top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

பெரியாரைப் பேணாது ...892,

19/05/2022 (447)

பெரியாரை அவமதித்தால் என்ன ஆகும் என்று பொதுபட இரண்டாவது குறளில் கூறுகிறார்.


பெரியார் என்றால் தன் ஆற்றலால் தலைவர்கள்/அரசர்கள் ஆனவர்களும், மேலும் ஞானத்தால் உயர்ந்து நிற்பவர்களையும் குறிக்கும் என்று நம் பேராசான் குறிப்பிடுவதைக் கண்டோம்.


அவர்களை மதியாது, அது மட்டுமல்ல, அவர்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து நடந்து கொண்டால், அது நமக்கு நீங்காத, அளவொணாத துன்பத்தைத் தரும் என்கிறார்.


பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்

பேரா இடும்பை தரும்.” --- குறள் 892; அதிகாரம் – பெரியாரைப் பிழையாமை


பெரியாரைப் பேணாது ஒழுகின் = உயர்ந்தவர்களை, சிறந்தவர்களை மதியாது அவமதித்து நடந்து கொண்டால்; பெரியாரால் பேரா இடும்பை தரும் =அந்நடவடிக்கைகளின் காரணமாக, அப்பெரியாரால் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும்.


நம்மாளு: அது சரிங்க ஐயா. அவர்களும் கைக்கு கை, கண்ணுக்கு மாறு கண் வாங்குவாங்கன்னா அவர்கள் எப்படி ‘பெரியவர்’களாக இருப்பாங்க. அப்போ, அவர்களும் ஒரு சாதாரணமான ஆளாகத்தானே இருக்காங்க?


ஆசிரியர்: சரிதான். பெரியவர்களே நேராக வந்து துன்பம் தருவார்கள் என்று பொருள் எடுக்க முடியாது. துன்பங்கள் பல வகையிலே வரலாம். உடனே வரும் என்று சொல்லவும் முடியாது. ஆனால், அது எப்படியாவது வரும் என்பதுதான் விதி (law). சிலருக்கு அவர்களின் பிள்ளைகளின் வடிவில் வரலாம்: “அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பன்” என்பது போல!


நாம், நீத்தார்பெருமை எனும் அதிகாரத்தில் இருந்து ஒரு குறளைப் பார்த்துள்ளோம். காண்க 12/08/2021 (170).


குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.” --- குறள் 29; அதிகாரம் – நீத்தார் பெருமை


குணங்கள் ஆகிய குன்றுகளின் மீது ஏறி நின்றவர்களாகிய முற்றும் துறந்தவர்களின் கோபத்தை ஒரு நொடியே ஆகினும் நம்மாலே தாங்க முடியாது.


சாதராண நடைமுறையிலேயே, ‘மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும்’ (Give respect and take respect). அதிலேயும் ஒரு சிக்கல் இருக்கு.


சிலர், பல சமயம் நாம் கொடுக்கும் மரியாதையை, தவறுதலாக, அதாவது, ஏதோ, நாம் அவர்களுக்கு கட்டுப்பட்டவர்கள், அடங்கி நடக்க கடமைப்பட்டவர்கள் என்று நினைத்துக் கொண்டு நம்மை ஊதாசினம் படுத்தி மகிழ்வார்கள். அவர்களின் தரம் அவ்வளவுதான் என்று கடந்துவிட வேண்டும். அவர்களோடு, நாம் ஒரு நாளும் போராடத் தேவையில்லை.


ஆனால், ஒரு போதும் ‘பெரியாரை’ பிழையாது ஒழுகவேண்டும். பெரியார் யார்?, மற்றவர்கள் யார்? எனும் பிரித்து நோக்கும் பான்மை நமக்கு கைப்பட வேண்டும் என்றார் ஆசிரியர்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )




8 views2 comments

2 Comments


Unknown member
May 19, 2022

Reminded of You reap what you sow . Be Humble but that does not mean be sub servient or arrogant.

Like
Replying to

Exactly! You have nailed it right in English sir. Thanks for the comments.

Like
bottom of page