07/01/2024 (1037)
அன்பிற்கினியவர்களுக்கு:
பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும். - 296; - வாய்மை
பொய்யாமை அன்ன புகழ் இல்லை = தீமை இல்லாத செயல்களை ஒழுகுவது போல நீங்கா நிலைத்த புகழ் தருவது வேறு ஒன்றும் இல்லை; எய்யாமை எல்லா அறமும் தரும் = மேலும், எல்லா நற்பண்புகளும், பொய்யாமையை ஒழுகுபவரின் தன் முனைப்பு ஏதும் இல்லாமலே அவரிடம் வந்து சேரும்; அறம் = நற்பண்புகள்; எய்யாமை = தன் முனைப்பு ஏதும் இல்லாமலே.
தீமை இல்லாத செயல்களை ஒழுகுவது போல நீங்கா நிலைத்த புகழ் தருவது வேறு ஒன்றும் இல்லை. மேலும், எல்லா நற்பண்புகளும், பொய்யாமையை ஒழுகுபவரின் தன் முனைப்பு ஏதும் இல்லாமலே அவரிடம் வந்து சேரும்.
பொய்யாமை பொய்யாமை ஆற்றுக என்றார் குறள் 297 இல். காண்க 25/10/2023.
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். - 298; - வாய்மை
புறந்தூய்மை நீரால் அமையும் = ஒருவர் தூய்மையாகத் தோற்றமளிக்க, தம் உடலை, நீரைப் பயன்படுத்தி அழுத்தித் தேய்த்துக் குளித்தால் போதும்; அகந்தூய்மை வாய்மையால் காணப்படும் = மனச் சுத்தத்தை அவர்களின் தீமை பயக்காச் சொல்களாலும், செயல்களாலும் அறியலாம்; வாய்மை = பிறர்க்குத் தீமை பயக்காச் சொல்லும் செயலுமாம்.
ஒருவர் தூய்மையாகத் தோற்றமளிக்க, தம் உடலை, நீரைப் பயன்படுத்தி அழுத்தித் தேய்த்துக் குளித்தால் போதும். மனச் சுத்தத்தை அவர்களின் தீமை பயக்காச் சொல்களாலும், செயல்களாலும் அறியலாம்.
சுருக்கமாகச் சொன்னால்:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. - 34; - அறன் வலியுறுத்தல்
பொய்யா விளக்கு (The Light of Truth) என்று இரு குறள்களில் சொல்கிறார். ஒன்று அருளுக்கு; மற்றொன்று பொருளுக்கு!
முதல் விளக்கு - அருள் என்னும் பொய்யா விளக்கு:
சான்றோனாக வேண்டுமா உங்களுக்குத் தேவை அருள் என்னும் பொய்யா விளக்கு. மனத்தில் பொய்யை விட்டொழியுங்கள்.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. – 299; - வாய்மை
எல்லா விளக்கும் விளக்கல்ல = இதைச் செய்தால் அது நமக்கு வழிகாட்டும், அதைச் செய்தால் அப்படி ஆகிவிடலாம் என்று பல திசைகளில் செல்லலாம். ஆனால், அதெல்லாம் சரியான பாதையாக இருக்கும் என்பதை உறுதி செய்ய முடியாது; சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு = உயர வேண்டும் நினைப்பவர் மனத்தில் மாசு இல்லாமல் இருந்தாலே போதும். அதுவே பல வழிகளைக் காட்டி அவரை உயர்த்தும்.
இதைச் செய்தால் அது நமக்கு வழிகாட்டும், அதைச் செய்தால் அப்படி ஆகிவிடலாம் என்று பல திசைகளில் செல்லலாம். ஆனால், அதெல்லாம் சரியான பாதையாக இருக்கும் என்பதை உறுதி செய்ய முடியாது. உயர வேண்டும் நினைப்பவர் மனத்தில் மாசு இல்லாமல் இருந்தாலே போதும். அதுவே பல வழிகளைக் காட்டி அவரை உயர்த்தும்.
இரண்டாம் விளக்கு – பொருள் என்னும் பொய்யாவிளக்கு:
உங்கள் வாழ்வில் இருளினை அறுத்து நினைத்த இடத்தில் நீங்கள் நினைத்த செயல் நடக்க வேண்டுமா, அப்படி என்றால், உங்களுக்குத் தேவை பொருள் என்னும் பொய்யா விளக்கு என்கிறார். காண்க 06/07/2023.
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.” 753; பொருள் செயல்வகை
இந்த இரண்டு குறளையும் இணைத்தால்தான் வாழ்வின் பொருள் நன்றாக இருக்கும் என்கிறார்!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
பொய்யை விட்டொழியுங்கள். .....தேவை பொருள்....In Todays world to earn money in business பொய் has become more or less a rule..than exception...Advertisements etc etc..so ....