாரி வழங்கும் நாட்டை நாடு எனலாம்;
நாட வளந்தரும் நாடு நாடு அல்ல = உடலை வருத்தி, பெரும் முயற்சிகள் எடுத்து அதற்குப் பின்தான் ஏதாவது கிடைக்கும் என்றால் அது ஒரு நாடு அல்ல.
நாடாமலே, அதாவது, சிறிய முயற்சியிலேயே வளங்களை வாரி வழங்கும் நாட்டை நாடு எனலாம். அப்படியில்லாமல், உடலை வருத்தி, பெரும் முயற்சிகள் எடுத்து அதற்குப் பின்தான் ஏதாவது கிடைக்கும் என்றால் அது ஒரு நாடு அல்ல.
வளங்கள் கொட்டிக் கிடக்கும். அதனை அடைய அரசே, தலைமையே தடையாக இருந்தால்?
அதுவும் நாடில்லையாம். முடிவுரையாகச் சொல்கிறார். அதனை நாளைப் பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments