28/12/2023 (1027)
அன்பிற்கினியவர்களுக்கு:
பிள்ளையார் சதுர்த்தி நாளில் களிமண்ணால் பிள்ளையார் செய்து அவருக்கு கண்ணாக வைக்க குன்றிமணியைத் தருவார்கள். அந்தக் குன்றிமணி முழுக்க சிவப்பாக இருந்தாலும் அதில் கொஞ்சம் கறுப்பு நிறமும் இருக்கும்.
குன்றிமணி ஒரு செடி வகையைச் சார்ந்தது. அதனை அப்ரூஸ் ப்ரிகேடோரியஸ் (Abrus precatorius) என்று ஆங்கிலத்தில் வழங்குகிறார்கள். குன்றிமணியை, ஜெக்விரிட்டி கொட்டை (Jequirity bean) அல்லது ரோசரி பட்டாணி (Rosary pea) என்றும் வழங்குகிறார்கள். இந்தக் கொட்டைகளைக் கொண்டு அந்தக் காலத்தில் பல அணிகலன்களைச் செய்து அணிந்து கொள்வார்களாம். அது மட்டுமல்லாமல் அந்தக் கொட்டைகளைத் தங்கம் மற்றும் வைரக்கற்களை நிறுக்கப் பயன்படுத்தினார்களாம்.
சரி, இப்போது இந்தக் கதையெல்லாம் எதற்கு என்கிறீர்களா? இதோ, வருகிறேன். அழகாக இருக்கும் இந்தக் குன்றி மணிகள் மிகவும் ஆபத்தானவை. இந்த மணியின் புகையே நரம்பு மண்டலத்தைத் தாக்குமாம். இந்த மணியின் உள்ளே உள்ள ஆப்ரின் (abrin) என்னும் நஞ்சு மிகவும் கொடியதாம். இதைக் குறித்து விரிக்காமல் இருப்பது நன்மை பயக்கும். இது நிற்க.
சொல்லவருவது என்னவென்றால் அந்த அழகான குன்றிமணியின் உள்ளே அவ்வளவும் நஞ்சு. அதுவும் மிகக் கொடிய நஞ்சு! இதைக் கவனத்தில் வையுங்கள். நம் பேராசான் சொல்வதைக் கேட்போம்.
கபட வேடம் இடும் கூடா ஒழுக்கத்தினர் புறத்தில் பார்க்கும்போது அழகாகக் கண்ணைக் கவரும் விதமாக இருப்பார்களாம். ஆனால், உள்ளுக்குள் அவ்வளவும் நஞ்சாம். இதற்கு ஓர் உவமை சொல்லவந்த நம் பேராசான் குன்றி மணியைத்தான் உவமையாகச் சொல்கிறார்.
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து. – 277; - கூடா ஒழுக்கம்
புறம் குன்றி கண்டு அனையரேனும் = தோற்றத்தில் கண்ணைக் கவரும் விதமாக இருக்கும் குன்றிமணியைப் போல இருந்தாலும்; அகம் குன்றி மூக்கின் கரியார் உடைத்து = உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் கீழான எண்ணங்களைப் பிரதிபலிக்கும் விதமாக அந்தக் குன்றி மணியின் கருமை நம்மை எச்சரிப்பது போல இருக்கும்.
தோற்றத்தில் கண்ணைக் கவரும் விதமாக இருக்கும் குன்றிமணியைப் போல இருந்தாலும், உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் கீழான எண்ணங்களைப் பிரதிபலிக்கும் விதமாக அந்தக் குன்றி மணியின் ஒரு முனையில் உள்ள கருமை நம்மை எச்சரிப்பது போல இருக்கும். செம்மை, கருமை என்பன குறியீடுகள்.
இங்கே இரண்டு குறிப்புகள். ஒன்று: வெளியே பளபளக்கும் தோற்றம் இருந்தாலும் உள்ளே மறைந்திருப்பது நஞ்சு. இரண்டு: என்னதான் வேடமிட்டாலும் நாம் கூர்ந்து கவனித்தால் உள்ளே ஒளிந்திருப்பதைப் புறத்திலேயே கண்டு கொள்ளலாம்.
புத்திசாலித்தனமான குற்றவாளிகள்கூட தங்கள் குற்றங்களைப் பற்றிய துப்புகளை விட்டுச் செல்கிறார்கள். அதனால் உண்மை வெளிவராமல் போகவே போகாது.
நம் பேராசானின் உவமையை அடித்துக் கொள்ள முடியாது.
பி.கு.: குன்றி மணி சிவப்பு நிறத்தில் மட்டுமல்ல, வெண்மை, பச்சை, மஞ்சள், நீலம் போன்ற பல வண்ணங்களிலும் இருக்கும் என்பது ஒரு கூடுதல் தகவல்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments