30/10/2021 (249)
குறிப்பு அறிதல் (71) அதிகாரத்தில் உள்ள குறள்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம்.
முதல் மூன்று குறள்களில் குறிப்பு அறிதலின் சிறப்பு என்னவென்று எடுத்துக் கூறினார். குறிப்பு அறிபவன்: இந்த வையத்துக்கு அணி என்று முதல் குறளிலும் (701), தெய்வத்திற்கு சமமாகக் கொள்ள வேண்டும் என்று இரண்டாவது குறளிலும்(702), எதையும் கொடுத்து குறிப்பறிபவனைப் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மூன்றாவது குறளிலும் (703) சிறப்புகளை வகைப் படுத்தினார்.
அடுத்த இரண்டு குறள்களில், குறிப்பறியும் தன்மை இல்லாவிட்டால் அது எவ்வளவு சிறப்பாக இருக்காது என்று எடுத்து வைத்தார். பார்பதற்கு ஒன்றாக இருந்தாலும் அவர்கள் மனுசனே இல்லை என்று நான்காவது குறளிலும் (704), குறிப்பறியும் கண் இல்லை என்றால் அதானால் ஒரு பயனும் இல்லை என்று ஐந்தாவது குறளிலும் (705) இடித்துச் சொன்னார்.
அடுத்து வந்த மூன்று குறள்களில், குறிப்பு அறிதலுக்கு முகம் ஒரு கருவி என்று விளக்கினார். கடுத்தது காட்டும் முகம் என்று குறள் 706 லும், முகத்தைப் போல அறிவுள்ள கருவி கிடையாது என்று குறள் 707 லும், முகம் வழியாக அகத்தை அறிபவர்கள் தலைவர்கள் ஆகிவிட்டால் வேற எதுவுமே வேண்டாம் என்று குறள் 708 ல் கூறி முகம் ஒரு கருவி என்பதை தெளிவு படுத்தினார்.
இப்போது, அடுத்த இரண்டு குறள்களில் ‘நோக்கு’ தான் நுண்கருவி என்பதைச் சொல்லப் போகிறார். ‘நோக்கு’தலுக்கு கண் ஒரு கருவி என்பதால் கண்ணின் மேல் ஏற்றிச் சொல்லப் போகிறார்.
பகைமையும் நட்பும் கண்ணிலேயேத் தெரியும். அது யாருக்கு தெரியும் என்றால் அந்த நுட்பமான நோக்கு இருப்பவர்களுக்கு அது தெரியும். அந்த நுட்பத்தை அறிந்தவர்கள் தலைவர்களாகவும், அந்தத் தலைவர்கள், மேலும் நுட்பம் கொண்டவர்களை அருகினில் அவர்களின் துணைவர்களாகக் கொண்டால் மிகச் சிறப்பு என்றும் சொல்கிறார் குறள் 709ல்.
“பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.” --- குறள் 709; அதிகாரம் – குறிப்பு அறிதல்
கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் = நோக்கின் மூலம் எதிரில் இருப்பவர் என்ன சொல்ல வருகிறார் என்னும் நுட்பம் அறிந்தவர்களைத் தலைவர்கள் பக்கத்தில் வைத்துக் கொண்டால்; பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் = (அந்த நுட்பமான நோக்கு கொண்டவர்களுக்கு) எது பகை, எது நட்பு நோக்கின் மூலமே அறிந்து, தலைவனுக்கு உணர்த்தி விடுவார்கள்.
கண் ஆகுபெயர். நோக்கிற்கு ஆகி வந்துள்ளது.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios