பழியஞ்சி பகுத்து உண்டால் இல்லறத்தானின் வாழ்வுக்கு தடை ஏதும் வாராது என்று எடுத்துரைத்த நம்பேராசான், மேலும் தொடர்கிறார். பகுத்து உண்பவனுக்கு ஒரு நாளும் பசி எனும் தீப்பிணி அணுகாது என்று ஒரு உத்திரவாதம் அளிக்கிறார். ஒரு தேர்ந்த மருத்துவன் அவனுக்கு வரும் நோயை ஒழிக்கும் திறன் இருப்பது போல பகுத்து உண்பவனுக்கும் அத்திறன் இருக்கும் என்பதை உணர்த்துகிறார்.
“பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.” --- குறள் 227; அதிகாரம் - ஈகை
பாத்தூண் = பகுத்து உண்ணும்; மரீஇ யவனைப் = பண்பைப் பயின்றவனை; பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது = நல்லொழுக்கங்களை அழிக்கும் பசி என்கின்ற கொடிய பிணி அணுகாது.
இல்லறத்தானுக்கு சக மனிதர்களுடன்பகுத்து உண்பதின் அவசியத்தை உரைத்த நம் வள்ளுவப்பெருந்தகை, துறவு நோக்கி முயல்பவனுக்கு துறவறவியலில் மேலும் விரிக்கிறார்.
அவர்களுக்கு, மாந்தகுலத்துடன் பகுத்து உண்டால் மட்டும் போதாது, பல உயிர்களுக்கும் பகுத்து அளித்து அவற்றையும் காப்பாற்றி அருள் செய்தல் தலையாய கடமை என்கிறார் கொல்லாமை (33) எனும் அதிகாரத்தில்.
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.” --- குறள் 322; அதிகாரம் – கொல்லாமை
பகுத்துண்டு பல்லுயிர்(ரும்) ஓம்புதல் = பகுத்து உண்டு ஐவகை உயிர்களையும் (ஓரறிவு முதல் ஐந்தறிவு உயிர்கள் வரை) அழிக்காமல் பாதுகாத்தல்;
நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை = துறந்தார்களுக்கு அறம் சொல்கின்ற சிறந்த பெருமக்கள் தொகுத்த அறங்களுள் தலையான அறம்
பல்லுயிரும் – முற்றும்மை ஒளிந்து இருக்கிறது. ஓம்புதல் = உயிரிழப்பு வராமல் (கொல்லாமல்) காத்தல்.
உயிரிழப்பு வாராமல் காக்கும் கடமை துறவு நோக்கி முயல்பவர்களுக்கு அவசியம் என்பதால் கொல்லாமை(33) எனும் அதிகாரத்தை துறவறவியலில் அமைத்தார்.
அது சரி, பகுத்து உண்பதை ஏன் அங்கு வைத்தார்? ஓம்புதலை மட்டும் வைத்திருக்கலாம் அல்லவா? என்ற கேள்விக்கு அறிஞர் பெருமக்கள் சொல்வது: பகுத்து உண்ணாமல் தேவைக்கு அதிகமாக சேமித்து வைப்பது என்பது பிற உயிர்களுக்கு சேர வேண்டியதை தடுப்பது போல் ஆகுமாம்! அதுவும் ஒரு வகையில் உயிர்களை கொல்வது ஆகுமாம்! ம்ம்…
மீண்டும்சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments