28/05/2022 (456)
வாழ்க்கைத்துணை நலம் என்ற ஆறாவது அதிகாரத்தில் உள்ள குறள்களை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இல்லறத்துக்கு முக்கியமானதே வாழ்க்கைத்துணைதான் என்று எடுத்துச் சொல்லி பல பாடல்களை வைத்துள்ளார் நம் பேராசான்.
அந்த அதிகாரத்திலிருந்து ஒரு குறள், மீள்பார்வைக்காக – காண்க 09/03/2021 (51)
“புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை.” --- குறள் 59; அதிகாரம் - வாழ்க்கைத் துணை நலம்
ஏளனமாகத் தூற்றுவார் முன் அவர்களைப் புறந்தள்ளி, சிங்கம் போன்ற பெருமித நடை போடுவது சாத்தியமாகாது, எப்போது என்றால், இல்லறத்திலே சிறந்து விளங்கும் சிறப்பை விரும்பும் மனையாள் இல்லை என்றால் என்கிறார்.
இல்லறத்திற்கு மனையாள்தான் முதுகொலும்பு என்று அடித்துச் சொன்ன நம் பேராசான், அதுவே பகையாகவும் கூடும் என்று இடித்தும் கூறுகிறார். அந்த அதிகாரம் மிகவும் விமரிசிக்கப்படும் அதிகாரங்களுள் ஒன்று. திருக்குறளை முழுமையாக பார்க்க இயலாதக் குற்றம் அது.
ஐந்து பேர் யானையைக் கண்டு ‘யானை’ என்பது இவ்வாறுதான் இருக்கும் என்று வெவ்வேறாக உறுதிபடச் சொன்னக் கதை உங்களுக்குத் தெரியுமல்லாவா அது போல!
சரி, அது என்ன அதிகாரம் என்று கேட்கிறீர்களா, இதோ வருகிறேன். ஒருவனுக்கு எவ்வாறெல்லாம் பகை வந்து சேரும் என்பதை “உட்பகை”யிலிருந்து (89ஆவது அதிகாரம்) தொடங்கி , அடுத்ததாக “பெரியாரைப் பிழையாமை” (90ஆவது), அதனைத் தொடர்ந்து “பெண்வழிச் சேறல்” (91 ஆவது), தொடர்ந்து “வரைவின் மகளிர்” (92ஆவது), கள்ளுண்ணாமை (93 ஆவது) மற்றும் சூது (94 ஆவது) என்று முடிக்கிறார்.
இதிலே ‘பெண்வழிச் சேறல்’ என்ற அதிகாரம்தான் அதிகமாக விமரிசிக்கப் படுகிறது. அதை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு வள்ளுவப் பெருமான் எப்படி பெண்களை இவ்வளவு தாழ்த்தலாம் என்ற கேள்விகளைப் பலர் எழுப்பிக் கொண்டுள்ளார்கள்.
இந்த “பெண்வழிச் சேறல்” அதிகாரத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஒரு சாரார் தொடர் விவாதம் செய்து கொண்டுள்ளார்கள். அவர்கள் மற்ற அதிகாரங்களை ஏற்றுக் கொண்டார்களா என்ற கேள்விக்கு இன்றளவிலும் பதில் இல்லை! அவர்களோடு மல்லுக்குச் செல்வது நம் வேலையில்லை என்பதனால், நம் பேராசான் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை மட்டும் எடுத்துச் சொல்லி நாம் நகர்ந்து போவோம் என்பது எனது எண்ணம்.
‘ஆணுக்குப் பெண் அடங்கும் பெண்ணடிமைத் தன்மை, குடும்ப முன்னேற்றத்தைக் குலைக்க வல்லது: அதுபோலவே பெண்ணுக்கு ஆண் அடங்கி நடக்கும் ஆணடிமைத் தன்மையும் பொது வாழ்க்கையைக் கெடுக்க வல்லது’ --- மூதறிஞர் மு. வரதராசனார்.
இந்த அறிமுகத்தோடு நாளையிலிருந்து தொடருவோம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comentários