15/10/2021 (234)
தலைவர்களிடம் நெருங்கிப் பழகுபவர்கள், அவர்களின் நடை, உடை, பாவனைகளில் நிதானமாக இருக்கனும் என்றார்.
செய்யத் தகுந்தவை, செய்யத் தகாதவைகளை இந்த ‘மன்னரைச் சேர்ந்து ஒழுகல்’ அதிகாரத்தில் விளக்குகிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.
இரண்டவது குறளில் செயல்களில் நிதானம் இருக்க வேண்டும் என்கிறார் நெருங்கிப் பழகுபவர்கள் எதிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறார்.
சின்ன, சின்னத் தவறுகள் மன்னிக்கப்படும், மறக்கவும்படும். தவறுகளே, தவறிச் செய்வதுதானே!
தவறு என்பது தவறிச் செய்வது;
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப் பார்க்கனும்;
தப்பு செய்தவன் வருந்தியாகனும் …
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி --- கவிஞர் வாலி, பெற்றால் தான் பிள்ளையா (1966)
தப்புகள் செய்யக் கூடாது. அதிலும் தலைமைக்கு இழுக்கு வரும் வகையில் அது இருக்கக் கூடாது. அரிய பிழைகளிலில் இருந்து நம்மைப் போற்றி காத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் நம் பேராசான்.
ஒருத்தர் ஐயா, உங்க ஆள் இப்படி செய்துள்ளார் என்று சொல்லும் போது, அவரா அப்படிச் செய்தார், இருக்காது என்பது போல தலைமைக்கு நம்பிக்கை இருக்கனுமாம். அதை விட்டு, சந்தேகம் ஏற்படுவது போல இருக்கக்கூடாதம் செயல்கள்.
அதாவது, செயல்களில் சிறப்பு இருக்க வேண்டும். மேலும் அதில் தெளிவு, வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். ஒரு தடவை நம்பிக்கை போயிடுச்சுனா பிற்கு அந்த உறவைத் தேற்றுவது, தெளிவிப்பது கடினம் என்கிறார்.
“போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.” --- குறள் 693; அதிகாரம் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
போற்றின் அரியவை போற்றல் = காத்துக் கொள்ள வேண்டும் என்றால் அரிய பிழைகளில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும்; கடுத்தபின் = சந்தேகம் வந்து விட்ட பின்; தேற்றுதல் யார்க்கும் அரிது = அதை தெளிவு படுத்தல் யாராக இருந்தாலும் கடினமான காரியம்தான்.
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி …
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comentários