24/10/2023 (962)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
அங்கே இருப்பது என்னிடம் இல்லையே, இங்கே இருப்பது என்னிடம் இல்லையே என்று ஏங்கிக் கொண்டு இருக்கும் மனம். கையில் இருப்பதைக் கொண்டு நிறைவு கொள்ள விடாது. இந்த எண்ணங்களை அப்படியே விட்டுவிட வேண்டும்.
இருப்பதைக் கொண்டு எப்படி வாழ்க்கையைச் செம்மையாக்கலாம் என்ற எண்ணங்களைச் செயல்படுத்தினால் ஏற்றம்வரும்.
இல்லையென்றால் ஏக்கம் வரும்; ஏக்கத்தினால் பொறாமை வரும்; பொறாமையினால் அறத்தை மீறியச் செயல்களைச் செய்யத் தூண்டும்; ஒழுக்கம் கெடும்! இது அறிவுள்ளவர்கள் செய்யும் செயல் இல்லை என்கிறார் நம் பேராசான்.
பிறன் மனை நோக்காது இருப்பது பேராண்மை என்கிறார். அஃதாவது பிறரின் துணையைக் கவர முயலாமல் இருப்பதே ஒரு பெரிய செயல்.
சான்றோர் என்று உங்களைச் சான்றாக எடுத்து, அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா, அப்படியானால் பிறன் மனை நோக்காமல் இருக்கும் அறத்தைக் கடைபிடியுங்கள். அது மட்டுமல்ல, அது ஒரு சிறந்த ஒழுக்கமாக ஒழுக வேண்டிய ஒன்று என்கிறார்.
“பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.” --- குறள் 148; அதிகாரம் – பிறனில் விழையாமை
பிறன்மனை நோக்காத பேராண்மை = பிறரின் துணையைக் கவர முயலாது இருப்பது ஒரு பெரிய செயல்; சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு = உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கு அது ஒரு அறம் மட்டுமல்ல, எப்போதும் கடை பிடிக்க வேண்டிய ஒழுக்குமும் ஆகும்.
பிறரின் துணையைக் கவர முயலாது இருப்பது ஒரு பெரிய செயல். உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கு அது ஒரு அறம் மட்டுமல்ல, எப்போதும் கடை பிடிக்க வேண்டிய ஒழுக்குமும் ஆகும்.
சான்றோர் ஆக நமது ஐயன் காட்டும் ஒரு வழி இது.
மோஸே, மோசஸ், நபி மூசா என்றெல்லாம் வழங்கப் பெறும் பெருமானார் யூதர்களின் புனித நூல், எபிரேய விவிலியம், திருக்குர்ஆன் மற்றும் பகாய் சமய நூல்களின் படி மிக முக்கியமான இறைத்தூதர்.
யூதர்களின் (Jews) புனித நூலான தோராவை (Torah), அவர் இறைவனின் வார்த்தைகளைக் கேட்டு எழுதினார் என்கிறார்கள். ஆண்டவன் நேரடியாக இவருக்குத் தன் கைப்பட எழுதிய பத்துக் கட்டளைகளையும் வழங்குகிறார். முதல் நான்கு கட்டளைகள் இறைவனுக்கும் மனிதனுக்குமான உறவைப் பற்றியது. அடுத்த ஆறு கட்டளைகள் மனிதர்களுக்குள் இருக்க வேண்டிய உறவுகளைக் குறித்தது.
சரி, இதெல்லாம் இப்போது எதற்கு என்கிறீர்களா? தொடர்பு இருக்கிறது. இஸ்ரேலியா மற்றும் பாலஸ்தீனத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள இன்றைய நிலையில் இந்தப் பத்துக் கட்டளைகளைக் கவனத்தில் கொள்வது முக்கியம். இது ஒரு காரணம்.
இரண்டாம் காரணம், இந்தப் பத்துக் கட்டளைகளில் பத்தாவது கட்டளையாக இறைவன் சொன்னது “பிறன் மனையை விரும்பாதே” என்பதுதான். மேலும் அதனை விளக்கும்போது மார்க்க அறிஞர்கள் சொல்வது என்னவென்றால் தனக்குச் சொந்தமல்லாத எதனையும் விரும்பும்போது அந்தப் பேராசை முன்னரே குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளான கொலையைத் தவிர், விபச்சாரம் செய்யாதே, களவு செய்யாதே போன்ற கட்டளைகளை மீறத் தூண்டும். எனவே, இந்தப் பத்தாவது கட்டளை மிக முக்கியமான கட்டளை என்கிறார்கள்.
ஆகையினால்தான் நம் பேராசான், “பிறன் மனை நோக்காப் பேராண்மை” என் கிறார்.
இந்தப் பரந்த கடல் சூழ் உலகில், நல்லவைகளை அனுபவிக்கத் தகுதியானவர்கள் யார் என்று கேட்ப்பீர்களானால் பிறன் துணையின் தோளில் சாய்ந்து இன்பம் நுகர விரும்பாதவர்கள் என்கிறார் நம் பேராசான்.
“நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்.” --- குறள் 149; அதிகாரம் – பிறனில் விழையாமை
நாமநீர் வைப்பின் = கடல் சூழ் உலகில்; நலக்குரியார் யாரெனின் = நலத்திற்கு உரியவர்கள் யார் என்றால்; பிறற்குரியாள் தோள் தோயாதார் = பிறரின் துணையின் மீது விருப்பம் கொண்டு அவர்களின் தோள்களில் சாய்ந்து இன்பம் துய்க்க விரும்பாதவர்கள்.
பத்தாவது கட்டளைக்கு நம் பேராசானின் பத்து குறள்கள் சிந்திக்கத் தக்கன.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments