27/10/2023 (965)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.”--- குறள் 108; அதிகாரம் – செய்ந்நன்றியறிதல்
மறக்கக் கூடாத இந்தக் குறளை நாம் பல முறை சிந்தித்துள்ளோம்.
“நன்றல்லது” எது என்று விளக்குகிறார் பொறையுடைமையில். அதுதான் “இறப்பு”. இறப்பு என்றால் நாம் தற்காலத்தில் பொருள் கொள்வதுபோல அல்ல.
இறப்பு என்றால் வரம்பு கடந்து செய்யும் குற்றம். அஃதாவது, சொல்லத் தகாதனவற்றைச் சொல்வதும், செய்யத் தகாதனவற்றைச் செய்தலுமாம். இஃதே, நன்றல்லதாம்.
இது போன்றச் செயல்களைச் செய்பவர்களையும் பொறுத்தல் நன்று. அதினினும் நன்று எது என்றால் அதனை மறந்து விடல். அந்த எண்ண அலைகளை எடுத்து நாம் குமிங்கிப் போகக் கூடாது.
மகாத்மா காந்தி தென்னாப்ரிக்காவில் நிகழ்த்தியப் போராட்த்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஜெனரல் ஜேன் ஸ்மட்ஸ் (Jan Smuts) என்பார்தாம் பொறுப்பதிகாரி. மகாத்மா அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோது ஸ்மட்ஸ் காந்தியாரை சந்திக்கிறார். மகாத்மா அவருக்கு தன் கையால் தைத்தக் காலணியைப் பரிசாகத் தந்தாராம்.
இறுகிய உள்ளம் படைத்த ஸ்மட்ஸின் மனத்தில் ஒரு அன்பின் விதை விதைக்கபட்டது. அந்த நட்பு நீண்ட நாள் நீடித்தது. இன்றும் அந்தக் காலணி காட்சிப் பொருளாக டிஸ்டாங் காட்சியகத்தில் (Distong National Museum of Cultural History, South Africa) பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாம். இதன் மாதிரி Constitution Hill Museum in Johannesburg கிலும் உள்ளதாம்.
இந்தக் காலணியைப் பல ஆண்டு காலம் அணிந்திருந்த ஸ்மட்ஸ் தென் ஆப்ரிக்காவின் பிரதமராகவும் இரு முறை இருந்துள்ளார். அவர் காந்தியாரின் எழுபதாவது பிறந்த நாளில்:
“இவ்வளவு பெரிய மனிதர் தைத்துக் கொடுத்தக் காலணியில் நிற்க நான் தகுதியற்றவன் என்று உணர்ந்தாலும், பல கோடைகாலங்களாக இந்தச் செருப்பை அணிந்திருக்கிறேன்…”
“மனிதப் பண்புகளைக் காந்தி அவர்கள் ஒருபோதும் மறந்ததில்லை; கோபத்தை இழக்கவில்லை அல்லது வெறுப்புக்கு அடிபணியவில்லை; மேலும் மிகவும் கடினமானச் சூழ்நிலைகளிலும் தனது மென்மையான நகைச்சுவையைப் பாதுகாத்தார். அந்நாளிலும், ஏன் இந்நாளிலும், உள்ள மிருகத்தனமான எண்ணங்களில் இருந்து அவரின் நடத்தை மற்றும் செய்கைகள் வேறுபட்டவை …” என்ற குறிப்போடு அக் காலணிகளைக் காட்சியில் வைக்குமாறு அனுப்பியுள்ளார்.
லண்டனில் உள்ள பாராளுமன்றச் சதுக்கத்தில் (Parliament Square – London) காந்தியாரை நெருக்கிய இருவர்களான வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) மற்றும் ஸ்மட்ஸிற்கு (Jan Smuts) நெருக்கமாக மாகாத்மாவிற்கு ஒரு சிலை நிறுவியுள்ளார்கள். அந்தச் சதுக்கத்தில் உள்ளவர்களில் எந்த ஒரு ஆட்சிப் பொறுப்பிலும் இல்லாதவர்கள் இருவர். ஒருவர் நம் காந்தியார், மற்றொருவர் பெண் உரிமைப் போராளி மில்லிசென்ட் பாசெட் (Millicent Fawcett). மற்ற அனைவரும் நாட்டின் அதிபர்களாகவோ (President) பிரதமர்களாகவோ (Prime Minister) பதவி வகித்தவர்கள்.
நாம் குறளுக்கு வருவோம். இறப்பு என்றால் நெறி மீறிய தீங்கு. அதனையும் பொறுக்க வெண்டும் என்கிறார் நம் பேராசான்.
“பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று.” --- குறள் 152; அதிகாரம் – பொறையுடைமை
இறப்பினை என்றும் பொறுத்தல் = கொடுந்துன்பங்களைப் பிறர் செய்தாலும் எப்போதும் பொறுத்துக் கொள்க (அஃதாவது, எதிர்வினையாற்றாதீர்கள். மேலும் சிக்கல் ஆகிவிடும்); அதனை மறத்தல் அதனினும் நன்று = அந்தக் கொடுமைகளை மறந்து விடுவது அதனினும் நல்லது. (அஃது, மனத்தின் மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும்.)
கொடுந்துன்பங்களைப் பிறர் செய்தாலும் எப்போதும் பொறுத்துக் கொள்க. அஃதாவது, எதிர்வினையாற்றாதீர்கள். மேலும் சிக்கல் ஆகிவிடும். அந்தக் கொடுமைகளை மறந்து விடுவது அதனினும் நல்லது. அஃது, மனத்தின் மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும்.
நாஜிப் படையால் வதை முகாமில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட எடி ஜேக்கூ (Eddie Jaku) என்பார் “உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்” (The Happiest Man on Earth) என்ற தலைப்பில் தனது அனுபவங்களைப் புத்தகமாக எழுதியுள்ளார். இருண்ட காலகட்டங்களில்கூட மகிழ்ச்சியைக் கண்டு கொள்ள முடியும் என்கிறார். 101 வயதுவரை நிறை வாழ்வு வாழ்ந்து 2021 ஆம் ஆண்டில் மறைந்தார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments