21/10/2023 (959)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
ஒழுக்கலாறுகளை வாழ்வியலுக்காக, குறிப்பாக, இல்லறவியலுக்காக, விரிக்கும் பொருட்டு அடுத்து வரும் அதிகாரங்களை அமைக்கிறார்.
ஒழுக்கமுடைமை 14 ஆவது அதிகாரம். இல்லறத்தில் குழப்பம் விளையக் கூடாது என்பதற்காக பிறனில் விழையாமை (15 ஆவது அதிகாரம்). பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதனால் பொறுமையின் முக்கியத்துவத்தைச் சொல்ல 16 ஆவது அதிகாரமாக பொறையுடைமை.
அதை அடுத்து, மன நோயான அழுக்காறு என்னும் ஒரு பாவியைத் தவிர்க்க அழுக்காறாமை (17 ஆவது). அழுக்காறின் குழந்தை “பிறர் பொருளை எப்படியாவது தட்டிப் பறித்தல்”. அதனைத் தவிர்க்க வெஃகாமை (18 ஆவது). தட்டிப் பறிக்க இயலாதபோது புறங்கூறிப் பழித்துப் பேசி தனது மனக்கோணல்களை வெளிப்படுத்தும் சிறிய புத்தி. அதனை இணம் கண்டு கொண்டு தவிர்த்து ஒழுக புறங்கூறாமை (19 ஆவது). புறங்கூற இயலாதபோது மனமானது பயனில பேசும். பயனில என்பது தீயன என்று விரியும். அதனைத் தவிர்க்க பயனில சொல்லாமை (20 ஆவது). தீயச் சொல்களில் இருந்து தீயச் செயல்கள் பிறக்கும். அவ்வாறு நிகழின் அது அழிவிற்கு இட்டுச் செல்லும். எனவே, அதனைத் தவிர்க்க தீவினையச்சம் (21 ஆவது அதிகாரம்). இப்படித் தவிர்க்கப்பட வேண்டிய ஒழுக்கலாறுகளை நம் பேராசான் அமைத்துள்ளார். விலக்கியன ஒழித்தல் அறம்.
இந்த அதிகாரங்களைத் தொடர்ந்து, விதித்தனவற்றை இரண்டு அதிகாரங்களில் சொல்கிறார். அஃதாவது, ஒப்புரவு அறிதல் (22 ஆவது) மற்றும் ஈகை (23 ஆவது). இந்த ஒழுக்கலாறுகளைக் கடைபிடித்தால் வரும் பயன் புகழ். எனவே, புகழின் சிறப்பை ஒரு அதிகாரத்தில் (24 ஆவது அதிகாரம்) சொல்லி இல்லறவியலை நிறைவு செய்கிறார்.
ஒரு முள் நிறைந்தப் பலாப் பழத்தை, நமக்காக, அழகாகப் பிரித்து, அதில் நிறைந்திருக்கும் கட்டுகளையும் விலக்கி, அந்தச் சுளைகளையும் உறித்து அதிலிருக்கும் கொட்டைகளையும் நீக்கி, அதில் அங்காங்கே தேனினையும் தடவி சாப்பிட ஏதுவாக அளிக்கும் முறைமை அலாதியானது. அலாதி என்றால் தனித்துவமானது, சிறப்பானது. அல் + ஆதி = அலாதி.
இப்படி ஒரு நூல் உலக மொழிகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்குமா என்பது ஐயம்தான். தோன்றியிருந்தாலும் தொடர்ந்து இருக்குமா என்ற கேள்விக்கான விடை நமக்குத் தெளிவு!
எண்ணிலடங்கா உரைகள்; உலக அறிஞர்களின் பல் வேறு மொழி பெயர்ப்புகள்; இன்றளவும் பல்லாயிரமானவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரு நூல். குழந்தைகளுக்கும் சொல்லிப் புரிய வைக்கும் முறைமையில் கட்டமைக்கப்பட்ட ஒரு தொன்மையான நூல் நம் திருக்குறள் என்பதில் மாற்றுக் கருத்து அறிஞர் பெருமக்களிடம் இல்லை.
இந்த நூலை ஒரு முறையாவது வாசிக்கும் நோக்கில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். வாசிப்பு மட்டுமல்ல வாழ்வியல் நெறியாக மாற்றவும் முயல்கிறோம்.
சரி, நாம் பிறனில் விழையாமையில் முதல் குறளைப் பார்ப்போம்.
பிறர் துணையை (ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம்) Pet பண்ணுவது பேதைமை என்கிறார். Pet என்றால் செல்லப் பிராணி!
ஆம் அப்படித்தான் சொல்கிறார். பெட்டொழுகும் என்கிறார்! இந்தக் குறளில் ஒரு நுணுக்கத்தையும் வைக்கிறார். அஃதாவது, மக்களில் சிலர் இன்ப நுகர்ச்சியை மட்டுமே விரும்புபவர்கள் இருக்கக்கூடும். அந்த இன்ப நுகர்ச்சியைப் பயன்படுத்தி அவர்களை விட்டில் பூச்சிகளாக விழுங்க தன் வீட்டிலேயே இருந்து கொண்டு வலையை விரித்து வைப்பவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு இந்தக் குறள் இல்லை என்கிறார்!
“பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்.” --- குறள் 141; அதிகாரம் – பிறனில் விழையாமை
பிறன்பொருளாள் = பிறரின் துணையை, இணையை; பெட்டொழுகும் = தன் செல்லப் பிராணியாக (கைப்பாவையாக) வைத்துக் கொள்ளும்; பேதைமை = அறிவற்றச் செயல்; ஞாலத்து = இவ்வுலகத்தில்; அறம் பொருள் கண்டார்கண் இல் = அறத்தையும், பொருளையும் போற்றுபவர்களிடம் இருக்காது.
பிறரின் துணையை, இணையை தன் செல்லப் பிராணியாக, கைப்பாவையாக வைத்துக் கொள்ளும் அறிவற்றச் செயல், இவ்வுலகத்தில் அறத்தையும், பொருளையும் போற்றுபவர்களிடம் இருக்காது.
பேதைமை என்பது ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் என்றார் குறள் 831 இல்.
அஃதாவது, துன்பத்தை வாங்கிக் கொண்டு தம் பொருளையும் இழப்பது பேதைமை. காண்க 13/11/2021 (263).
நாளை தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம், நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
பி.கு: பெட்டு என்றால் பொய், மயக்குச் சொல், சிறப்பு, மதிப்பு என்று பொருள் சொல்கிறது அகராதி.
Comments