top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

பொருளென்னும் பொய்யா விளக்கம் ... 753

06/07/2023 (854)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

மாறுபட்ட பொருள்களைத் தரும் சொற்களை ஆங்கிலத்தில் Contronym என்பார்கள் என்பதைப் பார்த்துள்ளோம். காண்க 13/01/2022 (322).


நந்துதல் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் இருக்காம்.

ஆக்குதல், வளர்தல், தழைத்தல், விளங்குதல், தூண்டுதல், காத்தல்

மறைதல், அவிதல், கெடுதல், அழித்தல் ...


இவைகளையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் நந்துதல் என்ற சொல்லுக்கு மூன்று பொருள்கள் புலனாகின்றன. அவையாவன: ஆக்குதல், காத்தல், அழித்தல் ஆகும்.


ஆக்குதல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்பவர் சிவபெருமான் என்றும் அவருக்கு ஆதாரமாக இருப்பவர் நந்தியம்பெருமான் என்பதும் சைவ மரபு. நந்தியம் பெருமானுக்கு ‘தர்மவிடை’ என்ற வேறு பெயரும் உண்டு. நந்தியம் பெருமான் விடும் மூச்சுக்காற்றுதான் தர்மம். அந்த மூச்சுக்காற்றைத்தான் சிவ பெருமான் சுவாசிக்கிறாராம். அதாவது தர்மம்தான் சிவ பெருமானுக்கு மூச்சு. அதனால்தான் நந்திக்கும் சிவனுக்கும் இடையில் செல்லக் கூடாது என்றார்கள். அதாவது தர்மத்திற்குத் தடையாக இருக்கக் கூடாது என்ற பொருளில்!


நந்தி என்றால் பெருகிய நிலை. எது பெருகிய நிலை? அறிவு பெருகிய நிலை. அதனைக் குறிப்பால் உணர்த்தத்தான் நந்தியின் சிலைகளைப் பெரிதாக அமைத்தார்கள்.

சரி, இப்போது ஏன் இந்த அலசல் என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்க. இன்னும் இந்த அலசல் முடியலை.


நந்து என்றால் பொதுவாக அணைதல் என்று பொருள். நந்தா என்றால் அணையா என்று பொருள். நந்தா என்றால் என்றும் இருப்பது.

அதனால்தான் அணையா விளக்குகளை நந்தா விளக்கு என்றார்கள். அதனை பொய்யா விளக்கு, தூண்டா மணி விளக்கு என்றும் சொன்னார்கள். சோழர்களின் கல்வெட்டுகளில் திருநுந்தா விளக்கு என்று இருக்கிறதாம்!


சரி, இப்போது அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா? இதோ வந்துவிட்டேன். பொருள் இருக்கே பொருள், அதாங்க பணம், செல்வம் இப்படி பல பெயர்களை கொண்டதற்கு, நம் பேராசான் ‘பொய்யா விளக்கு” என்று ஒரு பெயரையும் கொடுக்கிறார். இந்தப் பணம் நிச்சயமாக் பொய்க்காதாம். யாரிடமும் சென்று சாதிக்குமாம். எந்த ஒரு பகைவரிடமும் சென்று பகையை விலக்குமாம். பகை என்றால் இருள். அந்த இருளை எப்போதும் விலக்கும் விளக்கு எது என்றால் பொருள் என்னும் பொய்யா விளக்கு!


அப்பாடி, ஒரு வழியாக வந்துவிட்டேன் குறளுக்கு!

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று.” --- குறள் 753; அதிகாரம் – பொருள் செயல்வகை


பொருள் என்னும் பொய்யா விளக்கம் = பொருள் என்று எல்லாராலும் சிறப்பிக்கப்படும் அணையா விளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும் = எங்கெல்லாம் தனக்கு ஆக வேண்டியச் செயல்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் சென்று அங்கு ஏதேனும் எதிர்ப்புகள் இருப்பின் அதைக் களையும்.


பொருள் என்று எல்லாராலும் சிறப்பிக்கப்படும் அணையா விளக்கு, எங்கெல்லாம் தனக்கு ஆக வேண்டியச் செயல்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் சென்று அங்கு ஏதேனும் எதிர்ப்புகள் இருப்பின் அதைக் களையும்.


விளக்கு என்பது இருக்கும் இடத்தில் இருந்து ஒளிதருவது. அந்தக் காலத்தில் விளக்குகளை, தீப்பந்தங்களை அணையாமல் வெகுதூரம் எடுத்துச் செல்லமுடியாது. ஆனால், அறிவியல் மாற்றங்களினால் இப்போது அது இயலும். இருந்தாலும், நாம் அதை இயக்கிக் கொண்டே செல்ல வேண்டும்.


ஆனால் பணம் என்னும் பொய்யா விளக்கு இருக்கிறதே அது நாம் ஒரு இடத்தில் இருந்து கொண்டே உலகின் எந்த மூலைக்கும் அதன் வீச்சைக் காட்டி பல செயல்களைச் செய்யும். அதுவும் இந்த டிஜிட்டல் உலகத்தில் சொல்லவே வேண்டாம். சில நொடித் துளிகள்தான் தேவை. அவ்வளவே!


இதை நம் பேராசான் மனதில் கண்டு “எண்ணிய தேயத்து” என்றாரா? நம் பேராசானின், காலம் கடந்தும் நிற்கும் வார்த்தைகளைப் போடும்,கெட்டித்தனத்தை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது.


ஆகையினால் செய்க பொருளை!

மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.






Comments


Post: Blog2_Post
bottom of page