14/06/2024 (1196)
அன்பிற்கினியவர்களுக்கு:
புலவி என்பது இணையர்கள் இருவரிடையே உரிமையில் எழும் கோபம்.
புலவி என்றால் ஊடுதல், பொய்யான கோபம், செல்லமான கோபம் என்றெல்லாம் அகராதி பொருள் சொல்லும். பொருள்படும்.
இல்லற வாழ்வில் புலவி என்பது உரிமையைக் (possessiveness) குறிக்கும். அளவோடு இருந்தால் மகிழ்ச்சி; அளவிற்கு அதிகமானால் மகிழ்ச்சி காணாமல் போகும்.
ஒருவரை ஒருவர் சீண்டிப் பார்த்து மகிழ்வது என்பது தவிர்க்க முடியாத ஒரு விளையாட்டு. அதை மிகவும் உள்ளார்த்தமாக எடுத்துக் கொண்டு பலர் வாழ்க்கையைக் குழப்பிக் கொள்கிறார்கள். இதனைத் தவிர்க்க நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நகைச்சுவை உணர்வு வளர மனமானது தளர்வாக இருக்க வேண்டும். மனம் தளர்வாக இருக்க நிறைவான எண்ண ஓட்டம் இருக்க வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை (inferiority complex) மற்றும் நான் மற்றவரைவிட உயர்ந்தவன் என்னும் உயரிய மனப்பான்மை (superiority complex) இரண்டும் இல்லாமல் இருப்பதுதான் நிறைவான எண்ண ஓட்டம்.
இருப்பதைக் கொண்டு வளர்வோம் என்று மனத்தில் நிறைவு ஏற்பட்டால் எண்ணமும் சீராகும்!
அடுத்த வீட்டை எட்டிப் பார்த்தால்:
பட்டு:
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவையா வாங்கிக்கறா
பட்டுப் பொடவையா வாங்கிக்கறா …
கிட்டு:
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி
வாங்கறாண்டி..
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கு ஏதடி?
பட்டு புடவைக்கு ஏதடி?
பட்டு:
நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை
நட்டுண்டா நேக்கு?
எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு
கிட்டு:
சட்டியிலே இருந்தா ஆகப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு?
பட்டு:
எப்போ இருந்தது இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு .... உக்கும் …
கிட்டு:
ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டூஉ…
பட்டு:
பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டூஉ…?
கிட்டு:
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டூஉ…
பட்டு:
என்னத்தை செய்வேள்?
கிட்டு:
சொன்னத்தை செய்வேன்
பட்டு:
வேறென்ன செய்வேள்?
கிட்டு:
அடக்கி வெப்பேன் …
பட்டு:
அதுக்கும் மேலே?
கிட்டு:
ம்ம்ம் பல்லை உடைப்பேன்
பட்டு:
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?
கிட்டு:
பட்டு, அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
பட்டு நமக்கேண்டி? பட்டு நமக்கேண்டி?
இந்தப் பாடல் எதிர் நீச்சல் திரைப் படத்தில் கவிஞர் வாலி அவர்களின் கற்பனையில், மெல்லிசை மாமணி வி. குமார் அவர்களின் இசையில் இயக்குநர் இமயம் கே. பாலசந்தர் கை வண்ணத்தில் 1968 இல் உருவானது.
சரி, நாம் குறளுக்கு வருவோம். அவள் தம் மனத்துக்குச் சொல்லிக் கொள்கிறாள். அவர் வந்தவுடன் தழுவிக் கொள்ளாதே; அவர் சிறிது நேரம் தவிக்கட்டும்; அதனைக் கண்டு களிப்போம் என்கிறாள். சிறிது நேரம் என்பதனை அடிக்கோடு இட்டுக் கொள்ள வேண்டும்.
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது. – 1301; - புலவி
புல்லுதல் = தழுவுதல்; புல்லாது = தழுவாமல்; புலத்தை = ஊடலை நீட்டுவாயாக;
அல்லல் நோய் அவர் உறும் காண்கம் சிறிது = காம நோயினால் அவர் அனுபவிக்கப் போகும் அந்தத் தவிப்பினைச் சிறிது நேரம் இரசிப்போமாக; புல்லாது இரா அப் புலத்தை = அதுவரை சற்று அவரைத் தழுவாமால் இருந்து அந்த ஊடலைச் சிறிது நீட்டுவாயாக.
காம நோயினால் அவர் அனுபவிக்கப் போகும் அந்தத் தவிப்பினைச் சிறிது நேரம் இரசிப்போமாக; அதுவரை சற்று அவரைத் தழுவாமால் இருந்து அந்த ஊடலைச் சிறிது நீட்டுவாயாக.
அடுத்து வரும் குறளில் அந்தச் “சிறிது” என்பதனை வரையறுக்கிறார்.
புலவி என்பது உணவிற்கு உப்பினைப் போலச் சுவை கூட்டுவதாக இருக்க வேண்டும். உப்பில்லாவிட்டவிலும் சரி, உப்பு மிகுந்தாலும் சரி சுவை இருக்காது. உப்பு மிகுந்துவிட்டால் அந்தச் சண்டையைத் தூக்கி வைத்துவிட்டு ஆக வேண்டிய காரியத்தைப் பார்க்க வேண்டும் என்றார்.
இந்தக் குறளை நாம் முன்பே சிந்தித்துள்ளோம். காண்க 23/12/2021. மீள்பார்வைக்காக:
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல். - 1302; - புலவி
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்; கலவியின் சுகம் புலவியில் தெரியும்.
நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments