top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

பிறர்நாணத் தக்கது ... 1018, 29/05/2024

29/05/2024 (1180)

அன்பிற்கினியவர்களுக்கு:

பழி வந்துவிடுமோ என்று பெரும்பாலோனோர் அஞ்சும் கீழான செயல்களைச் செய்ய ஒருவன் அஞ்சாவிட்டால் அவன் நாணுடைமை என்னும் வேலியைத் தகர்த்துவிட்டவன் என்பது பொருள். அப்படி அந்த வேலியைத் தாண்டியவனிடம் அறமே நாணுமாம்! இந்தக் குறளை கவித்துவமாகச் சொல்கிறார்.

 

பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்

அறநாணத் தக்க துடைத்து. – 1018; - நாணுடைமை

 

பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் = பழி வந்துவிடுமோ என்று பெரும்பாலோனோர் அஞ்சும் கீழான செயல்களைச் செய்ய ஒருவன் அஞ்சாவிட்டால்;  அறம் நாணத் தக்கது உடைத்து = அடடா, இவனிடமா நாம் அறத்தை எதிர்பார்த்தோம் என்று வெட்கி அறக்கூறுகள் ஏதேனும் அவனிடம் இருக்குமாயின் அவையும் மறையும்.

 

பழி வந்துவிடுமோ என்று பெரும்பாலோனோர் அஞ்சும் கீழான செயல்களைச் செய்ய ஒருவன் அஞ்சாவிட்டால், அடடா, இவனிடமா நாம் அறத்தை எதிர்பார்த்தோம் என்று வெட்கி அறக்கூறுகள் ஏதேனும் அவனிடம் இருக்குமாயின் அவையும் மறையும்.

 

அஃதாவது, இந்த உலகம் ஒருவனை விலக்கிவைக்க குணத்தில் சிறிய விதிமீறல் போதும் என்கிறார். அது ஒரு திருகுச்சுழல் போல அவனை இன்னும் கீழுக்குத் தள்ளி அவனிடம் கொஞ்சநஞ்சம் இருக்கும் நல்ல குணங்களையும் அடியோடு மறைந்து போக வைக்கும்.

 

பட்டத்தின் கயிறு அறுந்து நம் கை விட்டுப் போகும்போது உடனே, அதனைத் தாவிப் பிடித்திடல் வேண்டும். 

 

இது நிற்க.

 

மனுசன் என்றால் அவனுக்கு ஒரு கொள்கை இருக்கணும் என்பார்கள். அது என்ன கொள்கை? ஆங்கிலத்தில் அதனை Principle என்பார்கள்.

 

நம்மாளு: ப்ரின்சிபால் (Principal) தெரியும். அது என்ன Principle? 

 

மகாத்மா காந்தியாரைக் கேட்டால்:

 

A principle is the expression of perfection, and as imperfect beings like us cannot practise perfection, we devise every moment limits of its compromise in practice.

 

முழுமையின் வெளிப்பாடாகக் கொள்கை இருக்க வேண்டும். ஆனால், முழுமையை முழுமையாக அடைவது என்பது பல்வேறு காரணங்களால் பெரும்பாலான சமயங்களில் இயலாததும்கூட. எனவே, நாம் சருக்கிக் கீழே விழ வாய்ப்புகள் அதிகம். அதனை மனத்தில் கொண்டு நாம் ஒரு வரையறையை உருவாக்கிக் கொள்வதே கொள்கை.

 

கில்ராய் ஜே ஓல்ட்ஸ்டெர் (Kilroy J Oldster) என்பார் கொள்கையின் வரையறையை விரிக்கிறார்.

 

A principle is the expression of perfection. Imperfect beings like us cannot practice perfection…

என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்கிறார்.

 

I shall allow for error in judgment by seeking counsel from all sources of knowledge.

Failing is critical for self-growth because it causes a principled person to think.

A person’s greatest failures are their portals to discovery.

The mind is a fire that a person must kindle; a person must seek constant development in order to stave off intellectual, spiritual, and moral morbidity.

A person cannot apply any principle to guide human behavior without testing its concept against present realities or it will result in absurdities.

 

அற மூலங்களை ஆய்ந்து நமக்கான கொள்கையை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் செல்லும் பாதையில் தோல்விகள் வருவதனைத் தவிர்க்க இயலா. ஆனால், அந்தத் தோல்விகள்தாம் கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களை சிந்திக்க வைத்து நல்வழிபடுத்தும்.

கொள்கை என்னும் தீயை அணைந்து போகவிடாமல் மனத்தை எப்பொழுதும் கூர்மையாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அறிவுசார் கருத்துகள் இவை என்றும், ஆன்மீகக் கோட்பாடுகள் அவை என்றும் தார்மீகக் கடமைகள் மிக முக்கியம் என்றும் நம் பாதையை கொள்கையில் இருந்து திருப்பிவிட்டுவிடும்.

அதே சமயம், நம் கொள்கைகளை யதார்த்த நடைமுறைகள் என்னும் உரைகல்லில் உரசிப் பார்த்துத் தொடர வேண்டும். இல்லையென்றால் அவை பயனில்லாமல் போகும்.

 

நம்மாளு: ஆக, கொள்கை என்பது நமக்கு நாமே உண்டாக்கும் ஒரு பாதுகாப்பு வளையம். சரியா ஐயா?

 

மிகச் சரி. இதுதான் நம் நெறி என்று வகுத்துக் கொள்வது கொள்கை.

 

நம்மாளு: ஐயா, இன்றைக்கு ஏன் கொள்கை குறித்த உரையாடல்?

 

ஆசிரியர்: நாணுடைமையில் அடுத்து வரும் குறளில் கொள்கையை நாணுடைமையோடு ஒப்பிடப் போகிறார் அதனால்.

 

நாளைத் தொடர்வோம் என்றார்.

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 

Recent Posts

See All

Comments


Post: Blog2_Post
bottom of page