top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

பீலிபெய் சாகாடும் ... 475

05/11/2022 (611)

“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” – இது ஆயிரங்காலத்து பழமொழி.


இதன் ஆங்கில வடிவம்தான் “Make hay while the sun shines”.


Hay என்றால் வைக்கோல். சூரியன் இருக்கும் போதே புல்லைக் காய வைத்து வைக்கோலாக ஆக்கி வைத்துக் கொள். பின்னாளில், உனது மாடுகளுக்கு அது பயன் தரும் என்பது நேரிடையான பொருள்.


காலத்தைச் சரியாக பயன் படுத்திக் கொள் என்பது உள்பொருள். இதைச் சொல்வதற்கு பதிலாக “தக்கப் பருவத்தில் வைக்கோலை தயாரி” என்று பிறிதொன்றைச் சொல்வது என்பதுதான் தமிழ் இலக்கணத்தில் “பிறிது மொழிதல் அணி”. இதனை “நுவலா நுவற்சி” என்றும் “ஓட்டு அணி” என்று அழைப்பவர்களும் இருக்கிறார்களாம். இதனை பரிமேலழகப் பெருமான் சொல்லிவிட்டு கடந்து செல்கிறார்.


தமிழ் பழமொழிக்கு வருவோம். “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்றால் என்ன? இதுவும் பிறிது மொழிதல் அணிதான்!


சொல்லவருவதும் புரிவதுபோல்தான் இருக்கிறது. அறுவடை செய்த நெற்கதிர்களைக் கொண்டு வந்து களத்தில் அடிப்பார்கள். இதனைப் போரடித்தல் என்பார்கள். கட்டு, கட்டாக அதாவது போர், போராக களத்தில் அடிக்க நெல் மணிகள் உதிர்ந்து விழும். அதனுடன் சேர்ந்து கழிக்க வேண்டிய பதர்/சாவிநெல்லும் விழும்.


இந்த போரடித்தலை காற்று அடிக்கும்போது செய்தால், இந்த சாவி நெல்சிறிது தூரம் தள்ளியும், நல்ல நெல்மணிகள் அருகிலும் விழும். சுலபமாக அள்ள வேண்டியதை அள்ளவும், தள்ள வேண்டியதைத் தள்ளவும் செய்யலாம்.


ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பாருங்க இதுவும் பிறிது மொழிதல் அணிதான்!


இது தவிர “தூற்றல்” என்பதைத் தனியாகவும் செய்வார்களாம்.


இந்த தமிழ் பழமொழி சொல்வதும் காலத்தைப் பயன் படுத்திக்கொள் என்னும் உள்ளுறைப் பொருளைத்தான்.


பெரும்பாலான தமிழ் பழமொழிகளில் மூன்று பொருள்கள் இருக்குமாம். ‘நேர் பொருள்’, ‘உள்ளுறைப் பொருள்’, இது தவிர ‘மறை பொருள்’ என்பதும் இருக்கும்.


“காற்றுள்ளபோதே தூற்றிக்கோள்” என்றால் உன் உடம்பில் மூச்சுக் காற்று நன்றாக இயங்கிக் கொண்டு இருக்கும் போதே விதித்ததைச் செய்து, விலக்க வேண்டியதை விலக்கிக் கொள். அவ்வாறுசெய்தால் பின்னாளில் வருந்தத் தேவையில்லை. முச்சுதான் மந்திரமாம்! இது மறை பொருள்.


உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்

கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்

விருத்தரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்

அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.” --- சிவ வாக்கியப் பெருமான்


இந்தப் பாடலை மட்டும் சொல்லிவிட்டு எனது ஆசிரியர் மேலும் விரிக்கவில்லை.


இது நிற்க.


என்ன செய்தி எங்கெங்கோ சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறாய் என்றுதானே நினைக்கிறீர்கள். எல்லாப் புகழும் என் ஆசிரியப் பெருமானுக்கே!


அவர் என்ன கூறினார் என்றால் இந்த வலியறிதல் அதிகாரத்தில் பல செய்திகளை “பிறிது மொழிதல் அணி” கொண்டுதான் நம் பேராசான் உணர்த்துகிறாராம்.


முதலாவதாக, மயில் பீலிகள் - அதாங்க மயில் இறகு/இறக்கை/தோகை என்று சொல்கிறோமே அது எவ்வளவு கணம் இருக்கும். காற்றிலேயே பறக்கும் அளவுக்குத்தான் அதன் எடை இருக்கும்.


மயில் இறகுதானே என்று ஒரு வண்டியில் மேலும், மேலும் ஏற்றிக் கொண்டே இருந்தால் ஒரு சமயம் அந்த எடையில்லா மயில் இறகுகளே வண்டியின் அச்சினை (axle) முறித்துவிடும் என்கிறார் நம் பேராசான்.


பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.” --- குறள் 475; அதிகாரம் – வலியறிதல்


சாகாடு = வண்டி; பீலி = மயில் தோகை; பீலி பெய் சாகாடு = பீலி கொட்டப்பட்டுள்ள வண்டி; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் = மயில் தோகைகள்தானே என்று மிகவும் அதிகமாக ஏற்றிக் கொண்டே இருந்தால்; அச்சு இறும் = அந்த வண்டியின் அச்சானது அந்த எடையில்லா மயில் தோகைகளின் கூட்டு எடையால் முறிந்துவிடும் அபாயம் உள்ளது.


மயில் தோகைகள்தானே என்று மிகவும் அதிகமாக ஏற்றிக் கொண்டே இருந்தால், அந்த வண்டியின் அச்சானது, அந்த மயில் தோகைகளின் கூட்டு எடையால் முறிந்துவிடும் அபாயம் உள்ளது.


என்ன சொல்ல வருகிறார் நம் பேராசான்?


சிறு, சிறு பகைகள்/தவறுகள்தானே என்று சேர்த்துக் கொள்ளாதே. அது எல்லாம் ஒரு நாள் உன்னைச் சேர்ந்து தாக்கும். அப்போது, அது ஒரு மிகப் பெரிய சவாலாக மாறிவிடும் என்கிறார்.


மேலும் பல செய்திகள் சொன்னார் ஆசிரியர். மறை பொருள்கள் பல உண்டாம். காலத்தின் அருமை கருதி பல செய்திகளைத் தவிர்த்துவிட்டேன். பொறுத்தருள்க.


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்





Comentários


Post: Blog2_Post
bottom of page