18/07/2021 (145)
மூன்றாவது நான்காவது குறளிலே மனவழிபாட்டின் சிறப்பை சொன்னவர், ஐந்தாவது குறளிலே வாக்கினாலே வழிபடுவதன் நன்மையைக் கூறினார்.
நம்மாளு அதுக்குள்ள கையை தூக்கிட்டார். ஆசிரியர் என்னப்பா என்ன சந்தேகம் என்றார்.
நம்மாளு: ஐயா, நான் ஒரு சாதாரணமானவன். நாலு வார்த்தை கோர்வையா சொல்ல வராது. நான் எங்கிருந்து அவன் புகழை சொல்வது? மனசும் அடங்கறது இல்லை! மனசால நினைக்கிற பக்குவமும் இல்லை என்ன பண்ண?
ஆசிரியர்: ஒன்றும் கவலைப்பட வேண்டாம். அதுக்குதான் அடுத்த குறள் சொல்கிறார் நம் பேராசான். உன்மட்டிலே ஒழுக்கமா நின்றாலே போதும்.
நம்மாளு: ஒழுக்கம்ன்னா? கொஞ்சம் சொல்லுங்க ஐயா.
ஆசிரியர்: தர்ம ரகசியங்கள் இயற்கையிலே பொதிந்து இருக்கிறது. அதர்மங்கள் நீண்ட நாள் நிலைத்ததில்லை. இயற்கையோ இறையின் உடம்பு (வெளிப்பாடு). இப்போ, நம் உடம்பை யாராவது தாக்கினால்…
நம்மாளு: அது எப்படி ஐயா, நாம பின்னிடமாட்டோமா!
ஆசிரியர்: கொஞ்சம் பொறு. சரியாதான் சொல்கிறாய். நீ சொன்னதைப் போலத்தான் இயற்கையை நாம் தாக்கினால் நம்மை அது தாக்கும். நாம் நம் அதீத ஆசையின் காரணமாக இயற்கைக்கு ஒவ்வாத செயல்களை செய்கிறோம். அதற்கு காரணம். நம் ஐந்து அறிவுக்கருவிகள்.
நம்மாளு: ? (அதான் சாமி கண்ணைக் குத்தும்ன்னு சொன்னாங்களோ? நான் அது சின்ன புள்ளைங்களை பயமுறுத்தன்னு நினைச்சேன்! என்ன பண்றது விஷயம் தெரியலைன்னா எல்லாரும் சின்ன புள்ளைங்கதான்!)
ஆசிரியர்: அவைதான் நம்ம உடம்பு, வாய், கண், மூக்கு, காது. நம்ம ஆசையின் வெளிப்பாடு இந்த ஐந்தின் மூலம் தான் வெளிப்படும். ஆனால், இறைக்கு இந்த தொல்லை இல்லை. விருப்பு, வெறுப்பு கிடையாது. அதனாலே ஆசையும் கிடையாது. இதைமட்டும் நீ மனசிலே வைத்து நீயும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் அறத்தில் நின்றால் நீயும் நீடு வாழலாம். இதுவே நம் உடலால் செய்யும் சிறந்த வழிபாடு.
ஆறாவது குறளில் உடம்பினாலே (மெய்) வழிபடுவதன் நன்மையை சொல்லப்போகிறார்.
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.”--- குறள் 6; அதிகாரம் – கடவுள் வாழ்த்து
பொறிவாயில் ஐந்தவித்தான் = புலன்களின் மூலம் பெறும் ஆசை அற்றவ(னது); பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் = மெய்யான ஒழுக்க நெறியில் நின்றவர்கள் எக்காலத்தையும் கடந்து நீண்டு வாழ்வார்கள்; நிற்றல் = உடலின் மூலம் ஒழுகுதல்
பொருள்: புலன்களின் மூலம் பெறும் ஆசை அற்றவனது மெய்யான (விருப்பு, வெறுப்பற்ற) ஒழுக்க நெறியில் நின்றவர்கள் எக்காலத்தையும் கடந்து நீண்டு வாழ்வார்கள். இதுவே நாம் இறைக்கு உடலால் செய்யும் வழிபாடு.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments