25/11/2023 (994)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஒப்புரவை ஒழுகினால் எங்கும் சிறப்பு என்கிறார். அது மட்டுமல்ல அதனைவிட ஒரு நல்ல செயல் எந்த உலகத்திலும் இல்லை என்று சான்றளிக்கிறார்.
நம் அறிவிற்கு எட்டியது இந்த உலகம் மட்டும்தான். அறிவிற்கு எட்டாமல் பல உலகங்கள் இருக்கலாம் என்பதை ஆன்மீக அறிஞர்கள் மட்டுமல்ல அறிவியல் வித்தகர்களும் தெரிவிக்கிறார்கள். என்ன பார்வைகள்தாம் வேறு!
பல உலகங்கள் இருக்கும் என்பதை யாரும் மறுக்கவில்லை!
நம் அறிவிற்கு எட்டாத உலகங்களை நம் ஐயன் புத்தேள் உலகம் என்கிறார். அந்த உலகங்கள் உங்கள் அறிவிற்கு எட்டி அதனுள் சென்றாலும் ஒப்புரவு போன்றதோர் நல்லதொரு செயல் இருக்க முடியாது என்கிறார். உண்மை அது தானே!
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை - இதற்கு இடம் ஒரு தடையாக இருக்க முடியுமா என்ன?
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. - 213; ஒப்புரவு அறிதல்
ஈண்டும் புத்தேள் உலகத்தும் = நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே இந்த உலகத்தில் மட்டுமென்ன, நம் அறிவிற்கும் எட்டாத உலகங்களிலும்; ஒப்புரவின் பிற நல்ல பெறலரிதே = ஒப்புரவைப் போன்றதொரு மற்ற நல்ல செயல்களைக் காண முடியாது.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே இந்த உலகத்தில் மட்டுமென்ன, நம் அறிவிற்கும் எட்டாத உலகங்களிலும் ஒப்புரவைப் போன்றதொரு மற்ற நல்ல செயல்களைக் காண முடியாது.
ஒப்புரவு என்பது உலகம் உயர்வதற்கு ஓர் வழி! ஒப்புரவு அறிந்தவனைத்தான் உயிரோடு இருக்கிறான் என்று சொல்ல இயலும். அது அறியாமல் இருக்கும் மற்றவர்களுக்கு உயிர் என்ற ஒன்று அவர்கள் உடலில் இருக்கிறதா? என்பதே சந்தேகம்தான். அவர்களைச் செத்தாருள்தாம் வைக்கவேண்டும் என்று மிகக் கடுமையாகச் சொன்னார். அந்தக் குறளை நாம் முன்பு பார்த்துள்ளோம்.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். - 214; – ஒப்புரவு அறிதல்
ஆசிரியர்: ஒப்புரவை ஒழுகாதவனைச் செத்தாருள் வைக்கலாம் என்றவர், ஒப்புரவு அறிந்தவனை மரம் என்கிறார்!
நம்மாளு: என்னங்க ஐயா, அப்படியா சொல்கிறார்? இதிலே, ஏதோ பொடி வைத்திருக்கார். அதானே ஐயா?
ஆசிரியர்: மிகவும் சரி. ஒப்புரவு அறிந்தவரை நம் பேராசான் வெறும் மரம் என்று சொல்வாரா? ஒப்புரவு அறிந்தவரின் கண்ணசைவில் செல்வம் வரும். அதனால் அனைவரும் பயன் பெறுவர். எனவே, அவரை மிகவும் கவனமாகப் பயன் மரம் என்கிறார். பயன் மரம் வினைத்தொகை. பயன் தந்த, தரும்,தரப்போகும் மரம்.
அந்த மரம் ஊரின் நடுவில் மிகவும் செழித்து, வானுற ஓங்கி வளர்ந்து நிற்கும் ஒரு மரம். அது அந்த ஊர் மக்களுக்கு வேண்டிய வளம் பல கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த மரத்தில் பறவைகளுக்கும் பஞ்சமில்லை!
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். - 216; ஒப்புரவு அறிதல்
நயனுடையான் கண்படின் செல்வம் = ஒப்புரவு ஒழுகுபவரின் எண்ண அசைவில் எழும் செல்வம் எப்படிப்பட்டது என்றால்; பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் = மக்களுக்கும் ஏனைய உயிர் இனங்களுக்கும் சுவை மிக்க பழங்களையும், பயன்களையும் எப்போதும் தந்த, தரும், தரப் போகின்ற மரமானது அந்த ஊரின் நடுவே நன்றாகப் பழுத்தும், செழித்தும் இருப்பதைப் போல.
ஒப்புரவு ஒழுகுபவரின் எண்ண அசைவில் எழும் செல்வம் எப்படிப்பட்டது என்றால் மக்களுக்கும் ஏனைய உயிர் இனங்களுக்கும் சுவை மிக்க பழங்களையும், பயன்களையும் எப்போதும் தந்த, தரும், தரப் போகின்ற மரமானது அந்த ஊரின் நடுவே நன்றாகப் பழுத்தும், செழித்தும் இருப்பதைப் போல.
நம்மாளு: ஐயா! ஒரு ஐயம். ஒப்புரவு ஒழுகுபவரின் கண்ணசைவில் செல்வம் வருமா?
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments