23/07/2023 (871)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
யானை பிழைத்த வேல் இனிது என்றவுடன் மிக மகிழ்ந்தார்கள் இந்தப் பக்கத்தில் இருந்தவர்கள். விரர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக அவர்களும்தான் உள்ளார்கள் என்று மனத்தளவிலே மகிழ்ந்து கொண்டு இவர்களின் தலைவனின் பெருமையை மேலும் எடுத்து வைக்கிறார்கள்.
எதிரணியினரிடம்: தோழா, போரிலே எதிர்த்து நிற்பவர்களுக்கு அஞ்சாமல் நிற்பது, அழித்தொழிப்பது பேராண்மை என்பார்கள். உண்மையில் அதுவல்ல பேராண்மை. பகைவனுக்கும் ஒரு துன்பம் நேரும்போது அவனுக்கும் உதவி செய்வது இருக்கிறதே அதுதான் கூரிய பேராண்மை. அதாவது பேராண்மையின் உச்சம். அதுதான் எம் தலைவனின் வழி!
“பேராண்மை என்ப தறுகணொன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.” --- குறள் 773; அதிகாரம் – படைச் செருக்கு
தறுகண் = அஞ்சாமை; ஊராண்மை = ஊரை ஆளுந்தன்மை = அதாவது, தேவையானவர்களுக்கு கொடுத்து உதவும் தன்மை, அவர்கள் பகைவர்களாகவே இருப்பினும்!
பேராண்மை என்பது தறுகண் = போரில் பேராண்மை என்பது அஞ்சாமை; ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்று அதன் எஃகு = அதே பகைவன் துன்பத்தில் தள்ளப்பட்டால் அவனுக்கும் தேவையானதை அளிப்பது இருக்கிறதே அதுதான் பேராண்மையின் உச்சம்.
போரில் பேராண்மை என்பது அஞ்சாமை. போரில் அதே பகைவன் துன்பத்தில் தள்ளப்பட்டால் அவனுக்கும் தேவையானதை அளிப்பது இருக்கிறதே அதுதான் பேராண்மையின் உச்சம்.
அதாவது, நம் தாக்குதலால் சீர் குலைந்துவிட்டவனை மேலும் மேலும் தாக்குவது சிறப்பல்ல என்கிறார்.
தற்காலத்தில் இந்தப் போர் முறைகள் எல்லாம் மாறிவிட்டன. பகைவர்கள் என்றால் எதை அழிக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் எல்லாவற்றையும் அழித்தொழித்துவிட வேண்டும் என்பதுதான் குறியாக இருக்கிறது.
மருத்துவமனைகள், இறைத் தலங்கள், பள்ளிக் கூடங்கள் இவைகளெல்லாம் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. சரணடைந்தப் பொது மக்கள் மீதும் கொத்தணிக் குண்டுகள் (cluster bombs) போடப்படுகின்றன. போருக்குபின் ஊரே மயானமாக மாறிப்போவதைப் பார்க்கிறோம். கொன்று புதைத்துவிட்டு அதன் மேல் நின்று கொண்டு அமைதிப் பூங்காவாக மாறிவிட்டது என்கிறார்கள். நிச்சயம் இதுவல்ல பேராண்மை என்கிறார் நம் பேராசான்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments