10/12/2023 (1009)
அன்பிற்கினியவர்களுக்கு:
அருட் பாதையில் இருந்து விலகிச் சென்றால் தம் கடமையையும் மறந்து தம் வாழ்வின் பொருளையும் இழந்துவிடுவர் என்றார் குறள் 246 இல்.
அடுத்து வரும் குறளை நாம் முன்பொருமுறை சிந்தித்துள்ளோம். காண்க 29/01/2021 (12). மீள்பார்வைக்காக:
அருள்இல்லார்க் கவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு” ---குறள் 247; அதிகாரம் - அருளுடைமை
அருள் இல்லாதவர்களுக்குத் துறவற உலகம் சிறக்காது; எது போல என்றால் இல்லற உலகத்தில் பொருள் இல்லையென்றால் எப்படியோ அப்படி.
அருள் இல்லாதவர்க்கு மறுமை இல்லை; பொருள் இல்லாதவர்க்கு இம்மை இல்லை. மறுமை வாழ்வு=மறைந்தபின்னும் புகழ் உலகத்தில் நிலைப்பது; இம்மை வாழ்வு = வாழும்போது பொருளால் சிறந்து வாழும் வாழ்வு.
மறுமை என்றால் சொர்க்கம், வானுலகம் என்றும் அறிஞர் பெருமக்கள் சிலர் குறிக்கிறார்கள்.
அடுத்தக் குறளில் ஒரு தெளிவு ஏற்படுகிறது. என்ன சொல்கிறார் என்றால், பொருள் இல்லாமை என்பது நீங்கக் கூடியது. பொருள் கிடைக்கலாம்; அவரிகளின் வாழ்வும் மாறலாம்! ஆனால், ஓய்வெடுக்கும் பருவத்திலும் உங்கள் மனத்தில் அருள் வரவில்லையென்றால் நீங்கள் இந்த உலகில் வாழ்ந்த ஒருவர் என்பதே சந்தேகம்தாம் என்கிறார்.
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது. – 248; - அருளுடைமை
பொருள் அற்றார் ஒருகால் பூப்பர் = பொருள் இல்லை என்பவர்களும் சில சமயம் அவர்களுக்குப் பொருள் வந்துவிடலாம்; அருள் அற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது = ஆனால், அருள் இல்லாதவர்கள் இந்த உலகில் இல்லாதவர்களே; அதில் மாற்றம் என்பது அரிது.
பொருள் இல்லை என்பவர்களும் சில சமயம் அவர்களுக்குப் பொருள் வந்துவிடலாம். ஆனால், அருள் இல்லாதவர்கள் இந்த உலகில் இல்லாதவர்களே. அதில் மாற்றம் என்பது அரிது.
அஃதாவது, பொருள் என்பது சீர் செய்யக் கூடிய ஒன்று. ஆனால், அருளை நாம் விரும்பி ஒழுகவில்லை என்றால் அது ஒருபோதும் மனத்தில் பூக்காது.
இந்த உலகைவிட்டு விலகும் தருணத்திலும் நான்தான் என்று சொல்பவர்கள் ஒருபோதும் மதிக்கப்படுவதில்லை!
நான் இருக்கும்வரை எதனையும் யாருக்கும் கொடுக்கமாட்டேன் என்பவர்களை என்ன சொல்ல! அவர்களின் சந்ததியினர் நீதிமன்றத்தின் வாயில்களை அடைத்துக் கொண்டுதான் அவர்களின் இகழினைப் பறை சாற்றுவார்கள். அதுசரி, அப்படி இல்லை என்றால், மற்றவர்களுக்குப் பொருள் பூப்பது எங்ஙனம்?
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
댓글