29/07/2023 (877)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
வீர மரணம் எய்தினும் அந்த வீரனைப் பொறுத்தவரை வெற்றிதான். அவனை யாரும் பழித்துப் பேசமாட்டார்கள் என்றார்.
இப்போது, இரு அணிகளுக்குள் வீரனின் இலக்கணத்தில் ஒர் ஒற்றுமை தோன்றிவிட்டது.
இறுதியாக இந்த அதிகாரத்தின் முடிவுரையாக ஒரு பாடலைச் சொல்ல வேண்டும். நாம் ஏற்கெனவே பார்த்தப் பாடல்தான். மிகவும் நயம் மிக்கப் பாடல்.
நம்மைப் புரந்தவர்கள், அதாவது நம்மைக் காப்பவர்கள் கண்களில் நீர் கசிய அவர்களுக்காகப் போராடி உயிர் துறக்கும் வாய்ப்பு இருந்தால், அதுபோன்ற வாய்ப்பைக் கேட்டாவது பெற்று உயிர் துறத்தல் என்பது விரும்பத்தக்கது என்கிறார்.
காண்க 22/07/2022 (511). மீள்பார்வைக்காக:
“புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
டிரந்துகோட் டக்க துடைத்து.” --- குறள் 780; அதிகாரம் - படைச்செருக்கு
புரந்தார்கண் = நம்மைக் காப்பவர்கள் கண்கள்; நீர் மல்க = கலங்க; சாகிற் பின் = உயிரைத் துறப்பின்; சாக்காடு = அது போன்ற ஒரு வாய்ப்பை; இரந்து கோள் தக்கது உடைத்து = பிச்சைக் கேட்டாவது பெறுவது சிறப்பு.
நம்மைக் காப்பவர்கள் கண்கள் கலங்க, அவர்களுக்காக, நாட்டிற்காகஉயிரைத் துறக்கும் வாய்ப்பைப் பிச்சைக் கேட்டாவது பெறுவது ஒரு வீரனுக்குச் சிறப்பு.
இதுதான், நாம், நம்மைக் காப்பவர்களுக்கும், நம்மைக் காக்கும் அரசிற்கும் செய்யும் நன்றி!
நாட்டின் மீது நன்றியும் பற்றும் இருந்தால் ஒரு விரன் இவ்வாறுதான் இருப்பான் என்கிறார்.
செய்ந்நன்றியறிதல் அதிகாரத்தில் ஒரு குறளைப் பலமுறை சிந்தித்துள்ளோம். காண்க 06/05/2021 (109), 12/06/2021(110), 03/12/2021 (283), 29/12/2021 (308), 07/03/2022 (374).
“கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.” --- குறள் 109; அதிகாரம் -செய்ந்நன்றியறிதல்
ஒருவர் செய்த ஒரு நன்றிக்கே நாம் நன்றிக்கடன் பட்டிருக்கும்போது நம்மை, நாட்டை வழி நடத்துபவர்களுக்கு நாம் எவ்வாறு கைம்மாறு செய்ய இயலும்?
நான் நாளும் நினைத்துப் பார்க்கும் குறள்களில் இதுவும் ஒன்று. இந்தக் குறள் கவனத்தில் இருந்தால் பழி வாங்கும் உணர்ச்சி மேலிடாது.
ஒரு கதை கவனத்திற்கு வருகிறது, முன்பே சொல்லியிருக்கிறேனோ என்னமோ தெரியவில்லை. இருந்தாலும் என்ன மீண்டும் ஒரு முறை கேட்போம்.
இரு நண்பர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவர் சந்தித்தால் என்ன நிகழும்? வழக்கம் போல மூன்றாமவரைப் பற்றியப் பேச்சுதானே!
முதலாமவர்: “நண்பரே உங்களுக்குத் தெரியுமா, அந்த நாலாம் வீட்டுக்கார் இருக்கிறாரே, அவர் உங்களைப் பற்றி தப்புத் தப்புகாக பேசிக் கொண்டுள்ளார். நீங்கள் எவ்வளவு மட்டம், அப்படி இப்படி என அள்ளி விட்டுக் கொண்டுள்ளார்.”
மற்றவர்: “அப்படியா, ஆச்சரியமாக இருக்கிறதே! அவர் அப்படிச் சொல்ல வாய்ப்பே இல்லையே! நீங்கள் கூறுவது உண்மையாக இருக்க எந்தக் காரணமும் இல்லை” என்று அடித்துச் சொன்னாராம்.
முதலாமவர்: “மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்வது உண்மைதான். நான் தான் உங்களைச் சோதிக்க அவ்வாறு சொன்னேன். ஆனால், எப்படி நீங்கள் அவ்வளவு உறுதியாகச் சொன்னீர்கள்?
மற்றவர்: “எனக்குத்தான் தெரியுமே, நான் அவருக்கு எந்த நன்றியோ உதவியோ செய்ததே இல்லையே! பிறகு எப்படி அவர் என்னை மோசமாகப் பேச முடியும்” என்றாராம்!
இப்படித்தான் உள்ளது உலக இயற்கை. நமக்கு உதவுபவர்கள் மீதுதான் நமக்கு பொறாமையும் கோபமும் கொப்பளிக்கிறது. பின்புறமாக, அவர்களைத் தாக்குவதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி. இதுதான் கூடாது என்கிறார் நம் பேராசான்.
நன்றி மறப்பது நன்றன்று!
இன்றைய தினத்தில் எனக்கு உதவிய, உதவும், உதவிக் கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் பல.
என்றைக்கும் இல்லாத திருநாளாய் இன்றைக்கு ஏன் என்கிறீர்களா?
இன்றைக்கு எனது பிறந்த தினம் என்று எப்படித்தான் உங்களுக்கு நான் சொல்லுவேன்!
ஆதலினால் மீண்டும் நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா.