07/08/2022 (526)
நம்மாளு: பாட்டு பாடிக் கொண்டே வருகிறார்.
“… பதவி வரும்போது பணிவும் வரவேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்
கடமை, அது கடமை…”
ஆசிரியர்: என்ன தம்பி, இன்றைய குறளுக்கு ஏற்றார் போல் பாட்டு பாடிட்டு வாரீங்க.
ரொம்ப நல்ல பாடல் இது. கவிஞர் வாலி அவர்கள் தெய்வத்தாய் எனும் திரைப்படத்திற்காக எழுதியது. 1965ல் வெளிவந்தப் படம் இது. இந்தப் படத்திற்கு வசனம் யார் எழுதினாங்க தெரியுமா, நம்ம இயக்குனர் இமயம் கே. பாலச்சந்தர்தான். படத்தை இயக்கியது மாதவன் அவர்கள்.
“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் …” (ஆசிரியர் பாட த் தொடங்கிவிட்டார்)
நம்மாளு: ஐயா, குறள், குறள், குறளைப் பார்க்கனும்…
ஆசிரியர்: ஓஒ… பாட்டு அப்படியே இழுத்துட்டு போகுது. கடமை, கடமை அதான் முக்கியம். இதோ வந்துட்டேன்.
ஆமாம் தம்பி. நாம் ஏற்கனவே ஒரு குறளைப் பார்த்து இருக்கோம். இனியவை கூறல் அதிகாரத்தில் ஐந்தாவது குறள். காண்க 02/08/2022 (522).
“பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.” --- குறள் 95; அதிகாரம் – இனியவைகூறல்
அதாவது, நாம் எங்கெல்லாம் பணிவுடன் இருக்க வேண்டுமோ அங்கெல்லாம் பணிவுடன் இருக்க வேண்டும் என்று சொன்னதைப் பார்த்தோம்.
யாரிடம் பணிவாக இருக்க வேண்டும்? என்பதற்கு குறள் 960ல் பரிமேலழகப் பெருமான் சொன்ன விளக்கத்தையும் பார்த்தோம். காண்க 02/08/2022 (522).
இந்த மானம் எனும் அதிகாரத்தில், எப்போது பணிவு ரொம்ப அவசியம் என்பதை சொல்லப் போகிறார்.
பதவி வரும்போது, அதாவது வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும்போது பணிவு அவசியம் வேண்டும் என்கிறார். இது தனி மனிதனுக்கும், குடிக்கும் இரண்டுக்குமே பொருந்துமாறு அமைந்தக் குறள்.
இன்னொன்றும் சொல்கிறார். கொஞ்சம் தளர்ச்சி வந்துவிட்டதா? அப்போதுதான் நீ இன்னும் கொஞ்சம் மிடுக்கா இருக்கனும் என்கிறார்.
“கந்தையானுலும் கசக்கிக் கட்டு”ன்னு ஒரு பழமொழி இருக்கு இல்லையா?
“பெருக்கத்து வேண்டும் பணிவு சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.” --- குறள் 963, அதிகாரம் – மானம்.
எந்த நிலையிலும், உன் நிலையில் இருந்து தாழ்ந்து, இழி நிலைக்குச் செல்லாதே என்பதுதான் கருத்து.
அப்படிச் சென்றால்?
நாளைக்குப் பார்க்கலாம் என்று நடையைக் கட்டினார் ஆசிரியர்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments