21/03/2023 (747)
பொறி என்ற சொல்லுக்கு பல பொருள்கள் இருக்கின்றன.
ஐம்பொறி = மெய், வாய், கண், மூக்கு, செவி
பொறியிலி = அறிவில் குறை, உடலில் குறையுடையவர்கள், Physically challenged, Differently abled
முப்பொறி = மனம், வாக்கு, காயம்
பொறி தட்ட = உள்ளுணர்வு வெளிப்பட
பொறி பறக்க = சிறு துகள்கள் (sparks) பறக்க
பொறி = கருவிகள் (tools)
பொறியியலாளர் = கருவிகளை அறிந்து ஆளுபவர் (Engineer)
பொறி = வாழும் வகைக்குரியன
பொறியிலார் = வாழும் வகையறியார், ஏதிலார், வறுமையில் உழல்வோர்
பொறி = விதி, புண்ணியம் .... இப்படி பலவிதத்தில் பயின்று வருவது பொறி!
பொறி என்றால் வேர்கடலை, பொறி (puffed rice) இருக்கே அதை விட்டு விட்டாயே என்கிறீர்களா? அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!
என்ன, ஏதாவது பொறி தட்டுகிறதா?
குறள் 616ல் வளங்கள் ஆறு என்று பார்த்தோம். காண்க 19/03/2023. அவை அனைத்துமே பொறிகள்தான்! மீள்பார்வைக்காக: 1) இடித்தும், வரும் பொருளை உணர்த்தியும் சொல்லக் கூடிய சான்றோர்கள், அமைச்சர்கள்(Human Resources); 2) நாடு (Territory); 3) அரண் – பாதுகாப்பு வளையங்கள்(Safety nets); 4) பொருள்(material resources); 5) படை, கருவிகள் (Tool kits); 6) நட்பு வளையங்கள்(External friendly supports).
சரி, இதில் ஒன்றோ, அல்லது இரண்டோ, அல்லது எல்லாமுமோ அமையாது போகும் என்று வைத்துக் கொள்வோம். அது ஒரு குறையென்று தலைவன், அதாவது ஆள்வினை உடையவன் ‘விதி’ என்று ஒதுங்கிவிடலாமா?
“விதி” என்பது நாம் சந்திக்கும் சாவல்கள். அதை எப்படி அணுகி வெற்றி காண்கிறோம் என்பதுதான் “மதி”. இதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க 25/04/2022 (423).
சரி, இதெல்லாம் எதற்கு என்று கேட்கிறீர்களா? இந்த ‘விதி – மதி’ கருத்தினைத்தான் (concept) நம் பேராசான் வரும் குறளில் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
“பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி” --- குறள் 618; அதிகாரம் – ஆள்வினை உடைமை
பொறியின்மை யார்க்கும் பழியன்று = ஏதோ ஒரு வகையில் வளங்களில் குறைபாடுகள் இருப்பது குற்றமாகாது;
அறிவறிந்துஆள்வினை இன்மை பழி = ஆனால், தன்னிடம் இல்லாததை அறிந்து, உள்ளதைக் கொண்டு உபாயங்கள் செய்து அபாயங்கள் தவிர்க்க முயலாமல் இருப்பதுதான் குற்றம்.
தலைமைக்கு ஏதோ ஒரு வகையில் வளங்களில் குறைபாடுகள் இருப்பது குற்றமாகாது. ஆனால், தன்னிடம் இல்லாததை அறிந்து, உள்ளதைக் கொண்டு உபாயங்கள் செய்து அபாயங்கள் தவிர்க்க முயலாமல் இருப்பதுதான் குற்றம்.
பரிமேலழகப் பெருமான் மிக அழகாகச் சொல்கிறார்:
“தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்ல”, என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாதுமுயல்க என்பது குறிப்பெச்சம்.
அதாவது, என்னதான் நாம் செய்தாலும், ‘தெய்வம் இதுதான் என்று எழுதி வைத்துவிட்டால் அவ்வளவுதான்; ஒன்றும் பயனில்லை’ என்று சொல்பவர்களை நோக்கி, நம் பேராசான், சொல்வதாக பரிமேலழகப் பெருமான் சொல்வது: இந்த உலகம் தலைவிதியைப் பற்றி குறையொன்றும் சொல்லாது, முயலாமல் விடுவதே குற்றம் என்று பழிக்கும். ஆதலினால் ‘விடாது முயல்க’ என்பதுதான் இந்தக் குறளின் குறிப்பு என்கிறார்.
குறள் 619ல், தெய்வத்தால் ஆகாதெனினும் ... முயற்சி வெற்றி தரும் என்பதை என்று சொன்னதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க 29/10/2022 (60).
இந்த அதிகாரத்தின் முடிவுரையான குறளாக ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ என்ற குறளையும் நாம் ஏற்கனவே சிந்தித்துள்ளோம். காண்க 18/03/2021 (60).
ஆள்வினை உடைமை என்றாலே முயற்சி, முயற்சி, தளரா முயற்சிதான்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)
முப்பொறி = மனம், வாக்கு, காயம். நல்ல விளக்கம்!! எலியை பொறி வைத்து பிடிக்க வேண்டும். பொறி என்பது trap (கருவி என்ற பொருளில்) என்ற பொருளில் கூட பயன்படுத்த படுகிறது...