06/02/2024 (1067)
அன்பிற்கினியவர்களுக்கு:
உண்மையான உண்மையை உணர்தல் மெய்யுணர்தல் என்று கண்டோம். பற்றுகளை வளர்த்துக் கொண்டே போனால் நாம் இந்த உலகைவிட்டு அமைதியாகப் பிரிய முடியாது என்று துறவறவியலில் உள்ளவர்களுக்குத் தெளிவு படுத்தினார்.
செம்பொருள் என்னும் சொல்லை நம் பேராசான் இரண்டு குறள்களில் பயன்படுத்துகிறார். இனியவை கூறல் என்னும் அதிகாரத்தின் முதல் பாடலை நாம் முன்பே பார்த்துள்ளோம். காண்க 17/09/2023. மீள்பார்வைக்காக:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். - 91; - இனியவை கூறல்
இன்சொல்லாவன: அன்பு கலந்து, நெஞ்சில் வஞ்சனையான எண்ணம் ஏதும் இல்லாமலும், உண்மைப் பொருளை உணர்த்தும் வகையிலும் சொல்லும் சொல்கள்தாம்.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு. – 358; - மெய்யுணர்தல்
பிறப்பென்னும் பேதைமை நீங்க = இந்தப் பிறப்பிலே நாம் படைத்த பொருள்கலெல்லாம் நீடித்து நிலைக்கும் என்று பற்று கொள்ளுதலாகிய பேதைமை நீங்கச்; சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு = சிறப்பு என்று சொல்லப்படுகிற செம்பொருளைக் காண முடியும். அதுவே, மெய்யறிவு.
இந்தப் பிறப்பிலே நாம் படைத்த பொருள்கலெல்லாம் நீடித்து நிலைக்கும் என்று பற்று கொள்ளுதலாகிய பேதைமை நீங்கச் சிறப்பு என்று சொல்லப்படுகிற செம்பொருளைக் காண முடியும். அதுவே, மெய்யறிவு.
உண்மையான உண்மையே செம்பொருள். அறவழி நடத்தலே செம்பொருளைக் காண வழி.
மெய்யுணர்தல் அதிகாரம் முழுக்கத் தத்துவ விசாரம்தான். இந்த அதிகாரத்தில் உள்ள குறள்களுக்குப் பல கோணங்களில் அறிஞர் பெருமக்கள் உரை கண்டுள்ளனர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு காட்சியைத் (தரிசனம்) தரும்.
என் ஆசிரியப் பெருந்தகை விளக்கியவற்றை வைத்துக் கொண்டு என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில் விளக்கியுள்ளேன்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments