03/05/2021 (106)
பெரியாரைப் பற்றித்தான் இன்றைக்கு. ‘பெரியார்’ இல்லை என்றால் வெல்ல முடியாது. பெரியாரின் வழிகாட்டுதல் அந்தகாரத்தை அகற்றும் அழகிய விளக்கு. என்ன இன்றைக்கு ஒரு மாதிரியா இருக்கேன்னு பார்க்கறீங்களா? நான் சொல்லலைங்க. நம்ம வள்ளுவப்பெருமான் சொல்கிறார்.
பொருட்பாலில் மூன்று இயல்கள்: அரசியல், அங்கவியல், ஒழிபியல். இன்பத்துப்பாலில் இரண்டு இயல்கள்: களவியல், கற்பியல்.
முப்பத்தொராவது அதிகாரத்தில் இருந்து ‘அரசியலில்’ ஒரு தலைவனின் இலக்கணங்களை வரிசைப்படுத்துகிறார். தலைவனின் சிறப்பினை இறைமாட்சி (39) யில் தொடங்கி கல்வி (40), கல்லாமை (41), கேள்வி (42), அறிவுடைமை (43), குற்றங்கடிதல் (44) என்று கூறிக்கொண்டே வந்த பேராசான் அடுத்து நாற்பத்தி ஐந்தாவது அதிகாரமாக பெரியாரைத்துணைக்கோடல் (45) அமைக்கிறார்.
பெரியாரைத்துணைக்கோடல் என்றால் கற்றறிந்த பெரியோர்களை துணைக்கு கொள்ளுதல்.
தலைமைப் பொறுப்பை ஏற்பவர்கள் அனைத்தும் அறிந்திருப்பர் என்பது அரிது. அவ்வாறே அறிந்திருந்தாலும் அதிலெல்லாம் ஆழங்கால் பட்டவர்களாக இருப்பது மிக அரிது. ஆழங்கால் பட்டிருந்தாலும் ஒரு அகலப்பார்வை இருப்பது மிக, மிக அரிது. ஒரு தலைவன் பல அமைச்சர்களைப் பெற்றிருக்கலாம் அறிவுறைகள் பகர, சிறந்த படைத் தலைவர்களையும் பெற்றிருக்கலாம் செய்து முடிக்க இருப்பினும் அத்தலைவனைச்சாரா பெரியோர்களை ஆலோசிப்பது அவசியம் என்கிறார். அவர்கள்தான் இடித்துக் கூற வல்லவர்கள்.
ஒரு தலைவன் பெரும் பேறுகளில் அரிய பேறு நல்ல பெரியோர்களின் துணை. அவர்களைப் போற்றி அருகே வைத்துக்கொள்வது அத்தலைவனுக்குச் சிறப்பு.
இதோ அந்த குறள்:
“அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.” --- குறள் 443; அதிகாரம்- பெரியாரைத் துணைக்கோடல்
அரியவற்றுள் எல்லாம் = சிறந்த/அரிய பேறுகள் எல்லாவற்றையும் விட; அரிதே = சிறப்பானதே. பெரியாரைப்பேணி = கற்றறிந்த சான்றோர்களை காத்து; தமரா = தமக்கு வழிகாட்டுபவராக. நெருங்கிய சொந்தமாக; கொளல் = வைத்துக்கொள்ளுதல் ஆகும். தமர் = உற்றார், சிறந்தோர்
வாழ்வில் வெற்றி பெற பெரியோர்களைத் துணையாகக் கொள்வோம்.
அப்படி இல்லைன்னா என்னாகும்ன்னு கேட்டார் ஆசிரியர். தேடுவோம் வாங்க.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்.
コメント