top of page
Search

பொருளல்ல வற்றை ... 351

02/02/2024 (1063)

அன்பிற்கினியவர்களுக்கு:

துறவைத் தொடர்ந்து மெய்யுணர்வு அதிகாரம். மெய்யுணர்வு என்றால்?

 

உண்மைகள் பல விதம்; அவை, ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பது போல உண்மைகள் போலத் தோன்றுவன பல. உண்மையான உண்மை, முடிந்த முடிவு போன்றவைதாம் மெய்.

 

உண்மைகளைப் பெரும்பான்மை கருதி மூவகையாகப் பிரிக்கலாம். Local truth, global truth, universal truth. இதுதான் உண்மையான உண்மையா என்று கேட்காதீங்க! இதுவும் மாறலாம்! இது நிற்க.

 

Local truth and Global truth are relative truths. Universal truth is absolute truth.

 

குறுகிய அளவில் உண்மை (Local truth), மற்றும் உலகளாவிய உண்மை (Global truth) ஆகியவை தொடர்புடைய உண்மைகள் (Relative truths) . பிரபஞ்ச அளவிலான உண்மையானது உண்மையான உண்மையாக இருக்கலாம். இருக்கலாம் என்றுதான் சொல்லமுடியும்!

 

இப்போது “நேரம் என்ன?” வென்றால். இங்கே ஒரு நேரம் இருக்கும். இது இங்கே மட்டும்தான் உண்மை. வெளி நாடுகளில் வேறு நேரங்கள் இருக்கும். எனவே, இந்த உண்மை குறுகிய அளவைக் கொண்டது (Local truth).

 

சூரியன் தோன்றுவது கிழக்கில் என்றால், இந்தப் பூமிப் பந்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் அது உண்மையைப் போன்று தோன்றும் (Global truth).

 

ஆனால், சூரியன் கிழக்கில் தோன்றுகிறதா என்றால் அதுதான் இல்லை. அது தன்மட்டில் இருக்கிறது. இந்தப் பூமிப் பந்து சுழுலுவதால் நமக்குக் காலையில் கிழக்கில் தோன்றுவது போலத் தெரிகிறது. அவ்வளவே.

 

சரி, அந்தச் சூரியனானது ஒரே இடத்தில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அதுவும் தன்னைத் தானேச் சுற்றிக் கொண்டு அதுவும் ஒரு வட்டப் பாதையில் சுழன்று கொண்டு இருக்கிறதாம்.

 

அதுமட்டுமல்ல, நாம் காணுவது ஒரே ஒரு சூரியனை. ஆனால், இந்தப் பிரபஞ்சத்தில் இது போன்று பல சூரியன்களும், சூரியக் குடும்பங்களும் இருக்கலாம் என்கிறார்கள். இதைப் பிரபஞ்ச உண்மை (Universal truth) என்று வைத்துக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் ஆதவன்தான் முதல் என்பதும் ஆராய வேண்டிய கருதுகோள்களில் ஒன்று.

 

எதைக் குறித்தும், இதுபோன்று தொடர்ந்து ஆராய்ந்தால் ஒரு முடிவான முடிவிற்கு வரலாம். அதுதான் மெய்யுணர்வு, மெய்யறிவு.

 

நாம் இருக்கும் இந்த உலகமாகிய சிறிய நிலப்பரப்பில் “இதுதான் உண்மை” என்று பலரும் நிறுவ முனைவது தாம் அந்தக் கொள்கையில் கொண்ட பற்றினால் மட்டுமே!

 

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது ஓர் உண்மையான உண்மை.


மயக்கத்தினால், இந்தப் பிறப்பில்,  நாம் இதுதான் உண்மை என்று நினைந்து வெட்டிக் கொள்கிறோம்; கட்டிக் கொள்கிறோம் என்கிறார் நம் பேராசான். இந்தக் குறள்தான் மெய்யுணர்தலில் முதல் குறள்.

 

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு. – 351; - மெய்யுணர்தல்

 

பொருள் = உண்மை; பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் = உண்மையான உண்மையாக இருக்க முடியாதவற்றை “இதுதான் உண்மை” என்று நம் அறியாமையால் அளந்து கொண்டிருக்கும்; மருள் ஆனாம் மாணாப் பிறப்பு = மயங்கிய அறிவைக் கொண்டதுதாம் நிலையாமையை உணரா நம் பிறப்பு.

 

உண்மையான உண்மையாக இருக்க முடியாதவற்றை “இதுதான் உண்மை” என்று நம் அறியாமையால் அளந்து கொண்டிருக்கும், மயங்கிய அறிவைக் கொண்டதுதாம் நிலையாமையை உணரா நம் பிறப்பு.

 

அனைவரும் ஒருவரே. பிறந்த இடத்தால், இனத்தால், இன்னபிறவற்றால்  பிரிவினையை ஏற்படுத்தி நாம் நம் சொந்தங்களை இழந்து கொண்டு இருக்கிறோம்.

 

இந்த உலகும், அது இருக்கும் பிரபஞ்சமும் எப்போதும் இருக்கும். நாம்தாம் இருக்க மாட்டோம். அவற்றின் கால அளவைக் காணும்போது நாம் இயங்கும் காலம் எவ்வளவு சிறியது என்பதைக் கணக்கிட்டால் ஒன்றுமே இருக்காது. எனவே, நாம் செய்ய வேண்டியது அன்பும் அருளும்தான். அவைதாம் அறம் என்றார் என் ஆசிரியர்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page