top of page
Search

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ ... 1267, 1268, 19/04/2024

Updated: Apr 19

19/04/2024 (1140)

அன்பிற்கினியவர்களுக்கு:

அவளுக்குத் தலை கால் புரியவில்லை. அவர் வரட்டும்! வந்த உடன் என்ன செய்யலாம் என்று யோசிக்கிறாள். அவளால், ஒரு முடிவிற்கு வர இயலவில்லை.

 

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்

கண்ணன்ன கேளிர் வரின். – 1267; - அவர்வயின் விதும்பல்

 

கண் அன்ன கேளிர் வரின் = என் கண் போன்ற கண்ணாளன், அஃதாவது, எனக்கு உரியவர் (கேளிர்) வருவது உறுதியாகிவிட்டது. வந்த உடன்;

புலப்பேன் கொல் = அவருடன் சண்டை பிடிப்பேனோ?; புல்லுவேன் கொல்லோ = இல்லை அவரின் மீதுள்ள கவர்ச்சியால் இழுக்கப்பட்டு அவரைத் தழுவுவேனோ?; கலப்பேன் கொல் = இல்லை, இல்லை அவருடன் கூடி இருந்து இந்த உலகை மறப்பேனோ? என்ன செய்வேன் என்று தெரியவில்லையே!

 

என் கண் போன்ற கண்ணாளன், அஃதாவது, எனக்கு உரியவர் வருவது உறுதியாகிவிட்டது. வந்த உடன் அவருடன் சண்டை பிடிப்பேனோ? இல்லை அவரின் மீதுள்ள கவர்ச்சியால் இழுக்கப்பட்டு அவரைத் தழுவுவேனோ? இல்லை, இல்லை அவருடன் கூடி இருந்து இந்த உலகை மறப்பேனோ? என்ன செய்வேன் என்று தெரியவில்லையே!

 

அவளை மேலும் தொடர்வதற்கு முன், நாம் ஆண்டாள் நாச்சியாரைப் பார்ப்போம். திருப்பாவையில் முதல் 26 பாடல்களில், ஆண்டாள் நாச்சியார், நெஞ்சிற்கு நெருக்கமானவனை, நாரயணன், பரமன், உலகளந்த உத்தமன், மாயன், தேவாதி தேவன், மாதவன், கேசவன் என்றெல்லாம் அழைத்துப் பாடல்களைப் பாடியிருப்பாள்.

 

என்ன இவன் நம்மைத் திரும்பிப் பார்க்கவில்லையே என்று யோசிப்பாள். மேற் சொன்ன பெயர்களெல்லாம் ஊரார் அழைப்பன என்று கண்டு கொண்டு, சிறு வயதிலிருந்து அவனை அவள் அழைக்கும் பெயரான, அவனுக்கும் இனிக்கின்ற பெயரான “கோவிந்தா” என்பாள் 27 ஆம் பாடலில்.

 

எனக்கு மிகவும் நெருக்கமானவனை என்னென்னவோ பெயரிட்டு அழைத்துவிட்டோமே என்று வருந்துவாள். கோவிந்தா என்ற உடன் அவன் நெருங்கிறான். அந்த உணர்வில் மகிழ்ச்சி பொங்கப் பாடுகிறாள். அதிலிருந்து கோவிந்தாதான்!

 

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமேதோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! – பாடல் 27; திருப்பாவை

 

இந்தப் பாடலில் முக்கியமாக க் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அவளின் நெருக்கமானவன் வந்த உடன் அவன் கொண்டு வந்த பல அணிகலன்களைத் தருவானாம்.  புத்தாடையைத் தருவானாம்! அதை அவள் அணிந்து கொண்டு விருந்து நடக்குமாம். அதன் பின் கூடி இருந்து குளிர்வாளாம்!

 

இந்தக் காட்ச்சியை அப்படியே மனத்தில் நிறுத்துங்கள். அவள் சொல்வதை இப்பொழுது கவனிப்போம்.

 

இதுவரை, அவனைச் செற்றார் (மதிக்காதவன்), பன்மாயக் கள்வன் (திருடன்), பிரிந்து சென்றவர் (ஓடிப் போனவன்) என்றெல்லாம் கடிந்து சொல்லிக் கொண்டுவந்தவள், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கொண்கன் (நெருக்கமானவர்), கண்ணன்ன கேளிர் (கண் போன்றவர்) என்று அன்பும் நெருக்கமும் கலந்த வார்த்தைகளுக்கு மாறுகிறாள்.

 

அவளுக்குத் திருப்தி வரவில்லை. அவனை நெருக்கமாக இருக்கும் பொழுது அவள் எப்பொழுதும் “என் செல்ல ராசா” என்றழைப்பாள். அதை அப்படியே பாட்டில் சொன்னால் கேலி பேசுவார்கள் என்றெண்ணி “வேந்தன்” என்ற நகாசு பூட்டிச் சொல்கிறாள்.

 

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

மாலை அயர்கம் விருந்து. – 1268; - அவர்வயின் விதும்பல்

 

அயர்கம் = செய்வோம்;

வேந்தன் வினை கலந்து வென்று ஈக = என் செல்ல ராசா, அவரின் திறமைகளைப் பயன்படுத்தி வெற்றிக் கொடி நாட்டி எனக்காக வாங்கி வந்த ஆடைகளையும் அணிகலன்களையும் கொடுக்க; மனை கலந்து

மாலை விருந்து அயர்கம் = அவற்றையெல்லாம் நான் அணிந்து கொண்டு, மிக்க மகிழ்ச்சியுடன், எங்கள் இல்லத்தில் இருவரும் இணைந்து மாலையில் மகிழ்ச்சியானதொரு விருந்து செய்வோம்.

 

என் செல்ல ராசா, அவரின் திறமைகளைப் பயன்படுத்தி வெற்றிக் கொடி நாட்டி எனக்காக வாங்கி வந்த ஆடைகளையும் அணிகலன்களையும் கொடுக்க, அவற்றையெல்லாம் நான் அணிந்து கொண்டு, மிக்க மகிழ்ச்சியுடன், எங்கள் இல்லத்தில் இருவரும் இணைந்து மாலையில் மகிழ்ச்சியானதொரு விருந்து செய்வோம்.

 

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! …

 

ஆனால் இந்தக் குறளுக்கு அறிஞர் பெருமக்கள் பலரும் வேறு விதமாக உரை சொல்கிறார்கள்.

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page