01/04/2023 (758)
அமைச்சனின் பொது குணங்களை இரண்டுப் பாட்டால் பட்டியலிட்டார். மேலும் தொடர்கிறார்.
அடுத்து வரப்போகும் மூன்று பாடலகள் மூலம் சிறப்பு குணங்களைச் சொல்லப் போகிறார். அதிலே இரு குறளகள், ‘வல்லது அமைச்சு’ என்று முடிகிறது.
ஒருத்தன் நமக்கு பகைவனாயிட்டான் என்றால் அவனைத் தொடுவதற்குமுன் அவனுக்குத் துணையாக யார் இருக்காங்க என்று பார்த்து அவனை பகைவன்கிட்ட இருந்து கழட்டிவிட பார்க்கனுமாம். இது தான் முதல் வேலை!
அடுத்து, அதே மாதிரி நம்ம பகைவனும் நம்ம துணைகளைப் பிரிக்க முயற்ச்சி செய்வான் இல்லையா, அதனாலே நமக்குத் துணையாக இருப்பவர்களை நன்கு கவனித்துக் கொள்ளனுமாம். அவங்களுக்கு உரிய மரியாதைக் கொடுத்து, வேற ஏதாவது தேவைகள் இருந்தால் அதையெல்லாம் சரி செய்யனுமாம். எப்படியும் எந்த இழப்பும் நம்ம பக்கம் இருக்கக்கூடாதாம். இது இரண்டாவது வேலை.
அப்புறம், நம் நண்பர்கள் சிலர், சில பல காரணங்களால், நம்மை விட்டு தள்ளி நின்று கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டறிந்து நம்முடன் இணைந்து பயணிக்க வைக்க வேண்டுமாம். இது மூன்றாவது வேலையாம்.
இந்த மாதிரி நுட்பமாக ஆராய்ந்து செய்யவல்லன்தான் அமைச்சன் என்று போற்றப்படுவானாம்.
அமைச்சர் என்றால் சாதாரணமான வேலை இல்லை போல!
சரி நாம் குறளுக்குப் போவோம்.
“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருதலும் வல்லது அமைச்சு.” --- குறள் 653; அதிகாரம் – அமைச்சு
பிரித்தலும் = ஏதோ ஒரு காரணத்தால் ஒருவனிடம் பகை மூண்டுவிட்டால், அப் பகைக்குத் துணையாக நிற்பவர்களைப் பிரித்தலும்; பேணிக் கொளலும் = நம்மவர்களை நன்றாக கவனித்து நம்முடன் தக்க வைத்துக் கொளலும்; பிரிந்தார்ப் பொருதலும் = நம்முடன் இருந்து பிரிந்து சென்று தணித்து இருப்பவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளமுடிந்தால் இணைத்துக் கொள்ளலும்; வல்லது அமைச்சு = வல்லவனே அமைச்சனாவான்
ஏதோ ஒரு காரணத்தால் ஒருவனிடம் பகை மூண்டுவிட்டால், அப் பகைக்குத் துணையாக நிற்பவர்களைப் பிரித்தலும்; நம்மவர்களை நன்றாக கவனித்து நம்முடன் தக்க வைத்துக் கொளலும்; நம்முடன் இருந்து பிரிந்து சென்று தணித்து இருப்பவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளமுடிந்தால் இணைத்துக் கொள்ளலும் ஆகிய செயல்களைச் செய்ய வல்லவனே அமைச்சனாவான்
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)
Commenti