18/02/2024 (1079)
அன்பிற்கினியவர்களுக்கு:
அந்தத் தோழி சென்று அவனிடம் சொல்கிறாள். அவன் தரப்பு நியாங்களை அவன் தோழியிடம் எடுத்து வைக்கிறான். அவள், இந்தச் சின்னச் சின்னப் பிரிவைத் தாங்கவில்லை என்றால் எவ்வாறு முன்னேற இயலும். இது ஏதோ நிரந்தரப் பிரிவைப் போல் கட்டிப்போட நினக்கிறாள். அவளிடம் நீ சென்று எடுத்துச் சொல் என்று அனுப்பிவைக்கிறான்.
உலக வழக்கையும், அவனின் எண்ண ஓட்டங்களையும் தோழி அவளிடம் விளக்குகிறாள். அவர் திரும்பி வருவார், இன்பம் அளிப்பார் என்கிறாள்.
உணர்ச்சியின் வெள்ளத்தில் அடித்துக்கொண்டுச் செல்பவளுக்கு அறிவென்னும் துடுப்பினால் எந்தப் பயனுமில்லை. அவர்கள் நினைப்பதையேதான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
திரைக்கதை, வசனம், இயக்கம் என்று எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கும் நம் பேராசான் அதை அப்படியே படம் பிடிக்கிறார்.
அவள் புலம்பும் காட்சி:
பாத்திரங்கள்: அவள், தோழி
அவள்:
நான் வருந்துகிறேன், என் உயிர் என்னிடம் நிலை கொள்ளாது என்று சொன்ன பிறகும் நான் பிரிந்துதான் செல்வேன் என்று சொல்லும் அளவிற்கு அவருக்குத் தடித்த மனது இருக்குமானால், அவர் திரும்பிவந்து எனக்கு இன்பம் அளிப்பார் என்று நீ சொல்லும் ஆசை வார்த்தை பொருளற்றது.
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை. - 1156; - பிரிவு ஆற்றாமை
நசை = ஆசை; வன்கண்ணர் = தடித்த மனம் உடையவர்;
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் = நான் வருந்துகிறேன், என் உயிர் என்னிடம் நிலை கொள்ளாது என்று சொன்ன பிறகும் நான் பிரிந்துதான் செல்வேன் என்று சொல்லும் அளவிற்கு அவருக்குத் தடித்த மனது இருக்குமானால்; அவர் நல்குவர் என்னும் நசை அரிது = அவர் திரும்பிவந்து எனக்கு இன்பம் அளிப்பார் என்று நீ சொல்லும் ஆசை வார்த்தை பொருளற்றது.
அடுத்த காட்சிகளில் (குறள்களில்) அவள் மனத்தைத் தேற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றார் போல் குறள்களை அமைக்கிறார்.
அவள்: அவர் பிரிந்துதான் செல்லப் போகிறார் என்று நீதான் முதலில் உறுதி செய்தாய் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அது எனக்கு முன்னரே தெரிந்துவிட்டது. இந்த ஊருக்கும் யார் சொல்லாமலும் தெரிந்துவிடும்.
தோழி: எப்படி?
அவள்: என் முன் கை மணிக்கட்டில் இருந்து இந்த வளையல்கள் தானாக கழன்று விழுவதைப் பார்க்கும்போது யாருக்குமே அவர் பிரிந்து செல்வது கண்கூடு.
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை. - 1157; - பிரிவு ஆற்றாமை
துறைவன் = தலைவன், என்னவர்; இறை = மணிக்கட்டு; இறவாநின்ற = இறங்குகின்ற, கழல்கின்ற; தூற்றா கொல் = அறிவிக்காதா? சொல்லாதா?
துறைவன் துறந்தமை = என்னவர் பிரிந்தமையை; முன் கை இறை இறவா நின்ற வளை தூற்றாகொல் = என் முன் கை மணிக்கட்டில் இருந்து இந்த வளையல்கள் தானாக கழன்று விழுகிறதே அதுவே பிறர்க்கு அறிவிக்காதா?
என்னவர் பிரிந்தமையை, என் முன் கை மணிக்கட்டில் இருந்து இந்த வளையல்கள் தானாக கழன்று விழுகிறதே, அதுவே பிறர்க்கு அறிவிக்காதா?
சரி, அவர் பிரிவது உறுதி. அவர் திரும்பும்வரை எனக்கு யார் துணை? நீயாவது என்னுடன் இருப்பாயா? என்று தோழியை வளைக்கிறாள்.
இதுதான் மனத்தின் இயல்பு. நினைப்பது நடக்காவிட்டால், அடுத்த வழி என்னவென்று சிந்திக்கும். சிந்திக்க வேண்டும். இது மிக முக்கியம்.
1984 இல் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் என்னும் திரைப்படத்தில் “ஆலின் ஆல் அழகுராஜா” (All in All அழகுராஜாவாக கவுண்டமணி) என்று ஒரு கதா பாத்திரம்.
ஒரு பெட்ரோமாக்ஸ் (Petromax) விளக்கைச் சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது அதை செந்தில் உடைத்துவிடுவார். அந்த நேரம் பார்த்து ஒரு வாடிக்கையாளர் விளக்கு வாடகைக்கு வேண்டும் என்று கேட்பார்.
அதற்குக் கவுண்டமணி அவர்கள் “ஏங்க பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா?” என்று கேட்பார்.
இன்றளவும், இந்த வசனம் மக்களால் மிகவும் இரசிக்கப்படுகிறது! சிந்திக்க வேண்டிய கருத்து.
பி.கு.: Petromax (பெற்றோமாக்ஸ், பெட்ரோமாக்ஸ்) என்று வழங்கப்படும் இந்த விளக்கு பெட்ரோலில் (Petrol) இருந்து தயாரிக்கப்படும் பாரபீனைக் (Paraffin) கொண்டு எரியும்.
நம்ம ஊரில் மண்ணெண்ணையைக் (Kerosene) கொண்டு எரிந்தது.
இந்த விளக்கை, 1910 இல், வடிவமைத்தவர் மாக்ஸ் கிரேட்ஸ் (Max Graetz) என்னும் ஜெர்மானியர். ஆகையினால், இந்த விளக்கிற்குப் பெயர் Petromax (Petro + Max).
அவளை நாளைத் தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments