14/11/2023 (983)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
ஈகை அதிகாரத்தில் கடைசிக் குறளில், மரணம்(மரண பயம்) என்பதைப் போன்ற கொடுமை இல்லை என்றார். இருப்பினும், வறியவன் ஒருவன் ஒரு உதவி கேட்டு நாம் உதவ முடியாமல் போகும் போது மரணம்கூட இனிது என்றார். காண்க 13/07/2021 (140).
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை. - 230; - ஈகை
அதே போன்று, புறம் பேசித்தான் உயிர் வளர்க்க வேண்டுமென்றால், அதைவிட சாதல் ஒருவர்க்குப் பெரும் பயன் அளிக்கும் என்கிறார்.
புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும். --- குறள் 183; அதிகாரம் – புறங்கூறாமை
புறம் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலிற் = மற்றவர்களைப் பற்றி அவதூறாக, அவர்கள் இல்லாதபோது பேசி, அதனால் எல்லாரும் அவனை நம்பத்தகாதவன், பொய்யன் என்று ஒதுக்கி அவனின் வாழ்க்கை பொய்த்துப் போவதைவிட; சாதல் அறங்கூறும் ஆக்கந்தரும் = அவன் உயிரைவிடுவது அவனுக்கும் பிறர்க்கும் நன்மை பயக்கும். அஃதாவது, அவன் அறம் கூறும் நல்ல பயன்களுக்கு வித்தாவான்.
மற்றவர்களைப் பற்றி அவதூறாக, அவர்கள் இல்லாதபோது, பேசி அதனால் எல்லாரும் அவனை நம்பத்தகாதவன், பொய்யன் என்று ஒதுக்கி அவனின் வாழ்க்கை பொய்த்துப் போவதைவிட, அவன் உயிரைவிடுவது அவனுக்கும் பிறர்க்கும் நன்மை பயக்கும். அஃதாவது, அவன் அறம் கூறும் நல்ல பயன்களுக்கு வித்தாவான்.
வள்ளுவப் பெருமான் மிகக் கடுமையாகச் சொல்லும் குறள்களில் இது ஒன்று.
புறம் பேசுவதைவிட உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்கிறார்.
நம்மாளு: ஐயா, என்னதான் நம் பேராசான் சொன்னாலும் நாமென்னவோ ஒன்று சேர்ந்தால் மூன்றாவது ஆளைப் பற்றிப் பேசுவது என்பது நமது வழக்கமாகவும் ஆகியுள்ளது. அவரைப் பற்றியக் கருத்துகளை நாம் எவ்வாறுதாம் வெளிப்படுத்துவது?
ஆசிரியர்: ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றி பேசவே கூடாது என்பதல்ல நம் பேராசான் சொல்வது. அதே சமயம், அவரைப்பற்றி அவதூறுகளையும், அவரைத் தாழ்த்திப் பேசினால் மற்றவர்கள் மகிழ்வார்கள் என்ற எண்ணத்திலும், அல்லது நம் மன அரிப்புகளைச் சொறிந்து கொள்ளவும் அவரை இழிவாகப் பேசுவதுதாம் புறம்.
ஒருவரைப் பற்றிய உண்மையானக் கருத்துகளையோ அல்லது அவரைக் கூறித்த தகவல்களையோ, எந்தவித உள்நோக்கமும் இன்றி, சரி பார்த்துக் கொள்ளப் பேசுவது புறமாகா.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments