09/07/2022 (498)
நம் ஒவ்வொருவருக்கும் பல அருட்கொடைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
உச்சி வெய்யில். சாலை அனலாகக் கொதிக்கிறது. காலிலோ ஒரு பிய்ந்து போன காலணியும் இல்லை. பாதம் கொப்பளிக்கிறது. விரைந்து செல்கிறார். இறைவனை தரிசித்து எனக்கு ஏன் இந்த நிலை என்று கேட்க விரைகிறார்.
அவருக்கு முன்னால், ஒருவர் சென்று கொண்டிருக்கிறார். அவர் எப்படி சென்று கொண்டிருக்கிறார் என்றால் தவழ்ந்து, தட்டுத் தடுமாறி சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு கால்களே இல்லை!
நம் ஒவ்வொருவருக்கும் பல அருட்கொடைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
நமக்கு அளிக்கப் பட்டுள்ள அருட்கொடைகளை மதிக்கத் தெரியவில்லை என்றால், அல்லது அவைகளைத் தவறாகப் பயன்படுத்தினால் அவைகள் பறிக்கப்படும்.
முதல் நாள், ஒருவன் சாலையில், போதையில் விழுந்து கிடப்பான். சிலர், அவனைத் தூக்கி கொண்டு போய் அவன் வீட்டில் விடுவார்கள். அதற்கு, அவர்களின் உள்ளத்தில் தோன்றி இருக்கும் அருள்தான் காரணம்.
மறுநாளும் அவ்வாறே அவன் கிடந்தால் ஒதுங்கிப் போய்விடுவார்கள். தொடர்ந்து தவறிழைக்கும்போது அவர்களின் அருள் பார்வை கிடைக்காது. அருட்கொடைகள் பறிக்கப்படுகிறது.
சரி, இப்ப என்ன அதற்கு?ன்னு கேள்வி அதானே? காரணம் இருக்கு.
சூதினால் பொருள் போகும்; வறுமை வரும். பொய் சொல்ல வேண்டிவரும். நல்ல பண்புகளை அழிக்கும். சிறுமையானச் செயல்களைச் செய்ய வைத்து மற்றவர்கள் ‘சீச்சீ’ என்று முகம் கோணுமாறு செய்யும்.
அது மட்டுமா? என்று கேட்டு, அடுத்த குறளில் பதில் சொல்கிறார் நம் பேராசான்.
அருட்கொடைகள் பறிக்கப்படும் என்கிறார்.
“பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள் கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.” --- குறள் 938; அதிகாரம் - சூது
பொருள்கெடுத்துப் = பொருளை இழந்து வறுமையை வரவைத்து; பொய்மேற் கொளீஇ = பொய்மையை மேற்கொண்டு பல சிறிய செயல்களைச் செய்ய வைத்து; அருள் கெடுத்து = அருட்கொடைகளை விலக்கி; அல்லல் உழப்பிக்கும் சூது = துன்பத்தில் ஆழ்த்தும் சூது.
பொருளை இழந்து வறுமையை வரவைத்து, பொய்மையை மேற்கொண்டு பல சிறிய செயல்களைச் செய்ய வைத்து, அருட்கொடைகளை விலக்கி துன்பத்தில் ஆழ்த்தும் சூது.
“அருள் கெடுத்து” என்பதற்கு அவன் மனதில் இருக்கும் அருளும் அழிந்து இழிவானச் செயல்களைச் செய்வான் என்று பல அறிஞர் பெருமக்கள் பொருள் கண்டிருக்கிறார்கள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments