13/11/2021 (263)
எனதருமை நண்பர் ஏழு பற்றிய ஒரு செய்தியை பகிர்ந்திருக்கார். அது என்னன்னா, பகடைக் காய்கள் (pair of dice) இருக்கு இல்லையா, அதாங்க தாயக்கட்டைன்ன்னு சொல்கிறோமே அதுபோல, அது உருட்டும் போது ஏழு என்ற எண்தான் மிக அதிகபட்சமா வரும் வாய்ப்பு இருக்காம். எண் ஏழு – ஆறு வகையிலே வரலாமாம். மீதி எண்கள் 2-6 & 8-12 வரும் வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்குமாம். நல்லதொரு பதிவு. நன்றிகள் பல.
தமிழிலே, ஆண்களுக்கும், பெண்களுக்கும் அவர்களின் வளர்ச்சிப் பருவங்களை ஏழாகத்தான் பகுத்திருக்கிறார்கள்.
ஆண்: 1 – 12 வயது = பாலகன்; 13 – 24 = விடலை; 25 – 36 = காளை; 37 – 48 = மீளி; 49 – 60 = மறவோன்; 61 – 72 = திறவோன்; 73க்கு மேல் = முதுமகன்
பெண்: 1- 8 வயது = பேதை; 9 – 10 = பெதும்பை; 11-14 = மங்கை; 15-18 =மடந்தை; 19-24 =அரிவை; 25-29 =தெரிவை; 30க்கு மேல் = பேரிளம் பெண் (முப்பதுக்கும் மேல அவங்களுக்கு வயது கணக்கு வைக்கக்கூடாது போல!)
பூக்களுக்கும் ஏழு பருவம்தானாம், அதாவது: அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்.
சரி, நாம குறளுக்கு வருவோம். என் பேதைமையைத்தான் சொல்லனும். சொல்ல வேண்டியதை விட்டுட்டு ஏதேதோ சொல்லிட்டு இருக்கேன்.
பேதை என்றால் யார்? ‘ஏதம் கொண்டு ஊதியம் போகவிடல்’தான் பேதைமைன்னு நம்ம பேராசான் சொல்லியிருக்கார். ஏதம் என்றால் ‘சொந்த காசிலே சூனியம்’ வைத்துக் கொள்வது. ஏதம் என்றால் தீயது, தேவையில்லாதது.
“பேதைமை என்பதுஒன்று யாதுஎனின் ஏதம்கொண்டு
ஊதியம் போக விடல்.” --- குறள் 831; அதிகாரம் - பேதைமை
பேதைமை என்பதுஒன்று யாது எனின்= பேதைமை என்ற ஒன்று என்னவென்றால்; ஏதம்கொண்டு ஊதியம் போக விடல் = நமக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஆர்வத்தைச் செலுத்தி, நமக்கு பயன் தருவதை கவனிக்காமல் விடுவது.
பேதைக்கு இன்னுமொரு விளக்கம் சொல்கிறார் நம் பேராசான். பேதைகள் செய்யும் ஒரு செயலின் விளைவு ஏழு தலைமுறையையே அழுத்திடுமாம் நரகத்திலே! (ஏழு பிறப்புன்னும் பல பேரறிஞர்கள் சொல்கிறார்கள்)
“ஓருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு.” --- குறள் – 835; அதிகாரம் – பேதைமை
எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு = வரும் காலங்களில் எல்லாம் தன்னை துன்பத்தில் வீழ்த்தி அழுந்தும் நிலையை; ஓருமைச் செயல்ஆற்றும் பேதை= தன் ஒரு செயலிலே செய்யும் ஆற்றல் படைத்தவர்தான் பேதை; புக்கு = வீழ்த்தி, புகுந்து; அளறு = நரகம், துன்பம்
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
அருமையான இந்த குறள் பதிவினை, இடைவிடாமல் பதிவிட்டு, நம்மவர் அனைவருக்கும், நல்லதோர் விவரமறிய செய்விக்கிறாய் சோதரா.
.