12/06/2023 (830)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
மனித உரிமைகளுக்கான உலகளாவியப் பிரகடனம் (Universal Declaration of Human Rights), ஐக்கிய நாடுகளின் பொது அவையில் (UN General Assembly), டிசம்பர் திங்கள் 10 ஆம் நாள் 1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்து.
இது உலகளாவிய அளவில், அனைத்து நாடுகளையும் வழிநடத்தும், கட்டுப்படுத்தும்.
இதில் உள்ள சட்டப்பிரிவு 1 மற்றும் 2 என்ன கூறுகிறது என்றால்:
“உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகப் பிறந்தவர்கள்; மேலும், அவர்களுக்கான கண்ணியமும், உரிமைகளும் சமமானவையே.
அவர்கள் பகுத்தறிவும் மனசாட்சியும் உடையவர்கள் மற்றும் ஒவ்வொருவரும் அதற்கு மதிப்பளித்து சகோதரத்துவ உணர்வுடன் அவ்வாறே செயல்பட வேண்டும்.
இந்தப் பிரகடனத்தின் மூலம், இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல் அல்லது பிற கருத்துகள், தேசிய அல்லது சமூகத் தோற்றம், சொத்து, பிறப்பு அல்லது பிறத் தர நிலைகளில் எந்த வகையிலும் வேறுபாடு இல்லாமல், அனைவருக்கும், அனைத்து உரிமைகளும், சுதந்திரங்களும் உண்டு...”
“All human beings are born free and equal in dignity and rights.
They are endowed with reason and conscience and should act towards one another in a spirit of brotherhood.
Everyone is entitled to all the rights and freedoms set forth in this Declaration, without distinction of any kind, such as race, colour, sex, language, religion, political or other opinion, National or social origin, property, birth or other status. […]”
சரி, இதெல்லாம் இப்போ எதற்கு என்ற கேள்விதானே? நம்ம பேராசான் இதுபற்றித்தான் சொல்லிச் சென்றுள்ளார் என்றால் ஆச்சரியமாக இருக்கும்தானே!
அதற்குமுன், ஒரு தகவலைப் பார்த்துவிடுவோம்:
உலக மக்கள்தொகையில் தோராயமாக 3.6 சதவிகிதமக்கள், அதாவது, இருபத்து எட்டு கோடி மக்கள், அவர்களின் பிறந்த நாட்டில் இருந்து பல்வேறு நிர்பந்தங்களால் வெளியேற்றப்பட்டு, உலகெங்கும் அகதிகளாக வாழ்கின்றனர்.
சரி, இதுவும் எதற்கு?
எதற்கு என்றால் ஒருவரோ அல்லது ஒரு குழுவினரோ, தன் நாட்டைவிட்டு நிர்பந்தங்களால் பிரிந்து அயல் நாட்டிற்கு வந்தால் அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அந்த நாட்டின் பொறுப்பு.
அந்தப் பொறுப்பு எவ்வளவு சுமையானதாக இருந்தாலும், அந்த நாட்டு மக்கள் அதை ஏற்றுக் கொள்ளும் விதமாக, அவர்களின் அரசு அதற்காக ஏதாவது வரி விதிக்க நேருமானால், அதையும் செலுத்தத் தயாராக இருப்பவர்களைக் கொண்டதுதான் நாடு. இதை நான் சொல்லலைங்க நம்ம பேராசான் சொல்கிறார்.
“பொறையொருங்கு மேல்வரும்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.” --- குறள் 733; அதிகாரம் – நாடு
பொறை = சுமை, குற்றம், பாரம்; ஒருங்கு = மொத்தம்;
பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி = பிற நாடுகளால் ஏற்படும் மொத்தச் சுமைகளைத் தாங்கும் விதமாக; இறைவற்குஇறை ஒருங்கு நேர்வது நாடு = அரசின் தலைமைக்கு வரிகளைச் செலுத்துபவர்களைக் கொண்டது நாடு.
பிற நாடுகளால் ஏற்படும் மொத்தச் சுமைகளைத் தாங்கும் விதமாக, அரசின் தலைமைக்கு வரிகளைச் செலுத்துபவர்களைக் கொண்டது நாடு.
சரி, நீயாக வலிந்து பொருள் சொல்கிறாயா என்றும் நீங்கள் கேட்கலாம். இதோ, மூதறிஞர் மு.வரதராசனாரைத் துணைக்கு அழைக்கிறேன்.
மூதறிஞர் மு.வ உரை: (மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன்மேல் வரும்போது தாங்கி, அரசனுக்கு இறைப்பொருள் முழுவதும் தரவல்லது நாடாகும்.
ஆக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே, மனித உரிமைகளுக்கான முதல் குரல் நம் பேராசானின் குரலாக, குறளாக உள்ளது.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments